
தன் வாழ்நாளில் அவ்வளவாக வெளிநாடுகளுக்குச் செல்லாதவர் முதல்வர் ஜெயலலிதா. அவர்செய்த பயணங்கள் டெல்லிக்கு மட்டுமே. அதுகூட பல முறை டெல்லிதான் அவரைத் தேடி தமிழகத்துக்கு வந்துள்ளது. அத்தனை பிரதமர்களையும், ஆளுநர்களையும், டெல்லி அதிகாரங்களையும் தமிழகத்தை அச்சத்துடன் தொலைவில் நின்று பார்க்க வைத்தவர் ஜெயலலிதா. தற்போது அனைத்தும் தலைகீழாகமாறி தமிழகம் டெல்லி மேகங்களால் சூழப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நாளில் இருந்து தமிழகத்தைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து வருகிறது பி.ஜே.பி மேலிடம். செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல்நிலை குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டநாளில் வழக்கமான மருத்துவ நடைமுறைதான் என நினைத்து இருந்தது டெல்லி வட்டாரம். பிரதாப்ரெட்டி மூலமாகத் தகவல் தெரிந்தவுடன்தான் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளனர். முதலில் தமிழக பி.ஜே.பி தலைவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி பல்ஸ் பார்த்தது டெல்லி மேலிடம். அதற்குப் பலன் எதுவும் இல்லாததால் ஆளுநரை அனுப்பியது. அடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தது என ஜெயலலிதா உடல்நிலை குறித்த முழுமையான ஸ்கேன் ரிப்போர்ட்டை கையில் வைத்து கொண்டது பி.ஜே.பி. நிலைமை மோசமாவதை உணர்த்தே சசிகலாவிடம் பேச நிர்மலா சீதாராமன் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஏன் நிர்மலாவை தேர்ந்து எடுக்கிறார்கள் என்றால் ஜெயலலிதாவை எளிதாகச் சந்திக்கும் நபர்களின் பட்டியலில் அவரும் இருந்தார். பியுஸ் கோயல், பிரகாஷ் ஜவடேகர் இருவரும் தமிழக முதலமைச்சரை சந்திப்பதில் பிரச்னை உள்ளது என்று கூறியபோது அது அவர்களின் தனிப்பட்ட அனுபவமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை முதல்வரைச் சந்திப்பதில் சிரமம் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். இதில் இருந்தே கார்டனில் நிர்மலாவுக்கு உள்ள முக்கியத்துவம் தெரியும். அதனால் தான் அவரைத் தேர்ந்தெடுத்தது பி.ஜே.பி. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு 7 முறை தமிழகம் வந்துள்ளார் நிர்மலா சீத்தாராமன். அதில் பலமுறை சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அதன் பின்புதான் ஜெயலலிதாவால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம், தேசிய அளவிலான தகுதி நுழைவுத் தேர்வு திட்டம் (நீட்), அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர வழி வகுக்கும் 4 அடுக்கு வரிமுறையான ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்களை அ.தி.மு.க ஆதரித்து கையெழுத்துப் போட்டது. இதன்பிறகு நவம்பர் 11 அன்று டில்லியில், இரு நாட்கள் நடந்த தேசியப் பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டில், தமிழக அரசு தன் முடிவுகளை, சிறிது சிறிதாகத் தேசியப் பார்வைகளுக்கு ஏற்ப மாற்றிவருகிறது. பல்வேறு முக்கிய விஷயங்களில், தமிழகம் இனி வளர்ச்சிப் பாதையில், செல்ல இம்முயற்சி உதவும் என்று நிர்மலா சீதா ராமன் கருத்துத்தெரிவித்து இருந்தார்.
சசிகலாவை வழிக்குக் கொண்டு வரும் பொறுப்பை நிர்மலா சரியாகச் செய்தாலும். கட்சியைவிட்டு வெளியேறுவதற்கு மட்டும் தொடந்து பிடி கொடுக்காமல் இருந்துள்ளார். இதற்குப் பிறகு வெங்கைய்யா நாயுடுவை களம் இறக்குகிறது பி.ஜே.பி. கடந்த 4-ம் தேதி முதல்வர் உடல்நிலை கவலைக்கிடமாகவே அசுர வேகத்தில் களம் இறங்கியது பி.ஜே.பி. சசிகலாவை, கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்குவதற்கு பி.ஜே.பி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. அதனால் எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் வரவைத்து அப்போலோ மருத்துமனையில், தனக்கு ஆதரவாக கையெழுத்துகளை வாங்கினார் சசிகலா. விஷயம் தெரிந்து அந்த ஃபைலை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு வெங்கய்ய நாயுடு, அவர் தயார் செய்து கொண்டு வந்திருந்த பைலில்... எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் கையெழுத்துப் போடவைத்து கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் சென்றார் என்கிறார்கள். அதனால் தான் அன்று 6 மணிக்கு நடைபெறவேண்டிய கூட்டம் ஒரு மணிநேரம் தாமதமாக நடந்தது. அத்துடன் அன்று இரவே அவர்களைப் பதவி ஏற்கவைத்ததுவரை எல்லாமே வெங்கய்ய நாயுடு உத்தரவின் கீழ்தான் நடந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் வந்த பிரதமர் மோடி, ஆளுநர் மற்றும் தமிழக பி.ஜே.பி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டுத்தான் வந்தார். வரும் காலங்களில் யாரிடம் பேசுவது, என்ன செய்வது என்கிற உத்தரவுகளைப் பிரதமர், அவர்களுக்கு சில குறிப்புகளைக் கொடுத்துவிட்டுத்தான் சென்று இருக்கிறார். அதன்படி, தமிழகத்தில் ஆளுநர் அனுமதி இல்லாமல் எந்த ஃபைலும் நகரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், மத்திய அரசுக்கு தமிழகத்தின் சார்பில், தம்பித்துரை மட்டுமே தொடர்பாக இருப்பார் என்று கூறப்பட்டு உள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். அப்போது, இன்னும் பல விஷயங்கள் நடக்கும். இதற்கு இடையில்தான் சசிகலா சார்பில் வேறு சிலரிடம் உதவிகள் கேட்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், போயஸ் கார்டன் இல்லத்தில் நடராஜனும் சசிகலாவும் அமைச்சர்களை சந்தித்துப் பேசி உள்ளனர். இது, டெல்லிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா குடும்பத்தைத் தங்கள் வளையத்துக்குள் கொண்டுவரவே சேகர் ரெட்டி வீடுகளிலும், அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனையை நடத்தி இருக்கின்றனர். இது, சசிகலா தரப்புக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அதேபோன்று தி மு க 9 எம் எல் ஏ களிடம் பேசி வைத்து இருந்தது. இந்த ரெய்டால் அவர்களும் பின்வாங்கிவிட்டனர். ஐ.பி கொடுத்த ரிப்போர்ட் படி சசிகலாவுக்கு 19 எம்.எல்.ஏ-களின் ஆதரவு மட்டுமே இருப்பதாகத் தெரியவந்துள்ளது. பணத்தைக் கொடுத்து எம்.எல்.ஏ-களை விலைக்கு வாங்கி விடக் கூடாது என்றுதான் சேகர் ரெட்டியை, வளைத்தது. சசிகலா மற்றும் அ.தி.மு.க முக்கியப் புள்ளிகளின் பணம் அவரிடம் இருப்பதால் அவரை வளைத்தால், பொருளாதார ரீதியாக மிகப்பெரிய இழப்பு இருக்கும் என்பதால்... முதலில் அவரை, தேர்ந்து எடுத்துள்ளனர்.
இந்த நிலையில்தான் தமிழக ஆளுநர் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார் . தமிழகத்தின் பல முக்கிய முடிவுகள் தற்போது டெல்லியில் தான் எடுக்கப்படும் என்கின்றனர். வழக்கத்துக்கு மாறாக இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ் மிக முனைப்பாக இருக்கிறது. தற்போதைய குடியரசுத் தலைவரின் பதவிகாலம் விரைவில் முடிய உள்ளது. அடுத்த ஜனாதிபதியாக ஆர்.எஸ்.எஸ். சார்ந்த ஒருவரை தேர்தெடுக்க வேண்டும் என மோடிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-கள், எம்.பி-க்கள் ஆதரவு தேவை. எனவே வரும் காலங்களில் இந்த நெருக்குதல்கள் மேலும் அதிகரிக்கும். தற்போது சேகர் ரெட்டியிடம் துவங்கியுள்ள இந்த நெருக்குதல் அடுத்து சசிகலா குடும்பத்தினரைக் குறிவைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க பொதுக் குழுவை டெல்லி மேலிடம் சொன்ன தேதியில்தான் நடத்தவேண்டும் என்றும். அவர்கள் சொல்லும் ஒருவரைத் தான் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறது பி.ஜே.பி. அதே போன்று பொதுக் குழு நடத்தப்படும் அன்றே அமைச்சரவையிலும் மாற்றம் வரப்படும் என்று தெரிகிறது. அ.தி.மு.க எம்.பி-க்கள் நான்கு பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்துக்கு இனி பிரதமரின் வருகை அடிக்கடி இருக்கும். அதேபோல் சிறப்பு நிதிகளும் வரும் காலங்களில் அதிகமாக ஒதுக்கப்படும்.
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு தற்போது முக்கியத்துவம் அள்ளிக்கப்பட்டு வருகிறது. அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வளையத்தை விட்டு சசிகலா வெளியேறினால் தீபா மூலம் அவருக்கு செக் வைக்க அவரை தற்போது கையில் எடுத்துள்ளது பி.ஜே.பி. மத்திய அரசின் இந்த நெருக்கத்தைத் தடுக்கும் ஒரு நடவடிக்கைதான் சசிகலாவை கட்சியினர் சந்தித்து தலைமை ஏற்க அழைக்க வைத்தது. செங்கோட்டையன் , தம்பிதுரை உள்ளிட்டவர்களிடம் சமாதானம் பேசப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் முழுமையாக சசிகலா சரண் அடையத் தயாராக உள்ளதாக சசிகலா தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு தொடக்கம்தான் ஜெயலலிதா எதிர்த்த பறக்கும் சாலைத் திட்டத்துக்குத் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
டெல்லியின் நெருக்குதலில் இருந்து சசிகலா தப்பித்தால் மட்டுமே தமிழக அரசியலில் அவரால் நிலைக்க முடியும்.
-பிரம்மா