Published:Updated:

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி!

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி!
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி!

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி!

திமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்கவேண்டும் என்று அக்கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் போஸ்டர்கள்,பத்திரிகை விளம்பரங்கள்,பேனர்கள் என்று அதகளப்படுத்திவருகிறார்கள். அமைச்சர்கள் முதல் கடைநிலை தொண்டர் வரையில் அதிமுகவில் இதுதான் இப்போதைய முக்கிய விவாதப் பொருள்.  

இந்நிலையில் அதிமுகவின் சில முன்னாள் அமைச்சர்கள்,முன்னாள் எம்.பிக்கள்,முன்னாள்  எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவுக்கு எதிர்ப்புக் காட்டுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தினமும் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் ஏராளமானோர் திரண்டு சசிகலாவை பொதுச் செயலாளர் பதவி ஏற்க வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று (செவ்வாய்) காலை போயஸ் கார்டன் வந்திருந்தார்.சில நிமிடங்களே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லத்தின் உள்ளே இருந்த முனுசாமி சசிகலாவைச் சந்தித்துள்ளார். சந்திப்பின் போது அவருடன்,கிருஷ்ணகிரி எம்.பி.அசோக்குமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எம்.எல்.ஏக்கள் இருவரும் இருந்துள்ளனர்.அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க தமது ஆதரவை கே.பி.முனுசாமி அவரிடம் வழங்கியதாகவும், அதற்கு சசிகலா நன்றி தெரிவித்தார் என்றும் தெரிகிறது.இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்த முழுமையான தகவல்கள் நமக்கு கிடைக்கவில்லை. 

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியைத் தொடர்புகொண்டு,சசிகலாவுடன் நடந்த சந்திப்புக் குறித்தும்,அவர் பொதுச் செயலாளர் பதவிக்கு வருவதில் உங்களின் நிலைப்பாடு என்ன என்றும் கேட்டோம். அதற்குப் பதிலளித்த முனுசாமி,"நான் அடிப்படையில் அதிமுக இயக்கத்தைச் சார்ந்தவன். கட்சிக்காரனிடமே கேள்விகள் கேட்டால் நான் எப்படி?"என்றார் சுருக்கமாக.

என்னதான் நடக்கிறது கார்டனில் 

சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஏற்றவர் என்றும் அவர் அதற்குத் தகுதியானவர் இல்லை என்றும் அதிமுகவில் இரண்டு பிரிவாகக் கருத்துகள் பரவியுள்ளன. நாள்தோறும் பல்வேறு இடங்களில் சசிகலாவை பொதுச் செயலாளராக பதவி ஏற்க ஆதரவு தெரிவித்து குரல்கள் வலுவாக எழுந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் கார்டன் வருகை அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் கார்டனில் என்னதான் நடக்கிறது என்று அதிமுகவின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் விசாரித்தோம்.அவர் கூறுகையில்,"போயஸ் கார்டன் இல்லத்தில்தான் சசிகலா இருக்கிறார்.அங்குதான் அரசியல் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடக்கின்றன. அதோடு தனது உறவினர்களுக்கு சசிகலா ஒரு ரகசிய உத்தரவு வழங்கியுள்ளார்.'யாரும் கார்டன் பக்கம் வரவேண்டாம், தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் சென்று கட்சியின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தியுங்கள்' என்பதே அந்த உத்தரவு.இதனால் திவாகரன், தினகரன், ராவணன், பாஸ்கரன் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் அதிமுகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் தனித்தனியே சந்தித்துப் பேசி வருகின்றனர். அதன் வெளிப்பாடே இன்று முன்னாள் அமைச்சர் முனுசாமி வந்து போனது.

ஆனால் இவருக்கும் மன்னார்குடி தரப்பினருக்கும் எப்போதும்  ஏழாம் பொருத்தமே. ஆனாலும் அவர் நீண்டகாலம் அதிமுகவில் விசுவாசியாக இருப்பதால் சசிகலாவுக்குத் தான் ஆதரவு அளிப்பார்.இன்னும் சசிகலா மீது அதிருப்தியில் உள்ளவர்களையும் கார்டன் அழைத்துவரும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எதிர்ப்பே இல்லை என்ற நிலையிலேயே அவர் செயற்குழு பொதுக்குழு நடக்க ஒப்புக்கொள்வார்.

அநேகமாக வரும் வாரத்தில் சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கட்சியின் செயற்குழு பொதுக்குழு நடக்கும். அதற்கான ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன. 2000திற்கும் மேற்பட்டவர்கள் செயற்குழு பொதுக்குழுவில் கலந்துகொள்வார்கள் என்பதால் யாரையும் விட்டுவிடக் கூடாது என்பதில் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் கவனமாக இருக்கிறார்கள்." என்றார் விளக்கமாக.

 - சி.தேவராஜன் 

அடுத்த கட்டுரைக்கு