Published:Updated:

மனிதம் வென்ற பைக் ஆம்புலன்ஸ்! #InvincibleIndians

Vikatan Correspondent
மனிதம் வென்ற பைக் ஆம்புலன்ஸ்! #InvincibleIndians
மனிதம் வென்ற பைக் ஆம்புலன்ஸ்! #InvincibleIndians

உலகில் அங்கே, எங்கே என்று ஏதாவது ஓர் இடத்தில் உயிர்ப்போடு இருக்கும் மனிதம், எத்தனை விதங்களில் எத்தனை பேரைச் சென்று சேர்கிறது! அவசரமாக நோயாளிகளை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தேவை. இந்த ஆம்புலன்ஸ்களால் பல உயிர்கள் பிறந்துள்ளன.  இது இல்லாமல் பல உயிர்கள் இவ்வுலகை விட்டுச் சென்றும் உள்ளது. இதில் இரண்டாவது விஷயம் தன் தாய்க்கு நிகழ, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கரிமுல் ஹவுக் விதியை நொந்து அமர்ந்துவிடவில்லை. என்ன செய்திருக்கிறார் தெரியுமா?  

கரிமுல் ஹவுக். இவரது ஊர், மேற்கு வங்காளத்தில் உள்ள ஜல்பௌகுரி என்ற ஒரு பக்கா கிராமம். அங்கே இவரது அம்மாவுக்குத் திடீரென உடல் நலம் சரியில்லாமல் போகவே, மருத்துவமனையில் உடனே  அனுமதிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், கிராமத்திலோ மருத்துவ வசதிகளும் இல்லை, ஆம்புலன்ஸ் வசதிகளும் இல்லை. எவ்வளவோ முயற்சிகள் செய்தும், சரியான நேரத்துக்கு மருத்துவமனை செல்ல முடியவில்லை. அம்மா இறந்து விட்டார். அந்த சமயத்தில், அம்மா இழந்த சோகத்தையும் தாண்டி, ‘நம்மை போல இந்த ஊரில் இன்னும் எத்தனை எத்தனை பேர் இதேபோல பாதிக்கப்பட்டிருப்பார்கள்.. எத்தனை பேர் பாதிக்கப்பட போகிறார்கள். ஒரு ஆம்புலன்ஸ் இல்லாததால், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் உயிர்போவது என்பது எத்தனை பெரிய சோகம்’ என்றெல்லாம் எண்ணியிருக்கிறார். 

பைக் ஆம்புலன்ஸ்:

ந்த நிகழ்வு அவருக்குள் ஏற்படுத்திய பாதிப்பு தான், அவரை ஒரு திடமான முடிவு எடுக்க வைத்துள்ளது இன்று. இனி இவ்வூரில் வேறு எவரும் என் தாயை போல மருத்துவ வசதிகள் இன்றி உயிரை விட கூடாது என எண்ணினார். வயதால் முதிர்ந்த முதியவரோ, சின்ன குழந்தையோ, இது போன்ற வசதியின்மை இனி எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்கு தெரியவரக்கூடாது என்று நினைத்தாலும், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி யோசிக்கும் போது, ‘தான் ஒரு சாதாரண ஆள். தன்னால் எந்த வகையில் இதைச் செய்ய முடியும்’ என்பது போன்ற கேள்விகளை தனக்கு தானே கேட்டுக்கொண்டு இருந்துள்ளார். அச்சமயத்தில், உடன் இருக்கும் ஒரு தேயிலை தோட்ட தொழிலாளி உடல்நிலை சரியில்லாமல் போய் சரிந்து விழுந்துள்ளார். அந்த நேரத்தில் வேறு எதையும் யோசிக்காமல், தனது பைக்கில் அவரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளார். அதன் பின்னர் தான் தனது பைக்கை அவசர ஊர்தியாக பயன்படுத்தலாம் என்ற யோசனை உதித்துள்ளது.

அதன்பிறகு கரிமுல் வாழ்க்கையின் பலப்பல மாற்றங்கள். ஊருக்குள் யாருக்கு நோய்வப்பட்டாலும் இவரை அழைப்பார்கள். இவர் தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்று, ஒவ்வொரு முறையும் தனது கிராமத்து மக்களுக்கு உற்ற துணையாக, ஒரு நல்ல தோழனாக இருந்துள்ளார். இன்றுவரை இருந்து வருகிறார். இவர்கள் ஊரில் இருந்து வெளியே போக ஒரு ஆற்றினை கடக்க வேண்டியிருப்பதனால், அவ்வூர் மக்கள் அங்கே ஒரு ஆள் நடக்கும் அளவிலான பாலம் அமைத்துள்ளனர். பாலத்தில் காரோ அல்லது கனரக வாகனமோ ஏற கூட இயலாது என்ற நிலையில், தனது இந்த பைக் ஆம்புலன்ஸ் சேவைக்கு இது ரொம்ப பெரிய பலமாக இருக்கும் என அகமகிழ்ந்து உதவி செய்துள்ளார்.. செய்து வருகிறார்.

எத்தனை பேர் தெரியுமா?

முதலில் அவ்வூரில் இருப்பவர்கள் இதனை கிண்டல் செய்தாலும், நாளாக நாளாக ஆச்சர்யப்பட தொடங்கிவிட்டனர். ஒரு கட்டத்தில், அனைவரும் இதனை ஆமோதிக்க, இந்த பைக் ஆம்புலன்ஸ் பெயர் வாங்கிவிட்டது. தற்போது அங்குள்ள மக்கள் யாருக்காவது உதவி தேவைப்பட்டால், அடுத்த குரல் கரிமுள்ளிற்கு தான். இதுவரை இவர் எத்தனை பேரை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு அவசர உதவி செய்திருக்கிறார் தெரியுமா? 3000 பேர்!  தன் கிராமம் மட்டுமின்றி சுற்றியுள்ள 15 ஊர்களுக்கு இவரது சேவை நீண்டுள்ளது. முதியவர்கள் குழந்தைகள் என 3000 பேருக்கு மருத்துவமனை செல்ல உறுதுணையாக இருந்த இவரை ‘ஆம்புலன்ஸ் தாதா’ என்று அழைக்கின்றனர் ஊரார். இவர் கூறும்போது, “சில நேரங்களில், ஒன்றுக்கும் மேற்பட்டவட்டவர்கள் என்னிடம் உதவி கேட்பார்கள். அது போன்ற சமயங்களில் உதவி செய்ய முடியாமல் போய் விடுகிறது.... அந்த ஒரு விஷயம் தான் எனக்கு மிகவும் நெருடலாக உள்ளது” என்கிறார்.

உதவிக்கரம் நீட்டிய பஜாஜ்

இவரது இந்த சேவையைக்குறித்து அங்குள்ள ஒரு நாளிதழ் வெளியிடவே பஜாஜ் நிறுவனம் தானே முன் சென்று அவரது சேவைகள் குறித்த நிகழ்வுகளை படம் பிடித்து தங்கள் யூ-ட்யூப் சேனலில் பதிவு செய்துள்ளனர். மேலும், அவரது குறையை நிறைவு செய்வதற்காக, தங்கள் நிறுவனத்தின் சார்பில், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை ஏற்றிச் செல்ல முடிகிற வகையில் ஆம்புலன்ஸ் போல வடிவமைக்கப்பட்ட ஒரு V15 டிசைனர் பைக்கை பரிசாக வழங்கியுள்ளது. பைக்கில் ஆம்புலன்ஸ் என எழுதி, கீழே அவரது மொபைல் நம்பரும் எழுதப்பட்டுள்ளது. பைக்கை பார்த்த கரிமுல், கண்கள் விரிய ஆச்சர்யத்தில் வாயடைத்து சில நொடிகளிலேயே கண்ணீர் விட்டுவிட்டார். பின்னர் அமைதியாகி, “என்னுடைய அம்மாவே திரும்பி வந்தது போல இருக்கிறது எனக்கு......இனி எனக்கு எந்த கவலையும் இல்லை. எத்தனை பேர் வந்தாலும், ஏற்றிக்கொண்டு செல்வேன்.... எனது சேவைகள் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.

இவரது சேவையைப் பற்றி மருத்துவர் ஒருவர் கூறும்போது, “இவ்வூர் மக்களுக்கு கரிமுல் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இவரைப் பார்த்து வளரும் தலைமுறையினர் நிறைய கற்றுக்கொள்வார்கள்” என்கிறார். அங்குள்ள மக்களோ, “ஆபத்தில் இருக்கும் எங்களுக்கு இவர் உதவும் போது, எங்கள் கண்ணிற்கு கடவுள் போல தெரிகிறார் இவர்" எனக் கூற, “கடவுள் வேறு. நான் வெறும் மனிதன்தான்” என்கிறார் கரிமுல் அடக்கமாக.

இவரைப் போன்றவர்கள் இருக்கும்போது எல்லா நாளுமே மனிதாபிமானத்திற்கான நாள்தான்!

வீடியோவைக் காண:-

- ஜெ.நிவேதா
மாணவப் பத்திரிகையாளர்.