Published:Updated:

உளவுத்துறையிடம் அறிக்கை கேட்ட சசிகலா!  -டிசம்பர் 29-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு?

Vikatan Correspondent
உளவுத்துறையிடம் அறிக்கை கேட்ட சசிகலா!  -டிசம்பர் 29-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு?
உளவுத்துறையிடம் அறிக்கை கேட்ட சசிகலா!  -டிசம்பர் 29-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு?

.தி.மு.க பொதுக்குழுவை வருகிற 29-ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ளனர் கார்டன் வட்டாரத்தில். ' மக்கள் மத்தியில் சசிகலாவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்பது பற்றிய உளவுத்துறை அறிக்கையும் அவரிடம் அளிக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அ.தி.மு.க சீனியர்கள். தம்பிதுரை, செங்கோட்டையன், மதுசூதனன் உள்பட கட்சியின் சீனியர்கள் அனைவரும் ஒரே குரலில் சசிகலா தலைமையை முன்னிறுத்தியுள்ளனர். நேற்று அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டவர்கள், ' தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்க வேண்டும்' எனப் பேசி வந்தனர். " மன்னார்குடி உறவுகளின் அழுத்தம் காரணமாகவே, அமைச்சர்கள் இவ்வாறு பேசி வந்தனர். தற்போது முதலமைச்சர் பதவிக்கு தன் பெயர் முன்னிறுத்தப்படுவதை சசிகலா விரும்பவில்லை. கட்சிப் பதவிக்கு வந்த பிறகு, 'ஆறு மாதங்கள் போகட்டும்' என நினைக்கிறார். ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து, 'தன் மீதான மக்கள் பார்வை எப்படி இருக்கிறது' என்பது பற்றி, உளவுத்துறையிடம் அறிக்கை கேட்டிருந்தார். அவர்கள் கொடுத்த அறிக்கையில், ' கட்சிக்குள் எந்தவித எதிர்ப்பும் இல்லை. மக்கள் மத்தியில் அதிருப்தி அலை வீசுகிறது' எனத் தெரிவித்திருந்தனர். இந்தப் பதிலை சசிகலாவும் எதிர்பார்த்திருந்தார். எனவே, ஒவ்வொரு அடியையும் நிறுத்தி நிதானமாகவே வைக்கிறார்" என விவரித்த தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், 

" சசிகலாவை முன்னிறுத்தி அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கள் எல்லாம், அவர்களின் சொந்தக் கருத்தாகவே பார்க்கிறார். ' இனி அவ்வாறு பேச வேண்டாம்' எனவும் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதா இறப்பைத் தொடர்ந்து, ' எம்.ஜி.ஆர் காலத்து விசுவாசிகளான அரங்கநாயகம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு காட்டுவார்கள்' என நினைத்திருந்தார். நேற்று கார்டனுக்குச் சென்று சசிகலாவை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார் கு.ப.கிருஷ்ணன். ஜெயலலிதாவின் விசுவாசிகள் எனக் குறிப்பிடப்பட்டு கட்டம் கட்டப்பட்ட சீனியர்கள் எல்லாம், சசிகலா பின்னால் அணிவகுக்கத் தொடங்கிவிட்டனர். ' இந்த வாய்ப்பை விட்டால் வேறு வழியில்லை' என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஏனென்றால், கார்டன் வட்டாரத்தில் இருந்து சசிகலாவால் ஓரம்கட்டப்பட்ட பல சீனியர்கள், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். ' தற்போதுள்ள சூழலில் சசிகலாவை ஆதரிப்பதே லாபம்' என எண்ணுகின்றனர். அதேநேரம், தஞ்சாவூரில் வைத்திலிங்கத்தை கட்டம் கட்டி வைத்திருக்கிறது மன்னார்குடி தரப்பு. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவருக்குக் கொடுத்தார் ஜெயலலிதா. இதை மன்னார்குடி உறவுகள் ரசிக்கவில்லை. தற்போது நடந்து முடிந்த தஞ்சாவூர் தேர்தலில் வைத்தி சரியாக வேலை பார்க்கவில்லை. மன்னார்குடி உறவுகள் எச்சரித்த பிறகே, தேர்தல் வேலை பார்த்தார். ' ஜெயலலிதா இருந்தபோது ரொம்பவே ஆடிவிட்டார்' என்ற கோபத்தில், அவரை ஒதுக்கியே வைத்துள்ளனர். ஏறக்குறைய அனைத்து சீனியர்களும், 'பொதுச் செயலாளர் சசிகலா' என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்" என்றார் விரிவாக. 

" பொதுக்குழுவை டிசம்பருக்குள் நடத்தி முடித்துவிடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர் நினைவுநாளுக்குப் பிறகு, பொதுக்குழுவுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. தொடக்கத்தில், கொடநாட்டில் பொதுக்குழுவை  நடத்தும் முடிவில் இருந்தனர். இப்போதுள்ள சூழலில் கொடநாட்டுக்கு பொதுக்குழு உறுப்பினர்களை வரவழைத்தால், 'பயந்து போய் கூட்டத்தை நடத்துகிறார்கள்' எனப் பிரசாரம் செய்வார்கள். எனவே, 'சென்னை அல்லது மதுரையில் கூட்டத்தை நடத்துவோம்' என சின்னம்மாவிடம் ஆலோசித்துள்ளனர் சீனியர்கள். இறுதியாக, 'எப்போதும் போல சென்னை, வானகரத்திலேயே நடத்தலாம்' என ஒப்புதல் கொடுத்திருக்கிறார். வரும் 29-ம் தேதி பொதுக்குழுவுக்கான தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் ஓ.பி.எஸ் இருந்தாலும், கட்சி நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட வேண்டும். மக்கள் மத்தியில் நிலைமை சீரான பிறகு, அதிகாரத்துக்குள் சசிகலா வருவார்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

ஒவ்வொரு காலகட்டத்திலும், ஆட்சி குறித்த மக்களின் மனநிலையை அறிவதற்காக சர்வே எடுக்க உத்தரவிடுவார் ஜெயலலிதா. அதே பாணியில், உளவுத்துறை மூலம் மக்களின் மனநிலையைக் கணிக்கிறார் சசிகலா. ' முதல்வர் சசிகலா' என்ற 
முழக்கங்களும் இன்னும் ஓயவில்லை. 

- ஆ.விஜயானந்த்