பிரீமியம் ஸ்டோரி
கேபிள் யுத்தம்!
கேபிள் யுத்தம்!
கேபிள் யுத்தம்!
கேபிள் யுத்தம்!
 
கேபிள் யுத்தம்!

தே ர்தல் நெருங்க நெருங்க, அனல் பறக்கிறது தமிழக அரசியலில்!

‘ஆளுங்கட்சியின் அதிகார மையத்துக்கு நெருக்கமானவர்கள் தொடர்புடைய சாராயத் தொழிற்சாலை’ என்ற சர்ச்சையில்

கேபிள் யுத்தம்!

சிக்கிய மிடாஸ் நிறுவனத்துக்குள், மத்திய வருமான வரித் துறை அதிகாரிகள் புகுந்து ரெய்டு நடத்த... கை கொட்டிச் சிரித்தது தி.மு.க!

கரகோஷம் அடங்குவதற்குள் சட்டசபையில் புயல் கிளப்பினார் ஜெயலலிதா. ‘கேபிள் டி.வி. நிறுவனங்களை இனி தமிழக அரசே ஏற்று நடத்தும்’ என்ற அறிவிப்புக்கு, ஒரு பக்கம் மக்களிடையே ஆரவார வரவேற்பு. இன்னொரு தரப்பிலோ, இது சன் நெட்வொர்க்கின் ‘சுமங்கலி கேபிள் விஷனை’ மட்டுமே குறிவைக்கும் அரசியல் தாக்குதல் என்ற குமுறல்.

‘இனி இடையூறு இல்லாமல், எல்லா சேனல்களையும் பார்க்கலாம். குறைந்தபட்சக் கட்டணமே வசூலிக்கப்படும்’ எனத் திருவிழா கொண்டாடுகிறது ஆளுங்கட்சி.

‘‘ஒயின் ஷாப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்டதை வைத்து யாரெல் லாம் சாராயத் தயாரிப்பில் இறங்கி லாபம் கொழிக்கிறார்களோ... மணல் அள்ளுவதைப் பொதுவுடைமையாக்கியதை வைத்து யாரெல்லாம் கொள்ளை லாபம் பார்க்கிறார்களோ... அவர்களேதான் இப்போது கேபிள் டி.வி. நிறுவனங்களை அரசுடைமையாக்குவதிலும் லாபம் அடையப்போகிறார்கள்’’ என்பதுதான் ஜெ. முடிவை எதிர்ப்பவர்களின் முக்கிய குமுறல்.

‘‘ஒரு பக்கம் மத்திய அரசு, இன்னொரு பக்கம் மாநில அரசு என இரண்டு யானைகளின் காலடியில் சிக்கிய எறும்புகளைப் போல நாங்கள் தவிக்கி றோம். எங்கள் எதிர்காலத்தை நினைத் தால் பயமாக இருக்கிறது’’ என்கிறார்கள் கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்சியாக.

கேபிள் யுத்தம்!

‘‘பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதால், பல அரசு நிறுவனங்களைத் தனியார்மய மாக்கும் நேரம் இது. மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்களையும் தனியார்மயமாக்குவது பற்றி அரசுகள் சிந்தித்துக்கொண்டிருக்கிற நேரத்தில், தனியார் வசம் இருக்கும் கேபிள் டி.வி. நிறுவனங்களை அரசே ஏற்று நடத்தும் என்பது இரட்டை வேடம்!

கேபிள் ஒளிபரப்பு என்பது அரசியல் பலம் மிக்க தனியார் வசம் இருக்கும் போது அவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாத நிலைதான். மக்கள் விரும்பிக் கேட்கிற சேனல்களை எங்களால் ஒளிபரப்ப முடியாத நிலை. அதேசமயம், இப்போது மாநில அரசு இந்த கேபிள் டி.வி. நிறுவனங்களைக் கையில் எடுப்பதால் மட்டும் பிரச்னைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. ஆளும் அரசு நினைத்தாலும், தனக்குரிய அரசியல் காழ்ப்பு உணர்ச்சியுடன் தனக் கெதிரான சேனல்களை இருட்டடிப்பு செய்ய முடியும். இனி, அரசுத் தரப்பில் கேபிள் ஆபரேட்டர்களை நியமிக்க கான்ட்ராக்ட் விடும்போது, ஆளுங் கட்சியினரின் ஆதிக்கம்தான் ஓங்கி இருக்கும். கேபிள் தொழிலை நம்பி, லட்சக்கணக்கில் முதல் போட்டுத் தவிக்கும் எங்களைப் போன்ற சிறு ஆபரேட்டர்களும், இதையே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழி லாளர்களும் நடுரோட்டுக்கு வந்து விடுவோம். எங்களை அகற்றிவிட்டு, ஆளுங்கட்சிக்காரர்கள் இந்தத் தொழிலுக்குள் புகுந்துவிடுவார்கள். யாரை நம்பி, எந்தப் பக்கம் நிற்பது என்று புரியாமல், திசை தடுமாறி நிற்கிறோம்!’’ என்று புலம்பித் தீர்க்கிறார்கள்.

நாட்டு நடப்புகளைக் கூர்ந்து கவனித்து விமர்சனங்கள் செய்யும் பத்திரிகையாளர் சோ என்ன சொல்கிறார்?

‘‘இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். சொல்லப்போனால், இது காலம் தாழ்ந்து எடுக்கப்பட்ட முடிவு. தாமதமானாலும் துணிச்சலாக எடுக்கப்பட்ட முடிவு. தமிழக அரசின் இந்த முடிவில், அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று சொல்கிறார் கள். சரி, தமிழ்நாட்டில் எந்த நிகழ்வில்தான் அரசியல் இல்லை?’’ என்று கேட்கும் சோ,

கேபிள் யுத்தம்!

‘‘சுமங்கலி கேபிள் விஷன், அந்தத் துறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏகபோக உரிமையை இவ்வளவு நாளும் அனுபவித்து வந்துள்ளது. தங்கள் தொலைக்காட்சியின் வளர்ச்சிக்காக, மற்ற சேனல் களைச் சாமர்த்தியமாக நசுக்க வும் அது தயங்கியதில்லை. தேர்தல் நேரத்தில் அரசு தரப்புச் செய்திகள் மக்களைச் சென்று சேராமல் தடுக்க, சுமங்கலி கேபிள் விஷனால் முடியும். அந்த அச்சத்தின் காரணமாகக்கூட தமிழக அரசு இப்படி ஒரு திடீர் முடிவு எடுத்திருக்கலாம். அந்த அச்சம் நியாயமானது.

அரசுக்குச் சொந்தமான பேருந்து மற்றும் ரயில்களில் செய்தித்தாள்களைச் சுமந்து போய்ச் சேர்க்கிற மாதிரிதான் கேபிள் நிறுவனங்களை அரசு கையகப்படுத்துவதும். கேபிளானது அரசு வாகனத்தில் போனால், ஜனநாயகத் தன்மையோடு எல்லாத் தரப்பு செய்திகளும் பயணம் செய்ய முடியும். ஏக போக உரிமை இருக்காது. குறைந்த விலையில் மக்களுக்கு எல்லா சேனல்களும் கிடைக்கும்.

முன்பே அரசு, ஒரு தன்னாட்சி அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் ஒரு கேபிள் டி.வி. நெட்வொர்க் தொடங்கி இருந்தால், இப்போது எழுப்பப்படுகிற சட்ட ரீதியான கேள்விகளுக்கு இடம் இருந்திருக்காது.

கேபிள் யுத்தம்!

ஒருவேளை, அரசாங்கம் சுமங்கலி கேபிள்விஷன் போலவே தனக்கு விருப்பமான சேனல்களை மட்டும் காட்டிவிட்டு, தனக்கு எதிரான சேனல்கள் மக்களுக்குப் போய்ச் சேராதபடி தடுத்தால், அது கருத்து சுதந்திரத்தைப் பாதிக்கும். அது அ.தி.மு.க-வுக்கு எதிராகவே திரும்பும்'' என்கிறார் சோ!

கேபிள் டி.வி-யை அரசு கையகப்படுத்த வேண்டும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர் நடிகர் எஸ்.வி.சேகர்.

அவர் நம்மிடம், ‘‘காலையில் சட்டசபை அறிவிப்பு வந்ததுமே, கருணாநிதி ஓடோடிப் போய் கவர்னரைப் பார்த்தது ஏன் என்று கேட்டால், வேறு விஷய மாகப் போனதாகச் சொல்கிறார்.

‘சன்’னுக்காகவும், ‘சன் டி.வி’-க்காகவும் அவர் எந்தளவுக்குப் பதறுவார் என்பது இந்த விஷயத்தில் அவர் விடும் அறிக்கைகளில் இருந்தே தெரிகிறது.

ஒயின் ஷாப்களை அரசு கையில் எடுத்த பிறகுதான் அதில் இருந்த கட்டப் பஞ்சாயத்துகள், அரசியல் தலையீடுகள், ஒழுங்கீனங்கள் எல்லாம் களையப்பட்டன. அரசுக்கும் பல நூறு கோடி ரூபாய் லாபம் கிடைத்துவருகிறது. ஒயின் ஷாப் ரவுடி தர்பாரை அழித்த அம்மா, மணல் கொள்ளை மாஃபியாக்களை ஒடுக்கிய அம்மா, இப்போது கேபிள் டிவி. க்ரைம்களுக்கும் முடிவு கட்டு வார்!’’ என்கிறார் எஸ்.வி.சேகர்.

சுமங்கலி கேபிள் விஷன் தரப்பில் விசாரித்தால், ‘‘குறிப்பிட்ட சில கேபிள் நிறுவனங்களை மட்டும் கையகப்படுத்துகிற அரசு, அ.தி.மு.க-வைச் சேர்ந்த திருப்பூர் எம்.எல்.ஏ. சிவசாமியின் நிறுவனத்தையும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் நிறுவனங்களையும் கையகப்படுத்த முதலில் மசோதா கொண்டுவரவில்லை. கேள்விகள் கடுமையாக எழுந்த பிறகு சுதாரித்துக் கொண்டு, 'இன்னும் சில கேபிள் கம்பெனிகளும் இந்தப் பட்டியலில் வரும்' என்று சமாளித்தார். தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க-வினருக்குத் தேவையான பொருளாதார ஊழலுக்கு கேபிள் தொழிலைப் பலியாக்குகிறார் ஜெயலலிதா. இதனால் பாதிப்படையப்போவது பொதுமக்கள்தான்’’ என்று பதில் வருகிறது.

கேபிள் யுத்தம்!

‘‘பெரிய கேபிள் நிறுவனங்களை ஒழித்துவிட்டு, கேபிள் ஆபரேட்டர்களை மூன்றில் இரண்டு பங்கு லாபத்தை எடுத்துக்கொள்ளச் சொல்கிறது அரசு. இது அங்கீகாரம் இல்லாத தாதாக்களை ஒழித்துவிட்டு, அரசு முத்திரை உள்ள தாதாக்களை உருவாக்குவது போல் இருக்கிறது. இந்த விஷயத்தில் அரசுக்கு இன்னும் போதிய தெளிவு இல்லை. முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அரசாங்கம் அதற்குரிய நிபுணர்களை ஆலோசிக்காமல் இருந்தால் இப்படித் தான். அரசு ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுத்தால், ஏற்கெனவே அதே தொழிலில் இருக்கும் தனியாரை நசுக்கிவிட்டோ, அல்லது முழுமையாகத் தனியாரை அந்தத் தொழிலில் இருந்து விரட்டிவிட்டோ தொழில் செய்ய முயற்சிக்கக் கூடாது.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஏற்கெனவே களத்தில் இருக்கும் செல்போன் தனியார் நிறுவனங்களோடு சர்வீஸில் போட்டி போட்டு வியாபாரம் செய்து வருகிறது. இங்கேகூட, 'ஆவின்' நிறுவனம் தனியார் பால் நிறுவனங்களோடு போட்டி போட்டுத்தான் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. 'எல்லா பால் கம்பெனிகளையும் அரசே ஏற்று நடத்தும்' என்று சொன்னால் எப்படி அது கேலிக்கூத்தோ... அதுபோலத்தான் கேபிள் அரசுடைமை முடிவும்கூட! சக்தியையும் புத்தியையும் செலவிட்டு, கோடிக்கணக்கில் முதலீடு போட்டு, வியர்வை சிந்தி வளர்த்த நிறுவனங்களைச் சட்டம்போட்டு விழுங்கப் பார்ப்பது அராஜகம். இந்த முன்னுதாரணத்தை நாளை வரும் அரசுகள் கையில் எடுக்க ஆரம்பித்தால், தமிழ்நாட்டில் யாருமே நிம்மதியாகத் தொழில் செய்ய முடியாது!’’ என்று எச்சரிக்கிறார், இந்த விவகாரத்தைக் கூர்ந்து நோக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி.

அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?

 
கேபிள் யுத்தம்!
-த.செ. ஞானவேல்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு