Published:Updated:

முடிவெடுத்த மார்க்சிஸ்ட்... முந்திக்கொண்ட வைகோ... ம.ந.கூ.வில் ம.தி.மு.க. வெளியேறிய பின்னணி !

விகடன் விமர்சனக்குழு
முடிவெடுத்த மார்க்சிஸ்ட்... முந்திக்கொண்ட வைகோ... ம.ந.கூ.வில் ம.தி.மு.க. வெளியேறிய பின்னணி !
முடிவெடுத்த மார்க்சிஸ்ட்... முந்திக்கொண்ட வைகோ... ம.ந.கூ.வில் ம.தி.மு.க. வெளியேறிய பின்னணி !


பொதுவாக கூட்டணி என்றால் அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே சில சிக்கல்கள், பிரச்னைகள் எழுவது என்பது வாடிக்கை தான். வெவ்வேறு கட்சிகள் ஓரணியாக சேரும் போது, 100 சதவீதம் ஒத்துப்போவது என்பதை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது. ஆனால் அணி சேர்ந்தது முதல் பல திகிலூட்டும் திருப்பங்களை கொடுத்து அதிர வைத்தது மக்கள் நலக்கூட்டணி. அதில் மிக முக்கியமான ஒன்று தான் கூட்டணியை உருவாக்கியதாக சொல்லப்படும் வைகோவே அணியில் இருந்து வெளியேறியது.

'மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து, மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் நடத்துவதற்காக...' எனச்சொல்லி 2015-ம் ஆண்டில் துவங்கப்பட்டது தான் மக்கள் நலக்கூட்டணி. ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காந்திய மக்கள் இயக்கம், மனித நேய மக்கள் கட்சி என 6 கட்சிகளுடன் துவங்கியது மக்கள் நலக்கூட்டியக்கம்.

துவங்கிய வேகத்தில் வெளியேறிய கட்சிகள் !

இந்த இயக்கத்தில் சேர்ந்த வேகத்திலேயே வெளியேறினார் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். "இந்த அணி தேர்தல் வரை நீடிக்காது. இதில் உள்ள கட்சிகள் எல்லாம் தி.மு.க., அ.தி.மு.க.வோடு கூட்டு சேர்ந்து பழக்கப்பட்ட கட்சிகள். இது அ.தி.மு.க.வை நோக்கி நகரும் முயற்சி தான். எனவே நான் வெளியேறி விட்டேன்" என காரணம் சொன்னார் தமிழருவி மணியன். இந்த இயக்கம் தேர்தலை சந்திக்கும் என வைகோவும் மற்றவர்களும் அறிவிக்கத் துவங்க... 'இது தேர்தலுக்கான அணி அல்ல' எனச்சொல்லி வெளியேறியது மனித நேய மக்கள் கட்சி. ஆரம்பித்த வேகத்தில் கூட்டணியில் ஆறாக இருந்த கட்சிகளின் எண்ணிக்கை 4ஆக குறைந்தது.

கூட்டணியில் மட்டுமல்ல கட்சிக்குள்ளும் கலகத்தை ஏற்படுத்தியது இந்த முடிவு. மக்கள் நல கூட்டியக்கத்துடன் கூட்டணி என்ற முடிவுக்கு எதிராக ம.தி.மு.க.வின் நிர்வாகிகள் பலர் தி.மு.க.வுக்கு இடமாறினர். "2001, 2006, 2011 தேர்தல்களில் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிட்டார். தொடர்ச்சியாக அணி மாறினார். சில சமயங்களில் போட்டியிடாமலே இருந்தார். இப்போது கூட நிச்சயம் வெற்றி பெற முடியாது என தெரிந்திருந்தும், மக்கள் கூட்டியக்கத்துடன் கூட்டணி என்கிறார். இதை நாங்கள் ஏற்கவில்லை," என வெளிப்படையாக அறிவித்து ம.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறினர்.

சமரசமும், குழப்பங்களும்...

மக்கள் நலக்கூட்டணி என முடிவெடுத்த பின்னால், அணியில் இருந்த நான்கு கட்சிகளும் நிதானமாய் ஆலோசித்து குறைந்த பட்ச செயல்திட்டங்களை வெளியிட்டது. இந்த நான்கு கட்சிகள் முரண்படும் எந்த விஷயமும் குறைந்த பட்ச செயல் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளுடன், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்னை, கூடங்குளம் அணு உலை, முல்லைப் பெரியாறு அணைப்பிரச்னை உள்ளிட்ட சில பிரச்னைகளில் முரண்பட்டு நிற்கும் நிலையில், குறைந்த பட்ச செயல்திட்ட வரைவு அறிக்கையில் மற்ற கட்சிகள் சமரசம் செய்து கொண்டன.

தி.மு.க., அ.தி.மு.க., பி.ஜே.பி. காங்கிரஸ், பா.ம.க. அல்லாத அணியை ஏற்படுத்துவது, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டிப்பது உள்ளிட்ட முக்கியமானவை குறைந்த பட்ச செயல்திட்டங்களில் இடம்பெற்றிருந்தது. 'மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் என யாரையும் அறிவிக்கப்போவதில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதை முடிவு செய்வோம்' என அறிவித்தனர்.  ஆனால் அடுத்த சில தினங்களிலே தே.மு.தி.க.வுடன் தேர்தல் ஒப்பந்தம் செய்த மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள், முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தனர். முதல்வர் வேட்பாளரை அறிவிக்கப்போவதில்லை என்பதை பிரகடனம் செய்த வைகோவே, 'விஜயகாந்த் தான் முதல்வர் வேட்பாளர். மக்கள் நலக்கூட்டணி இனி கேப்டன் விஜயகாந்த் அணி என அழைக்கப்படும்' என பகிரங்கமாக அறிவித்தார். பின்னர் த.மா.கா.வுடனும் தேர்தல் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

இதோடு நிற்கவில்லை. கோவில்பட்டியில் நானே நிற்கப்போகிறேன். எனக்கு அந்த தொகுதி வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் போராடி கோவில்பட்டி தொகுதியை பெற்ற வைகோ, வேட்புமனுத்தாக்கலின் போது போட்டியிடப்போவதில்லை எனச்சொல்லி பரபரப்பை கிளப்பினார். தேர்தல் பிரசாரத்தில் உணர்ச்சிப் பிழம்பான வைகோவின் பேச்சும், தொடர்பில்லாமல் பேசிக்கொண்டிருந்த விஜயகாந்த்தின் பேச்சும் பெரும் பின்னடைவாய் அமைந்தது. அதுவே தேர்தலிலும் எதிரொலித்தது.

தேர்தலுக்கு பின்னரும் தொடர்ந்த குழப்பங்கள்

தேர்தலுக்கு பின்னரும் இது தொடர்ந்தது. தேர்தல் முடிவுகளில் நான் செய்த தவறுகள் என வைகோ பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. 'விஜயகாந்தை முதல்வராக ஏற்றுக்கொண்டிருக்க கூடாது. அது நான் எடுத்த முடிவு அல்ல' என வெளிப்படையாகவே பேசினார் வைகோ. "சக்திக்கு மீறிய சுமையை தூக்கிக் கொண்டு, கட்சிப்பணிகளுக்காக உறக்கமின்றி, சரியான நேரத்தில், மருத்துவர் ஆலோசனையின் படி உண்ணாமல் இருந்ததால், எனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் என்னை கடுமையாக பாதித்திருக்கிறது. அதை உங்களிடம் சொல்வதில் தவறில்லை என கருதுகிறேன். அந்த பாதிப்பு கட்சிக்கு பாதகத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் நான் அறிவேன்" என்றார்.

த.மா.கா., தே.மு.தி.க. கட்சிகள் அடுத்தடுத்து வெளியேறியது. இருந்தாலும், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து இயங்கும் என்றே சொல்லி வந்தார்கள். காவிரி பிரச்னையில் அனைத்துக்கட்சிக்கூட்டத்தை தி.மு.க. கூட்டிய போது, அதில் பங்கெடுக்க விடுதலை சிறுத்தைகள் முன்வந்தது. அதற்கு வைகோ ஒப்புக்கொள்ளவில்லை.

சிக்கலின் உச்சம் இது தான்..

இடைத்தேர்தலில் யாரையும் ஆதரிக்கப்போவதில்லை என மக்கள் நலக்கூட்டணி அறிவித்திருந்த போது, புதுவை, நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தது விடுதலை சிறுத்தைகள். ரூ.500, ரூ.1000  நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மக்களை பாதிக்கும் எனச்சொல்லி, அதை கண்டித்து விடுதலை சிறுத்தைகளும், இடது சாரிகளும் போராட்டங்களை அறிவித்தபோது, மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்பதாக சொல்லி பரபரப்பை கிளப்பினார் வைகோ. அதோடு நிற்காமல் மோடியை நேரில் சந்தித்து வைகோ பாராட்ட கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.

சஸ்பென்ஸ் நிறைந்த திரைப்படங்களில் கூட இத்தனை திருப்பங்களை நீங்கள் பார்த்து விட முடியாது. அத்தனை திருப்பங்களை தினம் தினம் அரங்கேற்றி வந்தது மக்கள் நலக்கூட்டணி. இதன் உச்சகட்டமாகத்தான் அணியை உருவாக்கிய ம.தி.மு.க.வே வெளியேறியது. திடீரென ம.தி.மு.க. வெளியேற என்ன காரணம் என விசாரித்தோம்.

முடிவெடுத்த மார்க்சிஸ்ட்.. முந்திக்கொண்ட வைகோ...

ம.தி.மு.க. அணியில் இருந்து வெளியேறவில்லை என்றால், ம.தி.மு.க. வெளியேற்றப்பட்டிருக்கும். அதனால் தான் ம.தி.மு.க.வே வெளியேறி விட்டது என்றார்கள் இடது சாரிகள். "மக்கள் நலக்கூட்டணியில் குறைந்தபட்ச செயல்திட்டங்களில் மிக முக்கியமானது  மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்ப்பது. இதில் வைகோவின் செயல்பாடு என்பது ஏற்கத்தக்கதில்லை. மூன்று கட்சிகளும் ரூபாய் நோட்டு பிரச்னையில் தீவிரமாய் எதிர்ப்பு தெரிவித்த போது, வைகோ இதற்கு ஆதரவு தெரிவித்ததும், மோடியை நேரில் சந்தித்து பாராட்டியதும் ஏற்கத்தக்கதல்ல. குறைந்த பட்ச செயல்திட்டங்களுக்கு எதிராக செயல்படுவது ஏற்க முடியாது. அவர் இந்த அணியில் நீடிக்க முடியாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று அறிவிப்பதாக இருந்தது. அதற்குள் வைகோ முந்திக்கொண்டார். திடீரென உயர்நிலைக்குழு கூட்டத்தின்முடிவை ஏற்று வெளியேறுவதாக வைகோ சொன்னது இதைத்தான் காட்டுகிறது," என இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், "ரூபாய் நோட்டுப் பிரச்னை என்பது தேசம் தழுவிய முக்கியமான ஒரு பிரச்னை. அப்படிப்பட்ட ரூபாய் நோட்டுப் பிரச்னையில் மத்திய அரசை ஆதரிக்கிறார் வைகோ. கூட்டணியில் இருக்கும் மற்ற மூவரும் எதிர்க்கிறோம். எதிரெதிர் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் ஒரே அணியில் நீடிக்க முடியாது. அது சரியாகவும் இருக்காது" என்றார்.
தமிழக அரசியலில் சுவாரஸ்யமான திருப்பங்களையும், பரபரப்பான நிகழ்வுகளை நிகழ்த்தக்கூடியவராக இருந்தார் வைகோ. இப்போது அவரால் அவருக்கே நிகழ்ந்துள்ளது பரபரப்பான திருப்பம்.

- ச.ஜெ.ரவி