Published:Updated:

“மோடி வித்தை காட்டுவார்... நன்மை செய்யமாட்டார்...!” விளாசும் சி.மகேந்திரன் #Demonetisation

“மோடி வித்தை காட்டுவார்... நன்மை செய்யமாட்டார்...!” விளாசும் சி.மகேந்திரன் #Demonetisation
“மோடி வித்தை காட்டுவார்... நன்மை செய்யமாட்டார்...!” விளாசும் சி.மகேந்திரன் #Demonetisation

“மோடி வித்தை காட்டுவார்... நன்மை செய்யமாட்டார்...!” விளாசும் சி.மகேந்திரன் #Demonetisation

க்கள் நலக் கூட்டணியிலிருந்து ம.தி.மு.க வெளியேறி விட்டது. இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று (27.12.2016) அறிவித்தார். மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிரான முடிவுகளையே, அண்மைக்காலமாக வைகோ எடுத்து வந்தார். மக்கள் நலக் கூட்டணியில் நீடித்து வந்த கருத்து வேறுபாடுகள்தான், வைகோவின் இந்த அதிரடி முடிவுக்கு காரணமா? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி. மகேந்திரனிடம் கேட்டோம்.

"மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வைகோ வெளியேற உண்மையான காரணம் என்ன?"

"கூட்டணியில் இருக்கும்போது, அவ்வப்போது எதிர் கருத்து சொல்வார். அது வைகோவின் தனிப்பட்ட கருத்து. அதைப்பற்றி நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அப்படிப் பேசுவதால், எங்களுக்குள் எவ்விதப்பிரச்னையும் ஏற்பட்டதில்லை. அனைவரும் ஒன்றாக இருந்துதான் பணியாற்றி வந்தோம். ஆனால், அவர் திடீரென்று ஏன் இப்படி கூட்டணியை விட்டு வெளியேறினார் என்று தெரியவில்லை. இதைப்பற்றி கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் ஆலோசித்த பின்னரே என்னால் பதில் சொல்ல முடியும்"

"மக்கள் நலக் கூட்டணியை விட்டு வைகோ வெளியேறி இருப்பது, பலமா? பலவீனமா?"

"உண்மையை சொல்லப்போனால், எங்களுக்கு எந்தப் பலவீனமும் இல்லை. மக்கள் நலக் கூட்டணியானது, ஒரு பரிசோதனை கூட்டணி. இதற்குமுன் இதுபோன்றதொரு கூட்டணி அமைந்ததில்லை. அதனால் இப்படிப்பட்ட ஒரு கூட்டணி அமைந்தால், வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு முன்னோட்டமே இந்த மக்கள் நலக் கூட்டணி. இதிலிருந்து அனைத்துக் கட்சி தலைவர்களும் நல்ல அனுபவங்களைப் பெற்றுக்கொண்டோம். அதனால், இங்கு யாரும் யாரையும் நம்பி இருக்கவில்லை. இந்தக் கூட்டணி ஆரம்பித்த காலத்தில் இருந்தே, அதாவது சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரும், தேர்தல் முடிந்த பின்பும், பல பிரச்னைகள் இருந்தன. சில நேரங்களில் விஜயகாந்த் முன் வைக்கக்கூடிய கருத்துகள், பல நேரங்களில் வைகோவின் எதிர் கருத்துகள் போன்றவை கூட்டணிக்குள் பல நெளிவு, சுளிவுகளை உண்டாக்கியது. இதனால் கொள்கை அடிப்படையில் பல கருத்து வேறுபாடுகள் வந்தன. ஆனால் கூட்டணி உடையக் கூடாது என்பதில் நாங்கள் அனைவரும் உறுதியாக இருந்தோம். ஆனாலும் சொந்த விருப்பத்தின் காரணமாக, வைகோ கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார். அவர் வெளியேறியதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து கூட்டணியை வழி நடத்தும். அதற்கான தளத்தை வைகோ அமைத்துக் கொடுத்து விட்டார்".

"தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், தனக்கும், சேகர் ரெட்டிக்கும் சம்பந்தமே இல்லை என்கிறாரே?"

"சம்பந்தம் இல்லாமலா வருமான வரித்துறையினர் ரெய்டு வருவார்கள். ஆனாலும், சர்ச் வாரன்ட் இருந்துதான் ஒருவர் வீட்டில் ரெய்டு நடத்த வேண்டும் என்பது அவசியம். அதுபற்றி தீர விசாரித்தால்தான் எதுவும் சொல்ல முடியும். ஆனால் ஊழலுக்கும், தனக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் அவர் பேசுவதைத்தான் நம்ப முடியவில்லை. காஞ்சிபுரத்தில் கலெக்டராக ராம மோகன ராவ் இருந்தபோது, எவ்வளவு மணல் கொள்ளை நடந்தது? இதெல்லாம் அவருக்குத் தெரியாமலா இருந்திருக்கும்?"

"கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ரெய்டு பாய்ச்சல் அதிகமாக இருக்கிறதே? இதில் மத்திய அரசுக்கு உள்நோக்கம் இருக்கிறதா?"

"வருமான வரித்துறையினர் ரெய்டு என்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம்தான். தமிழ்நாட்டில் ஊழல் என்பது பல ஆண்டுகளாகவே பின்னிப் பிணைந்து விட்டது. தமிழ்நாட்டின் வளங்கள், பல கால கட்டங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு அடுத்த நாட்டுக்கு விற்கப்பட்டு விட்டது. இயற்கை வளங்களான மணல் மற்றும்கிரானைட்டுகளை கொள்ளையடித்து விட்டனர். மக்களுக்குச் செல்ல வேண்டிய நல்ல திட்டங்களும் தடுத்து நிறுத்தி, அத்திட்டங்களுக்கான பணத்தை ஊழல் செய்யும் நிலையும் தொடர்கிறது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்குத் தெரியாமல் ஊழல்கள் நடைபெற வாய்ப்பில்லை. ஊழலைத் தடுக்க வருமான வரித்துறை ரெய்டு என்பது வரவேற்கத்தக்கது தான் என்றாலும், மொத்த ரெய்டும் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கிறது. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற ரெய்டுகள் நடைபெறவில்லை. மற்ற மாநிலங்களை விட்டுவிட்டு, தமிழ்நாட்டை மட்டும் குறிவைப்பது, மோடியின் மிகப்பெரிய சூழ்ச்சி. இந்திய வரலாற்றில் தலைமைச் செயலகத்துக்குள் துணை ராணுவப்படையுடன் நுழைந்து, ரெய்டு நடத்தியது இதுவே முதல்முறை. இப்போது இருக்கும் அரசியல்வாதிகளைப் பயமுறுத்தி தமிழ்நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மோடி செய்யும் நாடகம்தான் இந்த ரெய்டு.

"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லப்படுகிறதே. ஆனால் அது குறித்து, மத்திய அரசும், அ.தி.மு.க தலைமையும் மௌனம் சாதிக்கின்றனவே?"

"ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்குனு மக்கள் கேட்டா, அரசும், அ.தி.மு.க தலைமையும் பதில் சொல்லியே ஆகணும், ஆனால் அவர்கள் யாரும் எதுவும் சொல்லவில்லை. மருத்துவமனை கூட வாய் திறக்கமால் இருக்கிறது. உண்மையான அறிக்கையை தெரிந்து கொள்ள அனைவருமே ஆவலோடுதான் இருக்கிறோம்".

"அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா தான் வரவேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் கூறுகிறார்களே?"

"ஜெயலலிதா, தனக்கான அரசியல் வாரிசை உருவாக்காமல் சென்றதே இந்தப் பிரச்னைக்கெல்லாம் காரணம். இறுதி காலங்களிலாவது கட்சியைப் பற்றியும், பொறுப்புகளைப் பற்றியும் சொல்லியிருக்கலாம். இப்போது அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி என்பது அவர்கள் கட்சிக்குள் நடக்கும் பிரச்னை. அவர்களே முடிவு செய்து கொள்வார்கள்".

"50 நாட்கள் பொறுத்திருங்கள் புதிய இந்தியாவை உருவாக்கிக்காட்டுகிறேன் என்று பிரதமர் மோடி சொன்னார். அவர் சொன்ன 50 நாட்கள் இன்றோடு முடிவடைகிறது. பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிட்டதா?".

"50 நாட்கள் இல்லை, 50 வருஷம் ஆனாலும் மோடியால் இந்தியாவுக்கு ஒரு நன்மையையும் செய்ய முடியாது. கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று சொல்லி அனைத்து மக்களையும் அழித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இடைத்தரகராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு ஒன்றும் அறியா மக்களை பகடைக் காயாக மாற்றியுள்ளார். இதுதான் உண்மை. மோடியால் வித்தை மட்டுமே செய்ய முடியும். நாட்டுக்கு நன்மை எதுவும் செய்ய முடியாது"

- ஜெ. அன்பரசன், படம்: தி.ஹரிஹரன் 

அடுத்த கட்டுரைக்கு