Published:Updated:

ஜெயலலிதாவை ஈர்த்த கடிதத்தை எழுதியவர் யார் தெரியுமா?

ஜெயலலிதாவை ஈர்த்த கடிதத்தை எழுதியவர் யார் தெரியுமா?
ஜெயலலிதாவை ஈர்த்த கடிதத்தை எழுதியவர் யார் தெரியுமா?

ஜெயலலிதாவை ஈர்த்த கடிதத்தை எழுதியவர் யார் தெரியுமா?

இந்தத் தலைப்பை படித்தவுடன், நிச்சயமாக எனக்கு (ஜெயலலிதா) யாரிடமிருந்தோ வந்த ஒரு கடிதத்தைப்பற்றி கூறப் போகிறேன் என்று வாசகர்கள் நினைத்திருப்பார்கள். அதுதான் இல்லை!

இங்கே நான் குறிப்பிட விரும்பும் கடிதத்துக்கும், எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. அது யாரோ, வேறு யாருக்கோ எழுதிய கடிதம். இருப்பினும், அது என் மனத்தை விட்டு அகலவே இல்லை. சம்பந்தமில்லாதவர்களின் கடிதத்தைப் படிப்பது தவறில்லையா என்று கேட்காதீர்கள்! இது உலக சரித்திரத்தில் இடம் பெற்று, போர்க் காலத்தில் பல உயிர்களைக் காப்பாற்ற உதவிய வரலாற்றுப் புகழ் பெற்ற கடிதம். எவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடிய அந்தக் கடிதத்தைப் பற்றிய இன்னொரு அதிசயமான விவரம் - அது சேர வேண்டிய நபரை 116 ஆண்டுகள் கழிந்த பின்னரே போய் அடைந்தது! இது அதிசயமாகப் பட்டாலும் உண்மையே.

116 ஆண்டுகள் தாமதமானாலும், சரியான நேரத்துக்குத்தான் அந்தக் கடிதம் போய்ச் சேர்ந்தது. இதென்ன புரியாத புதிராகத் தோன்றுகிறதே? 116 வருடங்கள் கழித்து வந்த கடிதம் எப்படி ''சரியான நேரத்துக்குப் போய்ச் சேர்ந்ததாகக் கூறமுடியும் என்கிறீர்களா? விளக்கமாக கூறுகிறேன்.

1915-ம் ஆண்டில், முதல் உலக யுத்தம் (WORLD WAR 1)) நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. எகிப்திலுள்ள சினாய் தீபகற்பத்தின் ஒரு பகுதியாகிய சினாய் பாலைவனத்தின் நடுவே, தனித்து நின்ற ஒரு கோட்டையில் பிரிட்டிஷ் படையினர் சிலர் இருந்தனர். பிரிட்டிஷ் படை வீரர்கள் ஆழ்ந்த துயரத்தில் இருந்தனர். அவர்களிடம் இருந்த உணவுப் பொருட்கள் தீர்ந்து போய்விட்டன. ஒரு வாய் உணவு கூட கோட்டையில் மீதம் இருக்கவில்லை. ஆளுக்கு ஒரு குவளைக் குடி தண்ணீருக்கும் குறைவாகவே இருந்தது. ஆகாரப் பொருட்கள் முற்றிலும் தீர்ந்துவிட்டதோடு, பட்டாளத்து வீரர்களின் சகிப்புத் தன்மையும் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.

வெளியே கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியில் ஜெர்மானியப் படைகளும்; எதிரி முகாமில் சேர்ந்து விட்ட பல அரேபியப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களும் அவர்களுக்காகக் காத்திருந்தனர். எப்போது கோட்டையை விட்டு வெளியே வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், அவர்களைத் தீர்த்துக் கட்டுவதற்கு ஆயத்தமாக இருந்தனர். பாலைவனத்தில் குடி தண்ணீர் இல்லாமல் எப்படி உயிர் பிழைப்பது? அப்படியே பிரிட்டிஷ் படை வீரர்கள் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகளிடமிருந்து தப்பித்துக் கொண்டாலும், நிச்சயமாக குடிநீர் இல்லாமல் தாகத்தால் செத்துப் போவார்கள்.

பிரிட்டிஷ் படை அதிகாரியாகிய கேப்டன் கேசால் என்பவரும், அவருடைய உதவியாளரும் நிலைமையைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு காவலன் அலுவலகக் கதவைத் தட்டினான். ''ஒரு முதியவர் கேப்டனைச் சந்திக்க வந்திருக்கிறார்" என்று அறிவித்தான். உள்ளே அழைத்து வரச் சொன்னார்கள். மிகவும் வயதாகிய, முகமெல்லாம் கணக்கில் அடங்கா சுருக்கங்கள் விழுந்திருக்க முதியவர் உள்ளே நுழைந்தார்.

''என் பெயர் ஷைக் ரஃபாய். உங்களில் கேப்டன் கேசால் யார்?" என்று கேட்டார்.

கேப்டன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ''கேப்டன் கேசால், உங்களுக்குச் சேர வேண்டிய கடிதம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அதை நேரிடையாக உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக நீண்ட நெடுங்காலமாக காத்திருக்கிறேன்" என்றார் அந்த முதியவர். கேப்டன் கேசாலுக்கு ஆச்சரியமாக இருந்தது. வினோதமாகக் காட்சியளித்த அந்த மடலை பெற்றுக் கொண்டார். மிகவும் பழைய காலத்து முறைப்படி அது மடிக்கப்பட்டு, முத்திரையிடப் பட்டிருந்தது. காலப் போக்கினால் காகிதம் பழுப்பு நிறம் அடைந்து, தொட்டாலே அப்பளம் போல் நொறுங்கி விடுமோ என்று தோன்றியது. அது ஒரு பண்டைக்காலத்துப் புராதனப் பொருளாகவே காட்சி அளித்தது.

பேராவலுடன் அதைப் பிரித்து படிக்கத் தொடங்கினார். ''Mon Cher Cazal" என்று கடிதம் தொடங்கியது (பிரஞ்சு மொழியில் - ''எனதருமை கேசால்" என்பது பொருள்.) ''என்ன இது? இந்தக் கடிதம் பிரஞ்சு மொழியில் எழுதப்பட்டிருக்கிறதே?" என்று கேசால் தன் உதவியாளரிடம் கூறினார். ''ஆனால் சந்தேகமின்றி எனக்குத்தான் இந்தக் கடிதம் எழுதப் பட்டிருக்கிறது. நல்ல வேளை, எனக்குப் பிரஞ்சு மொழி நன்றாகத் தெரியும். எனது தகப்பனார் ஆங்கிலேயர். அதனால் நான் பிரிட்டிஷ் பிரஜை. ஆனால் என் தாய் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். என் தாய் வழி உறவினர்கள் எல்லோருமே பிரஞ்சுக்காரர்கள்."

திடீரென்று கேசாலுக்கு ஒரு சந்தேகம் பிறந்தது. ஷைக் ரஃபாயின் பக்கம் திரும்பினார். ''இந்தக் கடிதம் உங்களுக்கு எங்கே கிடைத்தது?' என்று வினவினார். "பிரான்சு நாட்டின் மாமன்னர் நெப்போலியன் அவர்கள், தமது கரங்களாலேயே இதை என்னிடம் தந்தார்" என்று முதியவர் ரஃபாய் விளக்கினார். ''இதை கேப்டன் கேசால் என்பவரின் கைகளில்தான் ஒப்படைக்க வேண்டும். வேறு எவரிடத்திலும் தரக்கூடாது என்று கட்டளையிட்டார். உங்களிடமே இதைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக எத்தனை ஆண்டுகள் காத்திருக்கிறேன் தெரியுமா?... எத்தனையோ ஆண்டுகள்... அந்த ஆண்டுகளின் எண்ணிக்கையே இப்போது எனக்கு மறந்து போய் விட்டது... என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை."

கேப்டன் கேசாலுக்கு இது விந்தையாக இருந்தது. "நம்ப முடியவில்லையே! அது எப்படி சாத்தியமாகும்? நெப்போலியன் எகிப்துக்கு படையெடுத்துச் சென்றது 115 ஆண்டுகளுக்கு முன்பு... இல்லை, இல்லை... 116 ஆண்டுகள் ஆகிவிட்டனவே!" பண்டைக்காலத்து பிரஞ்சு எழுத்துக்களில் வரையப்பட்டிருந்த மடலைப் பார்த்து மெதுவாக மொழி பெயர்க்கத் தொடங்கினார் கேப்டன் கேசால்.

கடிதத்திலுள்ள விபரம் வருமாறு:

"என தருமை கேசால்,

இந்த ஆணையை இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனிடம் கொடுத்து அனுப்பியுள்ளேன். இது உன் கைக்கு வந்தவுடன், கோட்டைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்ற உணவுப் பொருட்களையும்; யுத்த ஆயுதங்களையும்; வெடி மருந்துகளையும் தோண்டி வெளியில் எடு. உனக்குத் தேவையானவற்றை மாத்திரம், தேவைப்படும் அளவிற்கு எடுத்துக்கொண்டு, மீதம் இருக்கும் பொருட்களை அழித்து விடு. பின்னர் எகிப்திய எல்லையை நோக்கி உன் படையினருடன் புறப்படு."

"நீ செல்லக்கூடிய பாதைகள் மூன்று இருக்கின்றன. கடலோரமாகச் செல்லுகின்ற பாதைகளைப் பயன்படுத்த வேண்டாம். பாலைவனத்தின் நடுவே நேராக ஒரு பாதை செல்கிறது. அதன் வழியாகவே படையுடன் பயணம் செய். இந்தக் கடிதத்துடன், பாலைவனப் பகுதியின் தேச வரைபடம் ஒன்றை (MAP) இணைத்து அனுப்பியுள்ளேன், பாலைவனப் பாதையில் பூமிக்கு அடியில் தண்ணீர் ஊற்றுகள் இருக்கும் இடங்கள் இந்த வரை படத்தில் குறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வரை படத்தை உன் கண்ணின் இமை போல் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொள்.

இப்படிக்கு,

நெப்போலியன் போனபார்ட்."

கடிதத்தில் உள்ள விஷயங்களைக் கேட்டதும், பிரமிப்பில் ஆழ்ந்து. தற்காலிகமாகப் பேசும் சக்தியை இழந்து விட்ட தனது உதவியாளரின் முகத்தை கேசால் பார்த்தார். அவர் மனத்தில் நம்பிக்கை துளிர் விடத் தொடங்கியது. "ஏன் ஆண்ட்ரிஜ், ஒருவேளை, நம்மைக் காப்பாற்றிக் கொள்ள இதுவே சரியான வழியாக இருக்கலாம் அல்லவா?" என்றார் கேப்டன் கேசால். ''எனது கொள்ளுத் தாத்தா நெப்போலியனின் படையில் பணியாற்றினார். அவர் இதே பகுதியில்தான் யுத்தத்தின் போது கொல்லப்பட்டார். என் கொள்ளுத் தாத்தாவின் பெயரும் கேசால் தான். நெப்போலியன் அவருக்குத்தான் இந்தக் கடிதத்தை எழுதினாரோ என்னவோ? அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன், எதற்கும், கடிதத்தில் குறிப்பிட்டபடியே செய்து பார்த்து விடலாமே? உடனே நமது படையில் இருக்கும் ஒவ்வொரு ஆளையும், கோட்டைக்கு அடியில் உள்ள பொருட்களைக் கண்டு பிடிக்க, தோண்டும் பணியில் ஈடுபடும்படி ஆணையிடு."

எல்லோருமாகச் சேர்ந்து தோண்டினார்கள். புதையலும் கிடைத்தது! உணவுப் பொருட்கள்; ஆயுதங்கள்; வெடி மருந்துகள்; துப்பாக்கி குண்டுகள் - அவற்றோடு குடி தண்ணீரும் கிடைத்தது! எப்படி என்றால், இந்தப் பிரிட்டிஷ் படை கோட்டையை முற்றுகையிட்டு ஆக்ரமித்துக் கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்பாக இதே கோட்டையில் ஜெர்மானிய படைகளும், துருக்கர் படை வீரர்களும் முகாமிட்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் சொந்தப் பிரயோகத்திற்காக இந்த பொருட்களைச் சேகரித்து கோட்டைக்கு அடியில் புதைத்து வைத்திருந்தார்கள். இந்தப் பிரிட்டிஷ் படை வந்து அவர்களை விரட்டி விட்டு கோட்டையை ஆக்ரமித்துக்கொண்ட போது, ஜெர்மானியர்களும், துருக்கர்களும் இவற்றை விட்டு விட்டு ஓடி விட்டார்கள்!

இப்போது கேப்டன் கேசாலின் உள்ளத்தில் நம்பிக்கை வலுவடைந்தது. சிறு நெருப்புப் பொறியாக இருந்த நம்பிக்கை கொழுந்து விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கியது. இந்தக் கண்டுபிடிப்பு அவரைப் பெரிதும் உற்சாகப்படுத்தி ஊக்குவித்தது. 116 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கடிதத்தில், விவரிக்கப்பட்ட வழி முறைகளையே பின்பற்றுவது என்று முடிவு செய்தார். அந்தப் பழைய வரைபடத்தின் கோடிட்டுக் காட்டப்பட்ட பாதையின் வழியாகவே தன் படைகளை அழைத்துச் சென்றார். வரைபடத்தில் ஒரு குறிக்கப்பட்டிருந்த ஒவ்வோர் இடத்திலும், ஒன்று கூட தவறாமல், தண்ணீர் ஊற்றுகளைக் கண்டுபிடித்தார்.

வயதாகிவிட்டதால் ஞாபக சக்தி பாதிக்கப்பட்டிருந்த முதியவர் ஷைக் ரஃபாயிடம் பொறுமையாக விசாரித்த பின், உண்மை தெளிவாயிற்று. நெப்போலியன் அந்தக் கடிதத்தை ஷைக் ரஃபாயிடம் ஒப்படைத்தபோது, ரஃபாயிக்கு வயது 25 அத்துடன் வெகுமதியாக நெப்போலியன் அவருக்கு இரண்டு பொன் நாணயங்களையும் தந்தார். கேப்டன் கேசாலிடம் அந்தக் கடிதத்தைப் பத்திரமாகச் சேர்ப்பதற்கான பரிசு அது.

அப்போது ரஃபாய் கோட்டையை அடைந்த போது, அங்கே யாருமே இருக்கவில்லை. அவர் அங்கே போய் சேருவதற்கு முன்பாகவே அந்த காலத்து கேப்டன் கேசால் தன் படைகளுடன் கோட்டையை காலி செய்து விட்டு போய்விட்டார். அவரை எங்கே போய் தேடுவதென்று ரஃபாய்க்குத் தெரியவில்லை. அதனால் கடிதத்தைப் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார். விதியின் அபூர்வ விளையாட்டினால், இன்னொரு கேப்டன் கேசால் 116 ஆண்டுகள் கழித்து, அதே கோட்டைக்கு வரும் வரை, ரஃபாய் உயிருடன் இருந்தார். அப்போது 141 வயதாகி விட்ட ரஃபாய்க்கு, ''கேப்டன் கேசால்" என்ற பெயரைக் கேள்விப்படவே, மங்கி போயிருந்த பழைய நினைவுகள் மனத்துக்குள் புத்துயிர்ப் பெற்று மீண்டும் எழுந்தன. 25 வயதில் தனக்கு இடப்பட்டப் பணியை நிறைவேற்ற 141-வது வயதில் புறப்பட்டார்!

ரஃபாயின் வாயிலாக, நெப்போலியனின் அசாத்திய சைனிய அதிபுத்தி சாதுரியம் ஒரு நூற்றாண்டை கடந்து, பாலைவனத்தில் வழி தெரியாமல் தவித்த ஒரு பிரிட்டிஷ் படையை காப்பாற்ற தக்க தருணத்தில் தககவல் கொடுத்து உதவியது.

தகவல் உதவி: குறள் பித்தன்

அடுத்த கட்டுரைக்கு