Published:Updated:

இந்த வருடத்தின் பெஸ்ட் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் யார் தெரியுமா? #2016special

இந்த வருடத்தின் பெஸ்ட் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் யார் தெரியுமா? #2016special
இந்த வருடத்தின் பெஸ்ட் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் யார் தெரியுமா? #2016special

இந்த வருடத்தின் பெஸ்ட் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் யார் தெரியுமா? #2016special

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் செய்வது என்பது தனிக்கலை. அது எல்லோருக்கும் வாய்த்துவிடுவது இல்லை. உலகின் சிறந்த பவுலரால் கூட எத்தனை பந்துகள் வீசினாலும் தன்னை வீழ்த்த முடியவில்லை எனும் அளவுக்கு ஒரே ஒரு இன்னிங்க்ஸையாவது விளையாடிவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்பது தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைக்கும் எல்லோருடைய கனவு. அது நனவாகும் நாள் அவருக்கு பொன்னாள். 

சச்சின், டிராவிட், லட்சுமண், ஷேவாக், காலிஸ், லாரா, சங்கக்காரா என ஒரு செட் டெஸ்ட் ஜாம்பவான்கள் ஓய்வுபெற்ற பிறகு கடந்த இரண்டு வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடையவர்கள் எனச் சொல்லப்படும் பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கை  விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்குத்தான் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் பல நல்ல பேட்ஸ்மேன்கள் வந்தார்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான யுக்திகளை கையாண்டார்கள். இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதுசு. ஆரோக்கியமானதும் கூட. சரி இந்த வருடத்தின் சிறந்த பத்து பேட்ஸ்மேன்கள் யார்? 

குறிப்பு : ரன்கள் அடிப்படையிலோ அல்லது சராசரி முதலான வெறும் புள்ளிவிவரங்களை மட்டும் அடிப்படையாக கொண்டு  வரிசைப்படுத்தப்பட வில்லை. ஏதோ ஒரு போட்டியில் மட்டும்  சிறப்பாக ஆடினவர்கள் கணக்கில்  எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆண்டு முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள், அயல் மண்ணில் நன்றாக விளையாடியவர்கள், நல்ல புள்ளிவிவரங்களையும் வைத்திருப்பவர்கள், குறிப்பாக அணிக்கு அவசியம் தேவைப்படும் போது அட்டகாசமாக விளையாடியவர்கள், ரெகுலராக முடிவை நோக்கி மேட்ச் பயணிக்கும் போது தனி ஆளாக போராடியவர்கள் என எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுத் தான் வரிசைப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா-பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையே நடந்து வரும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை.

10. அலிஸ்டர் குக்:- 

இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் இந்த ஆண்டு 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இந்த ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் குக்குக்குத்  தான் மூன்றாவது இடம். ஆண்டின்  துவக்கத்தில் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் குக்கின் கேரியரில் மறக்கவேண்டிய தொடராக இருந்தது. எனினும் அதன் பின்னர் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி விளையாட ஆரம்பித்தார். நம்பர்களுக்கு அப்பால், கடுமையான ஆடுகளங்கள், உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் ஆகியோருக்கு எதிராக, டெஸ்ட் போட்டியின்  நான்காவது நாள், ஐந்தாவது நாள் ஆகியவற்றில் கடும் சவால் தந்தார் என்பதாலேயே பட்டியலில் இவருக்கு இடம் கிடைத்து விடுகிறது. இந்தியாவில் அடித்த சதம், பாகிஸ்தான் அணிக்கு எதிரான சதம் போன்றவை பிளஸ்பாயிண்ட்ஸ். 

9. சதீஸ்வர் புஜாரா :- 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் புஜாராவுக்கு நல்லபடியாக அமையவில்லை. ஆனால் நியூசிலாந்தும், இங்கிலாந்தும் இந்தியா வந்தபோது அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தினார் புஜாரா. அவரை அவுட்டாக்குவதற்குள் நொந்து போயினர் இங்கிலாந்து, நியூசிலாந்து பவுலர்கள். நியூசிலாந்து தொடரில் அதிக ரன் குவித்தவரே புஜாரா தான். மூன்று டெஸ்ட் போட்டிகளில் மூன்று அரை சதமும், ஒரு சதமும் எடுத்தார். இங்கிலாந்து தொடரில் இரண்டு சதம், ஒரு  அரை சதம் எடுத்தார். புஜாராவுக்கு இது மிகச்சிறப்பான ஆண்டு எனச் சொல்ல முடியாது, எனினும் உலக அளவில் கவனிக்கத்தக்க பேட்ஸ்மேனாக வலம் வந்ததால், டாப் 10 இடத்துக்குள் நுழைகிறார்.

8. குவின்டன் டி காக்:- 

அதிரடி.. சரவெடி தான் டி காக் பாணி. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாம் ஏழாம் நிலைகளில் இறங்கி கொளுத்தி எடுக்கிறார் டி காக். பவுச்சருக்கு பிறகு நீண்டகாலம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் தடுமாறி வந்த தென் ஆப்பிரிக்க அணி டி காக் வரவால் புது தெம்பு பெற்றிருக்கிறது.  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இவர் எடுத்த  அதிரடி அரைசதங்கள் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட்டை நினைவுபடுத்தின. அடுத்த ஆண்டு டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் பல உயரங்கள் தொடுவார் என எதிர்ப்பார்க்கலாம். 

7. ஆசாத் ஷஃபிக் :-

ஆண்டு முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார் ஷஃபிக். பாகிஸ்தான் அணியில் மற்ற பேட்ஸ்மேன்கள் ஒரு போட்டியில் ஆடுவதும், மறு போட்டியில் கைவிடுவதுமாக இருக்க, எந்த போட்டியாக இருந்தாலும், எந்த இன்னிங்ஸாக இருந்தாலும் முடிந்தவரை போராடுவது ஷஃபிக்கின் வழக்கம். பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இவர் அடித்த சதம், இந்த ஆண்டில் தி பெஸ்ட் டெஸ்ட் செஞ்சுரி. 

6. அசார் அலி :- 

யூனிஸ்கான், மிஸ்பா என சீனியர்களே அடக்கி வாசிக்க பட்டாசாக வெடித்தார் அசார் அலி.  அடங்க வேண்டிய இடத்தில் அடங்கியும், திமிர வேண்டிய இடத்தில் திமிறியும் இவர் ஆடிய ஆட்டத்தில் இங்கிலாந்தும், வெஸ்ட்  இண்டீஸ் அணியும் கதிகலங்கின. துபாயில் நடந்த  டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவர் அடித்த முச்சதம் அவருக்கு மிகப்பெரிய தெம்பு தந்தது. இங்கிலாந்து பிரிமிங்காம் டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பான இன்னிங்ஸ் ஆடி சதமடித்தார் அசார். அந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்றுத்தான் போனது எனினும் அந்த சதம் பெரிதும் பேசப்பட்டது. 

5. ஸ்டீவ் ஸ்மித் :- 

இந்த ஆண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில்  அசத்தினார் ஸ்மித். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் மட்டுமின்றி அயல்நாட்டுச் சுற்றுப்பயணங்களிலும் சீராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இலங்கைச் சுற்றுப்பயணத்தின் போது ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் தடுமாறிக் கொண்டிருந்தது, ஐம்பது ஓவர்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் பரிதாபமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர் தோல்விகளால் கேப்டன்சி குறித்து கடும் விமர்சனம் வந்து கொண்டிருந்த வேளையிலும் கொழும்பு டெஸ்டில்  ஒரு சிறப்பான சதம் எடுத்தார் ஸ்மித். அது அவரது நினைவில் என்றும் நிற்கும். 

4. கிரேக்  பிராத்வெயிட் :- 

இந்த ஆண்டின் கிரேட் 'தனி ஒருவன்' டெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்.  வெஸ்ட் இண்டீஸ் அணி காமாசோமாவென விளையாடிக் கொண்டிருந்தாலும் இழுத்துப் பிடித்து அணி கவுரமான ஸ்கோர் குவிக்க உதவிக் கொண்டிருக்கின்றார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சரி, அரேபிய மண்ணில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் சரி, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சரி எல்லா அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரே  வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் இவர். இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கிடைத்த முத்து இவர். கொஞ்சம் கவனம் செலுத்தி ஆசிய மண்ணிலும் பட்டையைக் கிளப்பத் தொடங்கினால், உலக அரங்கில் ஐ.சி.சி டெஸ்ட் வரிசையில் கூட இவரால் நம்பர் 5 இடத்துக்குள் முன்னேறிவிட முடியும். எதிராணிகளின் வெற்றிகளை தாமதப்படுத்தி, அணிக்குச் சுவர் போல நின்று பங்களித்ததால் இந்த ஆண்டின் பெஸ்ட் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில்  இவரும் இடம்பெறுகிறார். 

3.விராட் கோஹ்லி :- 

டெஸ்ட் போட்டிக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார் என கணித்தவர்களின் வாயை அடைத்தார் விராட் கோஹ்லி. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மெதுவான ஆடுகளத்தில் இவர் அடித்த இரட்டைச் சதம் அவரின் கேரியர் பெஸ்ட் இரட்டைச் சதம். நியூசிலாந்து, இங்கிலாந்து  அணிகளுக்கு எதிராக இவர் அடித்த இரட்டைச்  சதங்கள் பையன் செம்ம பார்மில் இருக்கிறான் என எதிராணிகளுக்கு சொன்னது. எந்த இங்கிலாந்துக்கு எதிராக ஒரு காலத்தில் சொதப்பித் தள்ளினாரோ  அதே அணிக்கு எதிராக தனது கேரியர் பெஸ்ட் டெஸ்ட் தொடரை ஆடினார் கோஹ்லி. இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் வர வைத்திருக்கும் சராசரி ... ப்ப்பா!

 இப்போது தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது வேட்டையை தொடங்கியிருக்கிறார் கோஹ்லி, வரும் காலங்களில் அவரைச் சமாளிப்பது எதிரணி பவுலர்களுக்கு பெருந்திண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கலாம். 

2. ஜானி பேர்ஸ்டோ :-

வேகப்பந்துக்குச் சாதகமான தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணமா? நான் இருக்கிறேன்!.

 சூழல் மண்ணில் சொர்க்கபுரியான இந்திய ஆடுகளங்களா? நான் இருக்கிறேன்!.

 வங்கதேச மண்ணா? நான் இருக்கிறேன்! 

சொந்த ஊரில் நடக்கும் போட்டியில் விக்கெட் சரிகிறதா? நான் இருக்கிறேன்! 

இப்படி இங்கிலாந்து அணியை இந்த ஆண்டு முழுவதும்  தாங்கிப்பிடித்தார் பேர்ஸ்டோ. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்த ஆண்டு கிடைத்த ஒரு அட்டகாசமான பேட்ஸ்மேன் இவர். ஆறு விக்கெட் விழுந்தாலும், ஏழு விக்கெட் விழுந்தாலும், கடினமான பிட்சாக இருந்தாலும் டெயிலெண்டர்களை வைத்துக் கொண்டு இவர் ஆடும் ஆட்டத்தைப் பார்க்கும் போது எதிரணியின் ரசிகர்களுக்கு கூட எழுந்து நின்று கைத்தட்ட தோன்றும். 

1. ஜோ ரூட் :-

அமர்க்களமான டெஸ்ட் பேட்ஸ்மேன் ஜோ ரூட். கன்சிஸ்டன்சி தான் இவருடைய பிளஸ். எந்த பிட்ச்சாக இருந்தாலும் சரி, எந்த எதிராணியாக இருந்தாலும் சரி, ரூட் ரன்களாக குவித்துத் தள்ளினார். இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன் ஜோ ரூட் தான். இந்த ஆண்டில் அதிக அரைசதங்கள் எடுத்த பெருமையும் ரூட்டைச் சேரும்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவர் குவித்த 254 ரன்கள் இந்த ஆண்டின் பெஸ்ட் இரட்டைச் சதங்களில் ஒன்று. ரூட்டை ஒரு தொடரில் அதிக முறை வீழ்த்திய பந்துவீச்ச்சாளரே கிடையாது. ஏனெனில் எப்பேர்ப்பட்ட பந்து வீச்சாளரையும் எளிதாக சமாளிக்கும் டெக்னிக் ரூட்டிடம் இருந்தது. கிளாஸான பவுண்டரிகள், ரசிகர்களின் இதயத்தை பறிக்கும் மாஸான சிங்கிள்கள்  எல்லாம் 'வாவ்' ரகம்.தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஜோகன்னஸ்பார்க் டெஸ்ட்டில் இவர் அடித்த சதம் 'தெறி'த்தனம்!

- பு.விவேக் ஆனந்த்

அடுத்த கட்டுரைக்கு