Published:Updated:

மிஸ்டர் மோடி... 50 நாள் ஆச்சு... என்னலாம் ஆச்சு தெரியுமா? #Demonetisation

மிஸ்டர் மோடி... 50 நாள் ஆச்சு... என்னலாம் ஆச்சு தெரியுமா?  #Demonetisation
மிஸ்டர் மோடி... 50 நாள் ஆச்சு... என்னலாம் ஆச்சு தெரியுமா? #Demonetisation

நவம்பர் 08, 2016, 8 மணி அளவில் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் தோன்றி "இந்திய நாட்டில் உலவும் ரூ 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் செல்லாது "  அப்டினு சொல்லிட்டுப் போய்ட்டீங்க மோடி சார்.  கொஞ்ச நாள் பிரச்னை இருக்கும்.. அப்பறமா சரியாகிடும்.. இந்தியாடா.. ஜெய்ஹிந்த்டானெல்லாம் காலரைத் தூக்கிவிட்டுகிட்டேன்.  நீங்களே வந்து  50 நாட்கள்ல சரியாகிடும் இல்லைன்னா என்னை சட்டையப் பிடிச்சு கேள்வி கேட்கலாம்கற ரீதியில பேட்டியெல்லாம் கொடுத்தீங்க. இன்னும் பஞ்சர் ஒட்டிக்கிட்டே தான் இருக்காங்க. அதுக்குள்ள ஒரு கம்பெனி (ஸ்நாப்டீல்) பணத்தை ஹோம் டெலிவரி பண்றத்துக்கே ரெடி ஆகிடுச்சு. இன்னொரு பக்கம்  ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொடுக்க ஆட்கள் தேவைன்னு போர்டு ரெடி ஆகுது. இந்த டிமானிட்டைஷேசன் நாட்டில் ஏற்படுத்திய பாதிப்புகள் இருக்கட்டும். ஒரு தனி மனுஷனா, நம்மளுக்கு என்ன பாதிப்பு ஏற்படுத்தி இருக்கின்றன என பார்ப்போம்.

1. நிம்மதியா எந்த பஸ் வருதோ (ப்ளூ, க்ரீன், வொயிட்) போர்ட் கலர் பாக்காம சமத்துவமா, சாம்பார் இட்லி சாப்டுக்கிட்டே ஆஃபீஸுக்கு போயிட்டு இருந்தவங்களை, ரூ. 5, 10-ன்னு கணக்கு பாத்து, கண்கள் வொயிட் போர்ட தேட வெச்சிருக்கு....

2. காலை டிஃபன் சாப்பிட்டே பழக்கமில்லாத யூத்களுக்கு, திடீர்ன்னு பசிச்சா கூட  "இங்கு அனைத்து வகையான கார்டுகளும் ஏற்றுக் கொள்ளப்படும் " -ன்னு போர்ட் வச்சிருக்குற கடையை நோக்கி வைகோ மாதிரி நடக்க வெச்சிருக்கு. அப்படியே அங்க போய் 4 இட்லிக்கு கார்ட நீட்டுவோம். சார், ‘மினிமம் பில் 150 ரூபீஸ். 4 இட்லி வெறும் 49 ருபாய் தான் (இட்லி விலை 40 தான், வாட், சேவை வரி - ரூ.9) ஆகி இருக்கு’ன்னு சொல்லுவார் சர்வர். சரி அந்த நெய் ரோஸ்ட சொல்லுன்னு அதிகப்படியா 70 எம்.எம் தோசைய சரசரன்னு வயித்துல திணிப்போம். ஸோ.. பர்ஸ்ல கார்ட் இருக்கு, கார்டுல காசு இருக்கு, கையில் காசு இல்லையேப்பா. இல்லையே... வருத்தப்பட்டுக்கிட்டே எக்ஸ்ட்ரா தேங்காய் சட்னி கேப்போம்.

3.  இது முந்தின பாயிண்டோட ரிவர்ஸ் வெர்சன்தான்.  "கேஃப்சி- மெக்டொனால்ஸ்" என்று பீட்டர் விட்டுக் கொண்டிருந்த பெருமகனார்கள், கையில் ரூ. 2000 காசு வந்த உடன் கையேந்தி பவன்களிடம் தஞ்சம் அடைந்திருக்கி(றோம்)றார்கள். ஆம்பியன்ஸ் கொஞ்சம் டெரர் என்றாலும் டேஸ்ட் ஓகே என்பதை ஏற்று கொள்ளவைத்திருக்கிறது டீமானிட்டைசேஷன். கையேந்தி பவன் கி... ஜெய். யக்கா, கொஞ்சம் சால்னா போடு.

4. "ட்ரெயின், பஸ் டிக்கெட்ட எல்லாம் ரிசர்வ் பண்ணியா ஊருக்கு போற" என்று நம்மை கிண்டல் கேலி பேசியவன் எல்லாம், இன்னைக்கு கையில காசு இல்லாம ஆன்லைன்ல டிக்கெட் போடறான். இவன மாதிரி ஆட்களால ரெகுலரா டிரெயின், பஸ்ல டிக்கெட் ரிசர்வ் பண்ணி போற ஆட்களுக்கு சீட் கெடைக்க மாட்டேங்குது. மோடி ஜி, நிறைய டிரெயின் விடுங்க, கூடவே ஐஆர்சிடிசியோட  சர்வர் கெப்பாசிட்டிய அதிகப்படுத்துங்க ஜி.

5. வெளியூர்களுக்கு போயிட்டு வந்தா.... கோயம்பேடு, எக்மோர், சென்ட்ரலில் இருந்து வீட்டுக்கு போக ஆட்டோவ கூப்டு.....  பேரம் கூட பேசாமல் கெத்து காட்டும் பெண்கள் கூட "அண்ணா 27B பஸ் ட்ரிப்ளிகேன் போகுமா " என்று கேட்கிறார்கள் என்றால் டிமானிட்டைசேஷனின் வலிமை புரியும்.  ‘அண்ணே... கொஞ்சம் தள்ளி நில்லுங்க... காலை மிதிக்கறீங்க!’ 

6. வீட்டுக்கு 1/2 கிலோ பிராண்டட் பாஸ்தா 150 ரூவான்னு வாங்குனவன், இன்னைக்கு கிலோ ரூ 40-க்கு விற்கிற பாஸ்தாவ லூஸ்ல வாங்குறான். இட்லி அரிசிய கிலோ 50 ரூபாய்க்கு கூட கெத்தா வாங்குனவன், ரேஷன் அரிசிய க்யூல நின்னு வாங்கி யூஸ் பண்றான். நேச்சுரல்ஸ், க்ரீன் டிரெண்டுன்னு முடிய நகம் வெட்டுற மாதிரி இடத்துல 250 ரூவா குடுத்து முடி வெட்டுனவன் எல்லாம், 90 ரூபாய் கொடுத்து சாதா சலூன்ல அர மொட்ட அடிக்கிறான். அடுத்த மாசத்துக்கும் சேத்து முடிய வெட்டுன்னு முடி வெட்றவர மிரட்டுறான். 

7. "ஐ  ஆல்வேஸ் டிராவல் இன் கேபிஎன், பர்வின், எஸ்.ஆர்.எம்"-ன்னு சீன் போட்ட ஐடி காரங்க எல்லாம் இன்னக்கி எஸ்.இ.டி.சிலயும், டி.என்.எஸ்.டி.சிலயும் "வொய் திஸ் கன்ட்ரீ லைக் திஸ்" -ன்னு முனகிட்டே டிராவல் பண்றாங்க. இவன் பொலம்பல கேட்ட பின் சீட் பெரியவர்  "தம்பி பார்டர்ல ராணுவ வீரர்கள் பனியில...." -ன்னு நிலைமை புரியாம தேச பக்தி பேச ஆரம்பிச்சிடறாங்க.

8. 150 ரூபாய் செலவழிச்சி ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணி, படத்துக்கு போனவன் எல்லாம் இன்னக்கி கால் கடுக்க 80 ரூபாய் பால்கனி டிக்கெட்டுக்கு நிற்கிறான். இன்ட்ரவெல்ல பாவ்பாஜி ஆரம்பிச்சி, பாப்கார்ன் வரை இருக்குற ஐட்டத்த எல்லாம் டேஸ்ட் பண்ணக் கூடிய ஆட்கள் கூட பச்ச தண்ணி குடிச்சிட்டு பேலியோ டயட் பாலோ பண்ற மாதிரி அமைதியா உட்கார்ந்திருக்குறத பாக்கணுமே. வாழ்க டீமானிட்டைசேஷன். "தங்கல் செம இன்ட்ரவெல் இல்ல."

9. நகவெட்டி வாங்குறதுக்கு கூட நால கிலோமீட்டர் தள்ளி இருக்குற மாலுக்கு தான் போவேன்னு, அடம் பிடிச்சவங்க எல்லாம், இப்ப அத்தனை பொருளையும் பேரம் பேசி ரோட்டுக் கடையில வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. என்ன ஒண்ணு, ‘அண்ணே, தம்மாத்துண்டு பிளாஸ்டிக் கூடை 10 ரூபாயா. குறைச்சு சொல்லுங்கண்ணே...’ என்று ஓவராக பேரம் பேசுவது தான் கொஞ்சம் கடுப்ஸான விஷயம்.  "தம்பி எது எடுத்தாலும் 10 ரூவாயில என்ன டிஸ்கவுன்ட்" 

10. கந்து வட்டிக்கு பேங்குல காச வாங்கி, ஒரு நல்ல பைக்க வாங்குனவங்க எல்லாம் இப்ப பார்க்கிங்குக்கு மொய் எழுதியே கையில் இருக்குற 2000 ரூவா கரைஞ்சிடுது. அதுக்கு பயந்தே பைக்க அரை கிலோமீட்டருக்கு அங்கிட்டு நிறுத்திட்டு, சத்தம் காட்டாம நடந்து போறாங்க. அதுல நானும் ஒருத்தன் பாஸ்!   "வண்டி சர்வீஸுக்கு விட்ருக்கேன்... இப்ப வந்துடும்." 

11. இந்த டீமானிட்டைசேஷன் காலத்துல, வீட்டு வாடகைங்குற சப்ஜெக்ட எப்புடி டீல் பண்றதுன்னு தான், நாசா விஞ்ஞானிகள்  இப்ப ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. மாசம் பொறந்து 5 தேதிக்குள்ள வாடகை டான்னு கையில் இருக்கணும்னு சொன்னது மட்டும் இல்லாம, வாடகை கொடுக்கலன்னா கரண்ட்டை புடுங்கி விடுறது, தண்ணி மோட்டார் போடாம பிளாக் மெயில் பண்ற அடாவாடி ஹவுஸ் ஓனர்கள் எல்லாம் இப்ப வாடகைய தினமும் 100 ரூபாயா வீட்டுக்கே வந்து வாங்கிட்டு போறாங்க.

அப்படி இல்லயா, நாம மளிகை கடைக்கு போறப்ப, அவங்களுக்கும் தேவையான மளிகை சாமான்களையும் நம்மல வாங்கிட்டு வரச் சொல்லி, வாடகைக்குப் பதிலா, பில்லை நம்மள  கட்டச் சொல்லிடுறாய்ங்க. ஒட்டு மொத்தத்துல நம்மை ஒரு பதட்டத்திலேயே வச்சிருக்காங்கய்யா...!

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், நாம உழைச்சு சம்பாதிச்ச காச, பேங்க்ல போய் கட்டுனதுக்கு எப்ப வருமான வரித்துறை பிரச்னை கிளப்புவானோ தெரியல...?

நாங்க அனுபவிச்சதுல கொஞ்சம் இதெல்லாம்.. நீங்க அனுபவிச்சத அப்படியே கமெண்ட் பண்ணுங்களேன்... ஜாலியா படிச்சுப் படிச்சு அழுதுக்குவோம்!   

- மு.சா.கெளதமன்