Published:Updated:

சுதந்திர இந்தியா 75... தேசம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய 22 அரசியல் நிகழ்வுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆனந்த விகடன் அட்டைப்படம் - 1947
ஆனந்த விகடன் அட்டைப்படம் - 1947 ( கோபுலு )

`ஜம்மு காஷ்மீர் போர்', `எமர்ஜென்சி', `பாபர் மசூதி இடிப்பு', `பாகல்பூர் கலவரம்' என கடந்த 75 ஆண்டுகளில் சுதந்திர இந்தியா சந்தித்த முக்கிய அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பு இது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சுதந்திர இந்தியா தனது 75-வது வயதில் காலெடுத்து வைக்கிறது. கொரோனா தொற்று காரணமாகக் கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா, இந்தியா முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. செங்கோட்டையில் பிரதமரும், ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சரும் கொடி ஏற்றவிருக்கிறார்கள்.

இந்தச் சமயத்தில், சுதந்திர இந்தியா, கடந்த 75 ஆண்டுகளில் சந்தித்த மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளை இந்தக் கட்டுரையில் அலசலாம்!

ஆனந்த விகடன் அட்டைப்படம்- 1947
ஆனந்த விகடன் அட்டைப்படம்- 1947
கோபுலு
சுதந்திர இந்தியாவின் முதல் நாள் எப்படி இருந்தது? - ஆனந்த விகடனின் 1947 நாஸ்டால்ஜியா!

இரண்டானது நாடு!

இந்தியா, சுதந்திரமடைந்த முதல் நாளே இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இஸ்லாமிய மக்களுக்காக, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனி நாடாக்கப்பட்டது. இதையொட்டி நடந்த கலவரங்களில் சுமார் இரண்டு லட்சம் பேர் உயிரிழந்தனர். 1.2 கோடி பேர் இடம்பெயர்ந்தனர்.

ஜம்மு காஷ்மீர் போர்!

1947-48 காலகட்டத்தில், `ஜம்மு காஷ்மீர் யாருக்கு?' என இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. அப்போது ஜம்மு காஷ்மீர் பகுதியை ஆட்சிசெய்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட, போர் முடிவுக்கு வந்தது.

முதல் தேர்தல்!

1951-ம் ஆண்டில், இந்தியா தனது முதல் பொதுத்தேர்தலைச் சந்தித்தது. மொத்தமிருந்த 489 தொகுதிகளில், 384 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது காங்கிரஸ் கட்சி. இந்தியாவின் முதல் பிரதமரானார் ஜவஹர்லால் நேரு!

இந்தியா-சீனா போர்!

எல்லையிலுள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை சீனா ஏற்க மறுத்த நிலையில், 1962, அக்டோபர் 20-ம் தேதியன்று இந்தியா-சீனா இடையே போர் தொடங்கியது. இந்தப் போரில் சுமார் 1,300 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு அறிவித்தது. போர் தொடங்கியதிலிருந்து சரியாக ஒரு மாதம் கழித்து சீனா போர் நிறுத்தம் அறிவிக்க, முடிவுக்கு வந்தது இந்தப் போர்.

ஜவஹர்லால் நேரு
ஜவஹர்லால் நேரு
Vikatan

பீகார் இயக்கம்!

1974-ம் ஆண்டு, பீகார் மாநில ஆட்சியில் நிலவிய ஊழலுக்கு எதிராக மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். காந்தியவாதி ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில் தொடங்கப்பட்ட பீகார் இயக்கம், நாளடைவில் மிகப்பெரிய இயக்கமாக மாறியது. முதலில் மாநில அரசுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், பின்னர் மத்தியில் ஆட்சி செய்த இந்திரா காந்தி அரசுக்கு எதிராக மாறியது.

எமர்ஜென்சி!

1974-75 காலகட்டத்தில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராகப் பல்வேறு மாநிலத் தலைவர்களும் போராட்டத்தில் குதித்தனர். அந்தச் சமயத்தில், ``உள்நாட்டு அச்சுறுத்தல், பொருளாதார நெருக்கடி, அரசுப் பணியாளர்களின் போராட்டம் உள்ளிட்டவற்றால் நாட்டின் ஜனநாயகத்துக்குக் களங்கம் ஏற்படக்கூடும் என்பதால் நெருக்கடிநிலையை அமலுக்குக் கொண்டுவர வேண்டும்'' என்று அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி முகமதுக்குக் கடிதம் எழுதினார் இந்திரா காந்தி. இந்திராவின் கோரிக்கையை ஏற்று ஜூன் 25, 1975 அன்று எமர்ஜென்சியை அமல்படுத்தினார் பக்ருதின் அலி.

நெருக்கடிநிலையால், இந்தியா முழுவதுமிருந்த மூத்த அரசியல் தலைவர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டனர். ஆட்சிக்கு எதிர்க் கருத்துகளைப் பேசும் அரசியல் சாரா அமைப்புகள் தடை செய்யப்பட்டன. தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஊடகங்கள் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டன. இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கங்களாக எமர்ஜென்சி காலம் பார்க்கப்பட்டது. 1977, மார்ச் 21 அன்று எமர்ஜென்சி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காங்கிரஸின் முதல் தோல்வி!

எமர்ஜென்சியின் விளைவாக 1977 நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாகத் தோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ். ஜனதா கட்சியின் கீழ் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து, இந்திரா காந்தியை வீழ்த்தின. இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமரானார் மொரார்ஜி தேசாய்.

இந்திரா படுகொலை!

1984, அக்டோபர் 31 அன்று தனது பாதுகாப்பு அதிகாரிகளாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. பாதுகாவலர்கள் இருவரும் சீக்கியர்கள் என்பதால், சீக்கிய மக்களுக்கு எதிராக வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி
vikatan

பாகல்பூர் கலவரம்!

1989-ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு இந்தியா முழுவதுமிருந்து செங்கல் வாங்கும் பணியைத் தொடங்கி நடத்திக்கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் பாகல்பூர் அருகே செங்கல் வாங்கும்போது இந்து, இஸ்லாமியர்களிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் ஏற்பட முக்கியக் காரணமாக இருந்தவை இரண்டு பொய்யான செய்திகள். கல்லூரிகளில் பயிலும் இந்து மாணவர்களை இஸ்லாமியர்கள் கொன்று புதைத்ததாக இரண்டுவிதமான வதந்திகள் பரவ, இஸ்லாமியர்களைத் தாக்கத் தொடங்கினர் இந்துக்கள். இந்தக் கலவரத்துக்கு சில அரசியல் காரணங்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் கலவரத்தில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் எனச் சொல்லப்பட்டது. அக்டோபர் 24, 1989 அன்று தொடங்கிய கலவரம் இரண்டு மாதங்கள் நடைபெற்றது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா சந்தித்த மிக மோசமான மதக் கலவரங்களில் இதுதான் முதன்மையானது. பாகல்பூரைச் சுற்றியிருக்கும் 250 கிராமங்கள் இந்தக் கலவரத்தால் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.

மண்டல் கமிஷன்!

மொரார்ஜி தேசாய் ஆட்சியில், பி.பீ.மண்டல் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு, இந்தியா முழுவதுமிருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தயக்கம் காட்டியது.

1989-ம் ஆண்டு மாநிலக் கட்சிகளோடு கூட்டணி அமைத்து பிரதமரானார் வி.பி.சிங். 1990-ம் ஆண்டு மண்டல் கமிஷன் அறிக்கையைவைத்து, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார் வி.பி.சிங். இதனால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. போராட்டங்களின் விளைவாக, பிரதமர் பதவியை இழந்தார் வி.பி.சிங்.

ராஜீவ் படுகொலை!

1991, மே 21 அன்று சென்னையை அடுத்த ஶ்ரீபெரும்புதூரில் பிரசாரத்துக்காக வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை நிகழ்த்தியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புதான் எனக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், ``நாங்கள் ராஜீவ் காந்தியைக் கொலை செய்யவில்லை. இந்திய அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயுள்ள உறவைத் தகர்த்தெறியும் உள்நோக்கத்தோடு ஸ்ரீலங்கா அரசும், அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சிதான் இது'' என்று சில ஆதாரங்களோடு விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக விளக்கமளித்தனர்.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

பாபர் மசூதி இடிப்பு!

டிசம்பர் 6, 1992 அன்று அயோத்தியிலுள்ள பாபர் மசூதியை இடித்துத் தள்ளின இந்துத்துவா அமைப்புகள். இதனால் இந்தியா முழுவதும் ஏற்பட்ட கலவரத்தில் 2,000-த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

பாபர் மசூதி
பாபர் மசூதி
1528-ல் பாபர் மசூதி... 2020-ல் ராமர் கோயில்... 492 ஆண்டு வரலாற்றுச் சுருக்கம்! #AyodhyaRamMandir

முதல் பா.ஜ.க ஆட்சி!

1996 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமரானார். 16 நாள்கள் மட்டுமே நீடித்த பா.ஜ.க ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின்னர் மீண்டும் 1998 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது பா.ஜ.க.

கார்கில் போர்!

கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி உள்ளே நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக `ஆபரேஷன் விஜய்' என்ற மிஷனைத் திட்டமிட்டு கார்கில் போரில் ஈடுபட்டது இந்திய ராணுவம். போரின் முடிவில் வெற்றிகண்டு டைகர் ஹில்ஸ் பகுதியை மீட்டெடுத்தது இந்தியா.

குஜராத் கலவரம்!

2002-ம் ஆண்டு அயோத்தியிலிருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையம் அருகே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், குஜராத் முழுவதுமிருக்கும் இஸ்லாமியர்கள்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன. இந்தக் கலவரத்தில் 1,044 பேர் உயிரிழந்தனர்.

இந்தக் கலவரத்துக்குப் பின்னணியில் அப்போதைய குஜராத் முதல்வரும், இந்தியப் பிரதமருமான நரேந்திர மோடி உள்ளிட்ட சிலர் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் 2017-ம் ஆண்டு விடுதலை செய்தது குஜராத் நீதிமன்றம்.

ஊழலுக்கு எதிரான போராட்டம்!

2011-ம் ஆண்டு, சமூகச் செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் களமிறங்க, இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரிப் போராடினார் ஹசாரே. பின்னர் 2013-ம் ஆண்டு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஏற்கெனவே ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்த சமூக ஆர்வலரான அரவிந்த் கெஜ்ரிவாலும், அன்னா ஹசாரேவோடு போராட்டத்தில் இணைந்து கவனம் பெற்றார். 2012-ல் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கிய கெஜ்ரிவால், 2013-ல் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தார்.

அன்னா ஹசாரே
அன்னா ஹசாரே

பண மதிப்பிழப்பு!

2016-ம் ஆண்டு, கறுப்புப் பண ஒழிப்பை முன்வைத்து `500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது’ என அறிவித்தார் பிரதமர் மோடி. முதலில், இந்தியா முழுவதும் இந்த நடவடிக்கைக்கு வரவேற்புகள் எழ, பின்னர், `சரியாகத் திட்டமிடாமல் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கை' என விமர்சனங்களும் எழுந்தன.

ஜி.எஸ்.டி!

`ஒரே நாடு; ஒரே வரி' என்ற இலக்கோடு ஜூலை 1, 2017 முதல் ஜி.எஸ்.டி வரியை அமலுக்குக் கொண்டுவந்தது மோடி அரசு. `ஜி.எஸ்.டி வரி என்பது மக்கள்மீதான வரிச்சுமையை மேலும் அதிகரித்திருக்கிறது' என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

தன்பாலின ஈர்ப்பு!

2018-ம் ஆண்டில், `இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பு இனி குற்றமில்லை' என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை அறிவித்தது உச்ச நீதிமன்றம்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து!

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் 6, 2019 அன்று ரத்து செய்தது மத்திய பா.ஜ.க அரசு. ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக அந்தப் பகுதி பிரிக்கப்பட்டது.

இதற்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஜம்மு தலைவர்கள் அனைவரும் பல மாதங்களாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். அந்தப் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கொரோனா காலத்துக்கு முன்பே ஊரடங்கைச் சந்தித்தது காஷ்மீர்!

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
டிரெண்டான #RealFarmersVsActorModi - டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

டெல்லி கலவரம்!

பா.ஜ.க அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென இஸ்லாமியர்கள் பலரும் 2019, டிசம்பர் மாதம் முதலே போராட்டம் நடத்திவந்தனர். இந்தப் போராட்டம், 100 நாள்களைக் கடந்து டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவந்தது. இந்தப் போராட்டத்தில் பிப்ரவரி 23-ம் தேதியன்று கலவரம் வெடித்தது.

இந்துத்துவவாதிகள் போராட்டக் களத்துக்குள் புகுந்து கற்களை வீசியதாகவும், அதற்கு இஸ்லாமியர்கள் பதில் தாக்குதல் செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்தக் கலவரத்தில் சுமார் 53 பேர் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது. உயிரிழந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் இஸ்லாமியர்கள் என்கிற தகவல்களும் சொல்லப்பட்டன. மசூதிகள், இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகள் ஆகியவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டதால், இஸ்லாமியர்கள் பலரும் இருக்க இடமின்றி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

விவசாயிகள் போராட்டம்!

மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் `டெல்லி சலோ' என்ற போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்தனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற மறுத்துவருகிறது மத்திய அரசு. இன்று வரையிலும் எட்டு மாதங்களுக்கும் மேலாகச் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் விவசாயிகள்.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா சந்தித்த முக்கிய நிகழ்வுகளில், ஏதேனும் விடுபட்டிருந்தால் கமென்ட்டில் சொல்லுங்க மக்களே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு