Published:Updated:

தடைகளைத் தாண்டி ஹரித்துவாரில் திறக்கப்பட்டது திருவள்ளுவர் சிலை...

Vikatan Correspondent
தடைகளைத் தாண்டி ஹரித்துவாரில் திறக்கப்பட்டது திருவள்ளுவர் சிலை...
தடைகளைத் தாண்டி ஹரித்துவாரில் திறக்கப்பட்டது திருவள்ளுவர் சிலை...

மிழ்சங்கங்களின் ஆறுமாத முயற்சிக்குப் பின்னர் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அமைக்க  பி.ஜே.பி மாநிலங்களவை முன்னாள் எம்.பி தருண் விஜய் முயற்சிகள் மேற்கொண்டார். இதற்காக தமிழகத்தில் இருந்து  சிலை வடிவமைக்கப்பட்டு ஹரித்துவார் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

ஹரித்துவாரில் கங்கை நதிக் கரையில் உள்ள மேளா பவனில் கடந்த ஜூன் மாதம்  சிலையை அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதற்கான விழாவும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது விழாவுக்கு முதல் நாள் இரவு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், சிலை அமைப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் திருவள்ளுவர் சிலை பராமரிப்பின்றி கீழே கிடத்தப்பட்டு மூடி வைக்கப்பட்டது. கங்கை நதிக் கரையில் நிறுவக் கொண்டு செல்லப்பட்ட சிலை அனாதையாகக் கிடந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவள்ளுவர் அவமானப்படுத்தப்பட்டதாக தமிழ் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சார்பில் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், "சிலையை உரிய இடத்தில் உரிய மரியாதையுடன் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது. தி.மு.க தலைவர் கருணாநிதி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் சிலையை உரிய இடத்தில் நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக டெல்லி, உத்தரகாண்ட் மாநிலங்களில் தமிழ் சங்கங்களின் சார்பில் அதன் நிர்வாகிகள் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்தை அடிக்கடி நேரில் சந்தித்து திருவள்ளுவர் சிலையை அமைக்க வலியுறுத்தினர்.  இதையடுத்து ஹரித்துவாரில் மேளாபவனில் உள்ள பூங்காவில்  பீடம் அமைக்கப்பட்டு, அதில் சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெற்ற விழாவில் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்.

இது குறித்து உத்தரகாண்ட் தமிழ் சங்கத்தின் பொருளாளர் ஜோசப்பிடம் பேசினோம். "டிசம்பர் 23-ம் தேதி சிலை திறக்கப்படும் என்று உத்தரகாண்ட் அரசு சார்பில் முதலில் எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும் என்பதால் அதற்கு முன்பாக சிலைத் திறக்கப்பட வேண்டும் என்று கூறினார். எனவே கடந்த 19-ம் தேதி விழா நடைபெற்றது.

திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்ட இடம் திருவள்ளுவர் பூங்கா என்று அழைக்கப்படும் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். திருவள்ளுவர் பூங்காவுக்காக உத்தரகாண்ட் அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.  திருவள்ளுவர் தினத்தன்று உத்தரகாண்ட் அரசு சார்பில் விழா நடத்தப்படும் என்றும் சொல்லி இருக்கிறார். அதே போல திருக்குறளை இந்தி மொழியில் மொழி பெயர்த்து உத்தரகாண்ட்டில் உள்ள நூலகங்களில் வைக்க உத்தரவிட்டிருப்பதாகவும் கூறினார்.

இதற்கு உத்தரகாண்ட் வளர்ச்சித்துறை செயலாளர் மீனாட்சி சுந்தரம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிலை அமைக்க முடியாமல் பிரச்னையாக இருந்தபோது பல்வேறு தமிழ் சங்கங்களின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும் என்பதால் அவசர, அவசரமாக சிலை திறக்கப்பட்டிருக்கிறது. எனவே, பெரும்பாலான தமிழர்கள் விழாவில் பங்கேற்க முடியவில்லை. அடுத்தமாதம் திருவள்ளுவர் தினத்தன்று தமிழகத்தில் இருந்து தமிழ் அறிஞர்களை அழைத்து வந்து  விழா நடத்த உள்ளோம்" என்றார்.  

- கே.பாலசுப்பிரமணி