Published:Updated:

‘ஜெயலலிதா வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா ஓ.பி.எஸ்!?’ - இறுதிக் கெடுவில் ஹார்வர்டு தமிழ் இருக்கை

‘ஜெயலலிதா வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா ஓ.பி.எஸ்!?’ - இறுதிக் கெடுவில் ஹார்வர்டு தமிழ் இருக்கை
‘ஜெயலலிதா வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா ஓ.பி.எஸ்!?’ - இறுதிக் கெடுவில் ஹார்வர்டு தமிழ் இருக்கை

புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக போராடி வருகின்றனர் வெளிநாடுவாழ் தமிழர்கள். "இந்திய ரூபாய் மதிப்பில் 28 கோடி ரூபாய் வரையில் தேவைப்படுகிறது. தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிறைவேற்ற வேண்டும்' எனக் கோரிக்கை வைக்கின்றனர் உலகத் தமிழர்கள். 

அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான  முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். "ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சங்க இலக்கியங்களுக்கான இருக்கை அமைவது என்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இதற்கான அனுமதியை போராடிப் பெற்றோம். இப்படியொரு இருக்கைக்காக, 45 கோடி ரூபாயை பல்கலைக்கழகத்திற்கு நாம் வழங்க வேண்டும். தன்னுடைய ஆராய்ச்சியின் முடிவாக ஹார்வர்டு ஒன்றை வெளியிட்டால், உலகம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அதனை ஏற்றுக் கொள்ளும். நமது மொழியைப் பற்றிக் காலம் காலமாக பெருமை பேசிக் கொண்டு இருக்கிறோமே தவிர, அதற்கான உலகளாவிய அங்கீகாரத்துக்கு நாம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

'தமிழ் மொழிக்கு எந்த அங்கீகாரமும் கிடைத்துவிடக் கூடாது' என்ற நோக்கில் வடமொழியின் மீது பற்றுள்ள சிலர் தீவிரமாகச் செயல்படுகின்றனர். இதனை முறியடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழர்களுக்கும் உள்ளது. உலக அளவில் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும்போது, செம்மொழித் தமிழின் பெருமைகள் உலகம் எங்கும் சென்று சேரும். 'யோகா என்பது அறிவியல்பூர்வமானது. இதன் மூலம் மனதையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும்' என ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிவித்த பிறகே, அனைவராலும் யோகா அங்கீகரிக்கப்பட்டது. நம்மிடம் உள்ள புலமையை, சரியான முறையில் எடுத்துக் காட்டத் தவறிவிட்டோம். தற்போது ஹார்வர்டு மூலம் சிறப்பான வாய்ப்பு கிடைத்திருக்கிறது" என விவரித்தார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன். தொடர்ந்து நம்மிடம் பேசினார்.

"ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைவதற்காக 6 மில்லியன் டாலர்களை சேகரிக்க வேண்டியிருக்கிறது. இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சம்பந்தன் இன்று ஒரு தகவல் அனுப்பினார். 'இதுவரையில் 2 மில்லியன் டாலர் பணம் சேர்ந்துள்ளது. இன்னும் 4 மில்லியன் டாலர் தேவைப்படுகிறது' எனக் குறிப்பிட்டார். இந்த 4 மில்லியன் என்பது 28 கோடி ரூபாய் ஆகும். எங்களுடைய முயற்சிகளைக் கேள்விப்பட்டு, சேலம் திரிவேணி குழுமம் ஒரு லட்சம் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. நாம் அனுப்பும் ஒவ்வொரு டாலருக்கும் முறையான கடிதத்தை ஹார்வர்டு அனுப்பி வருகிறது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஹார்வர்டில் இருக்கை அமைவதற்கான முயற்சியைத் தொடங்கிவிட்டால், அன்றிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் பணிகளுக்கான முழுப் பணத்தையும் கொடுத்துவிட வேண்டும். அப்படிப் பார்த்தால், வருகிற மே மாதத்துடன் பல்கலைக்கழகம் கொடுத்த கெடு முடிவடைகிறது.

காலக்கெடுவை நீட்டிக்க விரும்பினால், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவிக்கலாம். ஆனால், அப்படியொரு சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பணத்தைத் திரட்டும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், 'ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி வசதி செய்து தரப்படும்' என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இதற்காக, 'எவ்வளவு தொகை அளிக்கப்படும்' என அவர்கள் குறிப்பிடவில்லை. கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், ' 15 கோடி ரூபாய் வழங்கலாம்' என தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் தீர்மானித்தனர். ஆனால், நிதித்துறையில் பணம் இல்லை என நிராகரித்துவிட்டார்கள். 'இது கூடுதல் செலவீனம்' எனத் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த விவகாரத்தை முதல்வர் பன்னீர்செல்வம் கவனத்துக்கு எடுத்துச் செல்ல இருக்கிறோம். அவர்கள் கொடுப்பதாக முடிவு செய்திருந்த தொகையை ஹார்வர்டுக்கு அனுப்பினாலே போதுமானது. சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை ஓ.பி.எஸ் நிறைவேற்றுவார் என உறுதியாக நம்புகிறோம்" என்றார் நம்பிக்கையோடு. 

"தமிழ்நாட்டில் தமிழை வளர்க்க இந்தப் பணத்தை செலவு செய்யலாம் என்றெல்லாம் சிலர் குரல் எழுப்புகிறார்கள். தமிழின் பெருமையை உலகம் எங்கும் அங்கீகாரத்தோடு கொண்டு செல்ல ஹார்வர்டு தேவைப்படுகிறது. எந்த ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாதவர்கள், ஹார்வர்டு சொன்னால் மட்டும் ஏற்றுக் கொள்கிறார்கள். தொன்மையும் செழுமையும் வாய்ந்தது தமிழ்மொழி என உலக்குக்கு உரத்துச் சொல்ல ஹார்வர்டால் முடியும். காலக்கெடுவை நீட்டிக்கும் வாய்ப்பை பெற வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறோம். டெல்லியில் உள்ள தமிழ் அதிகாரிகளிடமும் பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் மூலமும் ஹார்வர்டுக்கு நிதி அனுப்புமாறு பேசி வருகிறோம்" என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள். 

- ஆ.விஜயானந்த்

அடுத்த கட்டுரைக்கு