Published:Updated:

கார்டனை ஆட்டுவிக்கும் ஆடிட்டர்! - ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தும் மர்மம் 

கார்டனை ஆட்டுவிக்கும் ஆடிட்டர்! - ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தும் மர்மம் 
கார்டனை ஆட்டுவிக்கும் ஆடிட்டர்! - ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தும் மர்மம் 

கார்டனை ஆட்டுவிக்கும் ஆடிட்டர்! - ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தும் மர்மம் 

பொதுக்குழுவை எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் நடத்தி முடிக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள் அ.தி.மு.க சீனியர்கள். கடந்த மூன்று நாட்களாக எந்தவித ரெய்டும் இல்லாததால் கார்டன் வட்டாரத்தில் நிம்மதி ஏற்பட்டுள்ளது. ' சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் கட்சியிலும் ஆட்சியிலும் நீடிப்பதை பா.ஜ.க தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை. முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனைக்கே சிக்கல் வரவும் வாய்ப்புள்ளது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

தமிழக அரசின் பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரரும் மணல் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்த சேகர் ரெட்டி மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வளைக்கப்பட்டதில், சசிகலா உள்பட சீனியர்கள் அமைச்சர்கள் சிலர் அதிர்ந்து போனார்கள். மாதம்தோறும் கார்டன் பரிவர்த்தனைக்காக அளிக்கப்பட்ட தொகைகள் மற்றும் மன்னார்குடி உறவுகள் நடத்தி வந்த வர்த்தகம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து வருகின்றன. " கடந்த மூன்று நாட்களாக நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இயக்குநர் ஜெனரல் முரளிகுமார் தலைமையில் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வளவு நாட்கள் தீவிர ஆலோசனைகள் நடப்பதே ஆச்சரியத்தைத் தருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக கார்டனுக்குள் நடந்து வந்த பரிவர்த்தனைகளைத்தான் அலசி வருகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் ரெய்டு நடவடிக்கைகள் பாயலாம்" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், 

" மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனைக்கு என்ன மாதிரியான எதிர்வினைகள் கிளம்புகிறது என டெல்லியில் உள்ளவர்கள் கவனித்து வருகிறார்கள். அரசின் ஒப்பந்தங்களில் மட்டுமல்லாமல், சீனியர் அமைச்சர்கள் நான்கு பேரின் கணக்கு வழக்குகளையே சேகர் ரெட்டிதான் கவனித்து வந்தார். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் சோதனையில் சிக்கியுள்ளன. ' நாள்தோறும் பொக்லைன் இயந்திரம் மூலமும் மணல் மூலமும் வருகின்ற பணம்தான் இது' என ரெட்டி தரப்பில் கணக்கு காட்டுகிறார்கள். புதிய ரூபாய் நோட்டுகள் கோடிக்கணக்கில் அவரிடம் வந்தது குறித்தும் ராமமோகன ராவ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அரசு ஒப்பந்தங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடந்து வருகிறது. ' யாரையும் விட்டு வைக்க வேண்டாம். முழு அதிகாரத்தையும் பயன்படுத்துங்கள். சரியான ஆதாரம் சிக்கினால் கார்டனை நோக்கிச் செல்லுங்கள்' என்றுதான் மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. ' ராமமோகன ராவின் பேட்டிக்கு மாநில நிர்வாகிகளே பதிலடி கொடுக்கட்டும்' எனத் தெரிவித்துவிட்டார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மன்னார்குடி உறவுகள் நடத்தும் ஆட்டத்தை ஆர்.எஸ்.எஸ் முகாமில் உள்ளவர்கள் ரசிக்கவில்லை.

குறிப்பாக, அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக ஜெயலலிதாவை வைத்துக் கொண்டு, நடத்தப்பட்ட திரைமறைவு வேலைகளையும் திரட்டி வருகின்றனர். மரணம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் முதல் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரையில் புகார் தெரிவிக்க வருபவர்களிடம் மனுக்கள் பெறப்படுகின்றன. கார்டன் நடவடிக்கைகளை முடக்கும்விதமாகவே அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. இப்போது சசிகலாவுக்கு கூடுதல் தலைவலியாக இருப்பது ஆடிட்டர் குருமூர்த்தியின் அதிரடிகள்தான். ' சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றால், அ.தி.மு.க அழிந்துவிடும்' என பகிரங்கமாக பேசி வருகிறார் அவர். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் ஊழல்களைத் தட்டிக் கேட்க அவர் தயங்கியதில்லை. ப.சிதம்பரம் முதற்கொண்டு தயாநிதி மாறன் வரையில் சட்டரீதியாகவே அவர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருபவர். தற்போது சசிகலாவுக்கு எதிராக அவர் பேசும் அதிரடிகளை, எதிர்கொள்ள வழிதெரியாமல் கார்டன் வட்டாரத்தில் உள்ளவர்கள் திணறி வருகின்றனர்" என்றார் விரிவாக. 

" தமிழகத்தின் முதலமைச்சராக ஏற்கெனவே இரண்டு முறை பதவி வகித்தவர் என்ற முறையிலும் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக ஓ.பன்னீர்செல்வம் இருந்ததாலும் ஆட்சியில் அவர் தொடர்வதையே டெல்லி தலைமை விரும்புகிறது. முதல்வருக்கும் சசிகலா உறவினர்களுக்கும் உள்ள இடைவெளியையும் அவர்கள் கவனித்து வருகிறார்கள். ' முதல்வர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ்ஸை அவ்வளவு எளிதாக அகற்றிவிட முடியாது. அவரே பதவியில் தொடர்வார். தமிழ்நாட்டில் சசிகலா குடும்பத்துக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை' என அதிரடியாகப் பேசியிருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி. இதுகுறித்து, பா.ஜ.க தலைவர் அமித் ஷாவிடமும் தமிழகத்தின் பிரதிநிதிகள் சிலர் பேசியுள்ளனர். ' நமக்கு எதிராகப் பேசுபவர்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். காங்கிரஸ் உள்பட தமிழ் அமைப்புகள்தான் அவர்களுக்கு ஆதரவாக பேசுகின்றன. வரியை ஏய்த்து ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்' எனக் கூறியிருக்கிறார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த விவகாரத்தில் அப்போலோ மருத்துவமனைக்கே சிக்கல் வரவும் வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் எதிர்ப்புகளையெல்லாம் டெல்லி தலைமை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை" என்கின்றனர் பா.ஜ.க பிரமுகர்கள் சிலர். 

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவியில் இருப்பவர்தான், இதுவரையில் முதலமைச்சராகவும் இருந்து வந்திருக்கிறார். அந்த வகையில், ' இப்போதுள்ள கிடைத்துள்ள வாய்ப்பு மீண்டும் ஒருமுறை வந்துவிடாது. சின்னம்மா விரைவில் முதல்வர் ஆக வேண்டும்' என கோட்டையை நோக்கி பார்வை பதித்துள்ளனர் மன்னார்குடி உறவுகள். ' அவ்வளவு எளிதில் பதவியை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது' என்பதில் உறுதியாக இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இருவருக்கும் இடையில் வருமான வரித்துறையின் வாகனம் தயாராகவே காத்திருக்கிறது. அடுத்தகட்ட காட்சிக்காக காத்திருக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். 

- ஆ.விஜயானந்த்
 

அடுத்த கட்டுரைக்கு