Election bannerElection banner
Published:Updated:

”தை பிறந்தால் வழிதான் பிறக்கும்;புத்தாண்டு பிறக்காது”

”தை பிறந்தால் வழிதான் பிறக்கும்;புத்தாண்டு பிறக்காது”
”தை பிறந்தால் வழிதான் பிறக்கும்;புத்தாண்டு பிறக்காது”

”தை பிறந்தால் வழிதான் பிறக்கும்;புத்தாண்டு பிறக்காது”

”தை பிறந்தால் வழிதான் பிறக்கும்;புத்தாண்டு பிறக்காது”

சென்னை:“தை பிறந்தால் வழி பிறக்கும்...என்று தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே  தவிர, “தை பிறந்தால் புத்தாண்டு பிறக்கும்” என்று குறிப்பிடப்படவில்லை என  சட்டசபையில் ஜெயலலிதா கூறினார்.

சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது தொடர்ப்பாக தமிழக முதல்வர்  ஜெயலலிதாவுக்கும்,தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குமான அறிக்கை போர் தொடர்ந்து  நீடித்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக தமிழ் புத்தாண்டு குறித்து சட்டசபையில் இன்று செ.கு. தமிழரசன்  எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா,”சித்திரை தமிழ்ப் புத்தாண்டு  விழாவில் கலந்து கொண்டு, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான  காரணங்கள் எவை என நான் எடுத்துக் கூறியது மக்கள் மனதில் ஆழமாகப்  பதிந்துள்ளதைக் கண்டு, பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி,வீண் விதண்டா  வாதங்களை தனது கட்டுரையில் எடுத்து வைத்துள்ளார்.

சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என  மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளதை நான் சுட்டிக் காட்டியதற்கு, “இது என்ன ஆதாரமா?”  என்று வினவியிருக்கிறார் கருணாநிதி. நான் மதுரை ஆதீனம் என்பவரின் பெயரைக்  குறிப்பிட்டுச் சொன்னது ஆதாரம் இல்லையென்றால், பெயர் குறிப்பிடப்படாமல்,  “ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும், ஒப்புக்கொண்டுள்ள உண்மை” என்று  கூறி, ஒரு சட்டத்தை கருணாநிதி இயற்றியது ஆதாரத்தின் அடிப்படையிலா?

தி.மு.க. ஆட்சியில் சென்னையிலும், கோவையிலும் நடந்த உலகத் தமிழ் மாநாடு,  தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அல்லவா? என்று கேள்வி  எழுப்பியிருக்கிறார் கருணாநிதி. 1968 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா  முதலமைச்சராக இருந்த போது, உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.  இது தமிழ்மொழியை பரப்புவதற்கு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், 2010 ஆம்  ஆண்டு, முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மாநாடு உலகத் தமிழ்  மாநாடுகளின் வரிசையில் இடம் பெறாத, கருணாநிதியின் சுய விளம்பரத்திற்காக  நடத்தப்பட்ட, தன்னல தம்பட்ட மாநாடு.

கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த “தலைசிறந்த” தமிழ்  அறிஞர்கள் முன்வரிசையில் அமர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.  உண்மையான தமிழ் அறிஞர்கள் பின் வரிசைக்கு தள்ளப்பட்டனர்.

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று மறைமலை அடிகள்  கூறவில்லை என்பதை எடுத்துக்காட்ட கருணாநிதியின் கருத்தை ஒட்டிய, சிறுவை  நச்சினார்க்கினியன்  ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டினையொட்டி வெளியிடப்பட்ட  மலரில், “திருவள்ளுவனார் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்பது எளிதிற்  பெறப்படும். கிறித்துப் பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது  நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்” என்று 1935 ஆம் ஆண்டு, சென்னை பச்சையப்பன்  மண்டபத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் தினத்தில் மறைமலையடிகளார் பேசியதாக  கூறியிருப்பதை மேற்கோள் காட்டினேனே தவிர, அந்தப் பக்கத்திற்கு முன் பக்கத்தில்  சிறுவை நச்சினார்க்கினியன்  தெரிவித்துள்ள கருத்தைப் பற்றி நான் எதுவும்  சொல்லவில்லை. தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மறைமலை அடிகளார்  சொல்லவில்லை என்பதற்காகத்தான் மேற்படி கட்டுரையை  நான் மேற்கோள்  காட்டினேன்.

“வாழ்வியற் களஞ்சியம்”, என்ற நூலைக் குறிப்பிட்டு, ஆகம விதியின்படி தை முதல்  நாள் தான் புத்தாண்டு என்று கூறியிருக்கிறார் கருணாநிதி.“தை பிறந்தால் வழி  பிறக்கும்”, என்று தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே தவிர,“தை பிறந்தால் புத்தாண்டு  பிறக்கும்” என்று குறிப்பிடப்படவில்லை.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி என்ற நூலினை மேற்கோள் காட்டி, அந்த  நூலில் தமிழாண்டின் தொடக்க மாதம் தை என்று குறிப்பிட்டிருப்பதாக கூறியிருக்கிறார்
கருணாநிதி. அந்த நூலில் 113-வது பக்கத்தில் “இச்செய்தி, தமிழ் ஆண்டு எனும்  நூலிலிருந்து தொகுக்கப்பட்டது” என்று இருப்பதை தனக்கு வசதியாக திரு.கருணாநிதி  மறைத்துவிட்டார்.  அந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் தை மாதம்  தான் தமிழ் ஆண்டின் தொடக்க மாதம் என்று ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தால் இதனை  அடுத்து, தை - ஒரு திங்கள்; The tamil month, January – February  என்று ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது?

தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று அறிவித்து, நடைமுறைப்படுத்திட கழக அரசு முடிவு  செய்துள்ளது என்று 23.1.2008 அன்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டதாக
கருணாநிதி கூறியிருக்கிறார்.  ஆளுநர் உரையில் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே,  கருணாநிதியின் மகள் கனிமொழியால் நடத்தப்பட்ட சென்னை சங்கமம் விழாவில்  கருணாநிதி, “சங்கமம் போற்றுதும் என்று போற்றிப் பாடி, இது ஆண்டு தோறும் நடக்க  வேண்டும்; பொங்கல் திருநாளை நினைவூட்டும் வகையில் தொடர்ந்து நடக்க வேண்டும்.  தமிழரின் புத்தாண்டு தை முதல் நாள் என்று 500 புலவர்கள் கூடி கண்டுபிடித்து  அறிவித்து இருக்கிறார்கள்.  அதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் நாள் விரைவில்  வரும்” என்று கூறியுள்ளார்.

எனவே, சென்னை சங்கமம் விழாவில் தான், இது முதன் முதலாக அறிவிக்கப்பட்டது.  ஒரு வேளை, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று அதிகாரபூர்வமாக  அறிவிக்கப்பட்டால் தான் ஆண்டுதோறும் சென்னை சங்கமம் விழா நடத்தப்பட்டு, அதற்கு  ஓர் அங்கீகாரம் கிடைக்கும் என்று கருணாநிதி எண்ணினார் போலும்!

“தமிழர் திருநாள்” என்னும் தலைப்பில் மு.வ. அவர்களால் 1960 ஆம் ஆண்டு  கலைமகள் பொங்கல் மலரில் எழுதப்பட்ட கட்டுரையில், தைத் திருநாளை இயற்கைக்கு  நன்றி செலுத்தும் திருவிழா என்று தான் குறிப்பிட்டு இருக்கிறாரே தவிர, அதை தமிழ்ப்  புத்தாண்டு என்று குறிப்பிடவில்லை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட  விரும்புகிறேன்.

2008 ஆம் ஆண்டு, ஆளுநர் உரையில், “திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத்  திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக  எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால் தைத் திங்கள்  முதல் நாளையே, தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என அறிவித்து, நடைமுறைப்படுத்திட  இந்த அரசு முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கருணாநிதி, திருவள்ளுவர் நாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்  என்று 1963-ஆம் ஆண்டு தி.மு.க. சார்பில் கொண்டு வரப்பட்ட தனி நபர்  தீர்மானத்தின் மீது இந்த சட்டப் பேரவையில் உரையாற்றிய போது, “... மாதந்தோறும்  இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாக விட்டு வருகிறோம்.  ஒரு திங்களில்  ஒரு இரண்டாம் சனிக்கிழமையைக் கூட, திருவள்ளுவருடைய நினைவு நாளாகக்  கொண்டாட, விடுமுறை தினம் என்று அறிவிக்கலாம். இரண்டாம் சனிக்கிழமையன்று  என அமையாது திங்கள் கிழமை அல்லது செவ்வாய்கிழமை என்று வருமானால், அந்த  திங்களில் இரண்டாம் சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டுவிட்டு,  திருவள்ளுவருடைய நினைவு நாள் என்று குறிக்கப்பட்ட தினம் என்று வருகிறதோ  அன்றைக்கு விடுமுறை அளிக்க அரசாங்கம் முன் வரலாம்.

திருவள்ளுவருடைய தினத்தை நவம்பர் மாதம் கொண்டாடுவது என்றால் நவம்பர்  மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை விடுவதற்கு பதிலாக, அந்தத் திங்களில்  திருவள்ளுவருடைய நினைவு நாளாகக் குறித்த தினத்திற்கு விடுமுறை அளிக்கும்படியாக  இந்தத் தீர்மானத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்” என்று பேசியிருக்கிறார்.  ஏன்  அப்போது இப்படி பேசினார் கருணாநிதி? அப்பொழுதே திருவள்ளுவர் தை மாதத்தில் தான்  பிறந்தார் என்று கூறி, அந்த நாளை விடுமுறை நாளாக அறிவிக்குமாறு கேட்டுக்  கொண்டிருக்கலாமே!

2008 ஆம் ஆண்டு, சென்னை சங்கமம் விழாவில் உரையாற்றும் போது, தைத் திங்கள்  முதல் நாள்  தமிழ்ப் புத்தாண்டு என விரைவில் அறிவிக்கப்படும் என கருணாநிதி  அறிவித்ததைத் தொடர்ந்து, 17.1.2008 அன்று, அன்றைய தமிழ் வளர்ச்சி இயக்குநர்,  தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவ்வாறு அறிவிக்கப்பட வேண்டும் என்று  தெரிவித்துள்ள கருத்துருவில், 2004 ஆம் ஆண்டு அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்தில்,  சித்திரை முதல் நாளுக்குப் பதிலாக, தைத் திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு  என்று அறிவிக்கக் கருதினால், இப்பொருண்மையைத் தமிழ் வளர்ச்சி மன்றத்தில்  வைத்து, ஆய்வு செய்து முடிவு  செய்வது ஏற்புடையதாக இருக்கும் என்று  தெரிவிக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக் காட்டியிருந்தார். இவ்வாறான கடிதம், இது ஆய்வு  செய்து முடிவு செய்யப்பட வேண்டிய பொருள் என்று அமைந்துவிடும் என்பதால், அரசின்  அறிவுரை காரணமாகவோ என்னவோ

இந்த வாசகங்கள் அடிக்கப்பட்டு, திருத்திய கடிதம் தான் அரசுக்கு அனுப்பப்பட்டது.  முறையாக ஆய்வு எதையும் செய்யாமல் தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக,  அந்தச் சட்டத்தை இயற்றினார் கருணாநிதி. ஆனால், அந்தச் சட்டத்தினை மக்கள்  ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் தொடர்ந்து சித்திரை முதல் நாளையே தமிழ்ப்  புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் என்பது தான் உண்மை.

தை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டு என கருணாநிதி அறிவித்து சட்டம் இயற்றியது  முறையற்ற, மரபு மீறிய, மக்கள் மனதை புண்படுத்துகின்ற செயல் என்பதையும்  கருணாநிதியால் மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்தச் சட்டத்தை நான் ரத்து  செய்தேனே  தவிர எதையும் மக்கள் மீது திணிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”  என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு