Published:Updated:

‘மை பெஸ்ட் விஷஸ்... நாங்க உங்களோட இருக்கோம்!’ - ஓ.பன்னீர்செல்வத்திடம் மனம் திறந்த மோடி

‘மை பெஸ்ட் விஷஸ்... நாங்க உங்களோட இருக்கோம்!’ - ஓ.பன்னீர்செல்வத்திடம் மனம் திறந்த மோடி
‘மை பெஸ்ட் விஷஸ்... நாங்க உங்களோட இருக்கோம்!’ - ஓ.பன்னீர்செல்வத்திடம் மனம் திறந்த மோடி

‘மை பெஸ்ட் விஷஸ்... நாங்க உங்களோட இருக்கோம்!’ - ஓ.பன்னீர்செல்வத்திடம் மனம் திறந்த மோடி

ர்தா புயல் உருவாக்கிய பேரிடருக்கு இழப்பீடு கேட்டுப் பிரதமரை சந்திக்க ஓ.பி.எஸ் சென்றதை, புயல் பாதிப்பின் தொனியோடுதான் கவனித்துக் கொண்டிருந்தார்கள் தமிழக அமைச்சர்கள் சிலர். 'முதலமைச்சராக அவர் பணியைத் தொடர்ந்து செய்வதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார் பிரதமர். இந்த சந்திப்புக்குப் பிறகு உற்சாகமாகிவிட்டார் ஓ.பி.எஸ்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.  

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைக் கடந்த 12-ம் தேதி புரட்டிப் போட்டுவிட்டுச் சென்றது வர்தா புயல். 'சீரமைப்புப் பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்' என பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். நேற்று மாலை பிரதமரை நேரில் சந்தித்து, 141 பக்க கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். அதில், புயல் நிவாரணப் பணிகளுக்கு 22,573 கோடி ரூபாயை வழங்க வேண்டும்; நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு; கச்சத் தீவு மீட்பு; கூடுதல் அரிசி; ஜல்லிக்கட்டுக்கு அனுமதி உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை மையக் கோரிக்கையாக முன்வைத்திருந்தார். அதேபோல், நாடாளுமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை வைப்பது; பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றியும் பிரதமரிடம் தெரிவித்தார். 'நிச்சயம் பரிசீலிக்கிறேன்' என உறுதி அளித்தார் பிரதமர் மோடி.

"போயஸ் கார்டனில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் மோடி வந்தபோதும், இதேபோன்று கோரிக்கை மனு அளிப்பது போன்ற செய்திகள் வெளியானது. உண்மையில் அரசியல் நிலவரங்கள் தொடர்பான விவாதங்களே நடைபெறுவது வழக்கம். தற்போதும் தமிழகத்தின் தேவைகளை வலியுறுத்துவது ஒருபுறம் இருந்தாலும், அ.தி.மு.கவுக்குள் நடக்கும் உள்கட்சி விவகாரங்களையும் கவனித்து வருகிறார் பிரதமர். நேற்று முன்தினம் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, விரிவாக விவாதித்தார் ஓ.பன்னீர்செல்வம். அவர் மூலமாக சில விஷயங்களை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். நேற்று பிரதமரை சந்திக்கச் சென்றபோது மிகுந்த உற்சாகத்தில் இருந்தார் ஓ.பி.எஸ். அவரிடம் பேசிய பிரதமர், ' நான் அனைத்தையும் கவனித்துக் கொண்டு வருகிறேன். நான் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன். முதலமைச்சராக உங்கள் பணியை சிறப்பாகச் செய்யுங்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்' எனத் தெரிவித்தார். பதிலுக்கு முதலமைச்சரும் நன்றி தெரிவித்தார்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், தொடர்ந்து நம்மிடம், 

"ஆட்சி அதிகாரத்துக்குள் சசிகலா வந்துவிட்டால், ஓ.பி.எஸ்ஸின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பதைப் பற்றி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டமன்றத் தேர்தலில், 'ஓ.பி.எஸ்ஸுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்கக் கூடாது' எனப் பிடிவாதம் பிடித்தவர் சசிகலா. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா வருவதற்கு ஓ.பி.எஸ் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஆதரித்துத்தான் அறிக்கை வெளியிட்டிருந்தார். கடந்த ஓரிரு நாட்களாக, 'தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும்' என அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர். இதை எதிர்பார்த்துத்தான், ஆளுநரிடம் விவாதித்தார் ஓ.பி.எஸ். அவரும், 'நம்பிக்கை ஓட்டெடுப்புக்குச் செல்லுங்கள். அப்படிச் சென்றாலும் நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள். வேறு யாரையும் முதல்வர் பதவிக்குக் கொண்டு வர மாட்டேன்' என நம்பிக்கை அளித்தார். இதைத்தான் ஓ.பி.எஸ் தரப்பினரும் எதிர்பார்த்தார்கள்.

இப்போதுள்ள சூழலில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதை அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் விரும்ப மாட்டார்கள். ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக வாக்களித்து தோற்க வைத்தால், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது வரும். இதை அமைச்சர்கள் விரும்ப மாட்டார்கள். எனவேதான், 'சசிகலாவுக்காக ஓ.பி.எஸ் விட்டுக் கொடுப்பார்' என அமைச்சர்கள் வலிந்து பேட்டி அளித்து வருகின்றனர். ஓ.பி.எஸ்ஸின் முதலமைச்சர் பதவி என்பது ஜெயலலிதா தலைமைக்காக மக்கள் வாக்களித்தது. இதை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் நினைக்கின்றனர். தனக்கு எதிராக வரிந்து கட்டும் அமைச்சர்களையும் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மிகச் சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என்பது மட்டும்தான் அவருடைய சிந்தனையாக இருக்கிறது" என்றார் விரிவாக. 

'பொதுக்குழுவுக்குப் பிறகு, ஓ.பி.எஸ்ஸுக்கு என்ன மாதிரியான அழுத்தங்கள் கொடுக்கப்படும்' என விவாதித்து வருகின்றனர் அ.தி.மு.க அமைச்சர்கள். 

- ஆ.விஜயானந்த்

அடுத்த கட்டுரைக்கு