Published:Updated:

பெண் வாழ்வதைக் கூட 'சாதி' தான் தீர்மானிக்கிறது... உறைய வைக்கும் இன்னொரு ஆணவக்கொலை !

பெண் வாழ்வதைக் கூட 'சாதி' தான் தீர்மானிக்கிறது... உறைய வைக்கும் இன்னொரு ஆணவக்கொலை !
பெண் வாழ்வதைக் கூட 'சாதி' தான் தீர்மானிக்கிறது... உறைய வைக்கும் இன்னொரு ஆணவக்கொலை !

பெண் வாழ்வதைக் கூட 'சாதி' தான் தீர்மானிக்கிறது... உறைய வைக்கும் இன்னொரு ஆணவக்கொலை !

காதலை போற்றிய, காதலை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சமூகம் நம் தமிழ் சமூகம். ஆனால் அதுவெல்லாம் சங்க காலத்தோடு சரி. இப்போது அதற்கு நேரெதிரான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கல்வி அறிவு பெற்றுவிட்டோம், நாகரீகமடைந்து விட்டோம் என நாம் பெருமையாகச் சொல்லிக்கொண்டாலும், சாதி சார்ந்த மனோபாவத்தில் இன்னும் நாம் மேம்பட்டதாய் தெரியவில்லை. சாதி மாறி காதலித்தால்... அதுவும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆணை காதலித்தால், அந்த பெண்ணை கொலை செய்து விடுவது என்பதே நமக்கான கவுரவமாய் இருக்கிறது.  அந்த வரிசையில் இன்னுமொரு ஆணவக்கொலை நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

'சாதி மாறி திருமணம் செய்யவில்லை. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவருடன் பழகினார். சுய சாதியைச் சேர்ந்த உறவினரை திருமணம் செய்ய மறுத்தார் என்பதால்  16 வயதே ஆன பள்ளி மாணவியை அடித்து கொலை செய்திருக்கிறார்கள் அவரது தந்தையும், உடன்பிறந்த அண்ணனும்.

நாமக்கல் மாவட்டம், வாழவந்தி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு சுபாஷ்  சந்துரு என்ற மகனும், ஐஸ்வர்யா, அபிநயா என்ற இரு மகள்களும் இருந்தனர்.

சுபாஷ் சந்துரு தொட்டியம் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். ஐஸ்வர்யா தனியார் பள்ளியில் 11ம் வகுப்பும், அபிநயா 10ம் வகுப்பும் படித்து வந்தார்கள். ஐஸ்வர்யா அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இதையடுத்து திருச்சியில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டார் ஐஸ்வர்யா. அப்போதும் அவர்களுக்கிடையே பழக்கம் தொடர்ந்ததாக தெரிகிறது.

இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி ஐஸ்வர்யாவின் அத்தை மகனான தங்கராஜ் என்பவருக்கு ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.  இதற்கு ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய முயற்சித்ததால், ஐஸ்வர்யா இது தொடர்பாக சைல்டு லைன் அமைப்பில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து ஐஸ்வர்யாவை மீட்ட சைல்ட் லைன் அமைப்பினர், காப்பகத்துக்கு அழைத்து சென்றனர். 'தன் மகளை படிக்க வைப்போம். திருமணம் செய்து தர மாட்டோம்' என உறுதி கூறி மகளை அழைத்துச் சென்றார்கள். மீண்டும் ஐஸ்வர்யாவின் மனதை மாற்ற முயற்சி செய்து, அவருக்கு சுய சாதியில் திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த அவரது தந்தை தங்கராஜ், "எங்க மேலயே புகார் கொடுக்கிறயா? நாங்க சொல்றதை கேக்க மாட்டியா?" எனச்சொல்லி அடித்துள்ளனர்.

ஐஸ்வர்யாவின் அண்ணன் சுபாஷ் சந்துரு, ஐஸ்வர்யாவின் சுடிதார் துப்பட்டாவை எடுத்து ஐஸ்வர்யாவின் கழுத்தில் சுற்றி முறுக்கி இழுக்க பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஐஸ்வர்யா.  அன்று இரவே உறவினர்கள் சேர்ந்து ஐஸ்வர்யாவின் உடலை எரித்து விட்டார்கள்.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்க, விசாரணை நடத்தி ஐஸ்வர்யாவின் தந்தை தங்கராஜ், அண்ணன் சுபாஷ் சந்துரு ஆகிய இருவரை கைது செய்தனர். இது தொடர்பாக ஐஸ்வர்யாவின் தாத்தாவிடம் கேட்டப்போது, ‘‘என்னோட பேத்தி தான் ஐஸ்வர்யா, என்ன நடந்துச்சுன்னு சரியா எனக்கு தெரியல. யாரையோ கீழ் சாதி பையனை விரும்பியதாக சொல்றாங்க. அதனால புதன் சந்தையில் உள்ள என் மகள் வீட்டு பையனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுடலாம்னு நினைச்சுகிட்டிருந்தோம். நாங்க வேறு சாதியில் திருமணம் செஞ்சா செத்து போனவங்களை போல நினைச்சு அவுங்களுக்கு நடுகல் நட்டு வச்சுட்டு ஊரை விட்டு துரத்தி விட்டுடுவோம். நல்லது, கெட்டதுன்னு எதுக்கும் வர முடியாது. அதுக்கு பயந்துட்டு தான் இப்படி ஒரு விபரீதம் நடந்து போச்சுங்க’’ என்றார்.

பெண் யாரை திருமணம் செய்ய வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் குடும்பமும் சமூகமுமே முடிவு செய்கிறது. மீறினால் அந்த பெண் உயிரோடு இருக்க முடியாது என்பதைத் தான் இது போன்ற சம்பவங்கள் மூலம் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டு வருகிறது நம் சமூகம்.

எதை நோக்கி பயணிக்கிறோம் நாம்?

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.தனசேகரன்

அடுத்த கட்டுரைக்கு