Published:Updated:

மனம் மாறுகிறாரா சசிகலா?! - எதிர்ப்பை எதிர்கொள்ள புது வழி 

மனம் மாறுகிறாரா சசிகலா?! - எதிர்ப்பை எதிர்கொள்ள புது வழி 
மனம் மாறுகிறாரா சசிகலா?! - எதிர்ப்பை எதிர்கொள்ள புது வழி 

மனம் மாறுகிறாரா சசிகலா?! - எதிர்ப்பை எதிர்கொள்ள புது வழி 

அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நாளை நடக்க இருக்கிறது. இன்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த தகராறை சசிகலா எதிர்பார்க்கவில்லை. 'பொதுக்குழுவில் சில மாறுதல்களைச் செய்யலாமா எனவும் ஆலோசித்து வருகிறார்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா முன்னிறுத்தப்படுகிறார். அவருக்கு எதிராக இருந்த சீனியர்கள் பலரும், சசிகலாவின் தலைமையை ஏற்றுச் செயல்பட உள்ளனர். ஆனால், ' 2011-ம் ஆண்டு கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலாவுக்கு, உறுப்பினர் அட்டையையே ஜெயலலிதா கொடுக்கவில்லை. கட்சியில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக உறுப்பினர்களாக இல்லாதவர்கள் போட்டியிட முடியாது. ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் போட்டியிடுவதற்கு விதியில் இடமில்லை' என அவருக்கு எதிராக, சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார் அ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. இந்நிலையில், இன்று மதியம், 'பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட விண்ணப்பம் கொடுங்கள்' என்று கேட்டு, ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலத்துக்குச் சென்றனர் புஷ்பாவின் ஆதரவாளர்கள்.

அடிதடி, தகராறு என பெரும் கலவரச் சூழலே மூண்டது. "பொதுக்குழுவை நடத்தவிடாமல் செய்வதற்கான வேலைகளில் சசிகலா புஷ்பா ஈடுபட்டிருக்கிறார். நாளை வானகரத்திலும் தகராறு செய்தவற்கும் வாய்ப்பு உள்ளது. சசிகலாவுக்கு எதிரானவர்கள் எதையாவது செய்வார்கள் என்பதால்தான், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தினார் சசிகலா. அவரும், ' நீங்கள் பதவிக்கு வருவதில் எந்தத் தயக்கமும் இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன்' எனப் பதில் கொடுத்தார். ஆனால், நடக்கும் சூழல்கள் அனைத்தும் தனக்கு சாதகமாக இல்லை என்பதை சசிகலா உணர்ந்திருக்கிறார்" என விவரித்த கார்டன் ஊழியர் ஒருவர், 

"பொதுச் செயலாளர் பதவியை எதிர்த்து வழக்கு ஒருபுறம், வருமான வரித்துறையின் நெருக்குதல் மறுபுறம் என மத்திய அரசு மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தநேரத்தில், 'பொதுச் செயலாளர் பதவிக்கு வருவது சரியாக இருக்குமா' என தீவிர யோசனையில் இருக்கிறார் சசிகலா. கடந்த வாரத்தில், பொதுக்குழுவில் ஏழு நிமிடம் பேசுவதற்கு குறிப்புகளை எடுத்து வைத்திருந்தார். 'பேப்பரைப் பார்த்துப் பேசலாமா? பேப்பர் இல்லாமல் பேசலாமா?' என மன்னார்குடி உறவு ஒருவரிடம் கேட்டிருக்கிறார். அவரோ, 'பேப்பர் இல்லாமல் பேசினால், நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால், சரியாகப் பேசாவிட்டால் நிர்வாகிகள் மத்தியில் வேறு மாதிரியான தோற்றம் ஏற்படும். அம்மாவே பேப்பரைப் பார்த்துத்தான் படிப்பார்' என விளக்கினார். அந்த அளவுக்கு ஒத்திகை பார்த்து வந்தவர், நேற்று முன்தினம் பேசும்போது, 'பொதுக்குழுவில் பங்கேற்காமல் கார்டனில் இருப்போம். நிர்வாகிகள் தீர்மானம் இயற்றிவிட்டு வந்த பிறகு, தலைமைக்கழகம் செல்வோம்' என்றுதான் நினைத்தார்.

'நீங்கள் வந்தால்தான் நிர்வாகிகள் மத்தியில் உற்சாகம் ஏற்படும்' என அவரிடம் விளக்கியிருக்கிறார்கள் சீனியர்கள். தற்போது நடக்கும் சில விஷயங்களால் அதிருப்தியில் இருக்கிறார். 'கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று அம்மா பெயரைத்தான் இதுவரையில் தொண்டர்கள் கூறி வந்தனர். இப்போதும் அந்தப் பதவியை அவருக்கே ஒதுக்கி வைப்போம். விதிகளில் சில மாற்றங்களைச் செய்துவிட்டு, துணைப் பொதுச் செயலாளராக பதவியேற்கலாமா?' என ஆலோசனை கேட்டிருக்கிறார்.

இதனை மன்னார்குடி உறவுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களிடம் தொடர்ந்து பேசிய சசிகலா, 'கட்சியின் பொதுச் செயலாளருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரத்தை துணைப் பொதுச் செயலாளருக்கு கொடுக்க வைப்போம். அம்மாவுக்கான அதிகாரம் அப்படியே தொடர்வது போல் இருந்தால்தான், தொண்டர்கள் மத்தியில் நம்மைப் பற்றிய நம்பிக்கை வரும். நிலைமை சுமூகமாக முடிந்த பிறகு, அடுத்தகட்டத்தைப் பற்றி முடிவெடுப்போம்' எனவும் பேசியிருக்கிறார்.

கட்சியில் சசிகலா பெயரை டேமேஜ் செய்யும் வகையில் செயல்பட்டவர்கள் எல்லாம், அவரைப் பற்றி நல்ல இமேஜை உருவாக்கப் பாடுபட்டு வருகிறார்கள். அந்தளவுக்கு மன்னார்குடி அதிகாரம் அவர்களை வளைத்துவிட்டது. 'துணைப் பொதுச் செயலாளர் பதவி, நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று ஜெயலலிதா பெயரையே முன்னிறுத்துவது' என ஆலோசனைகள் தீவிரமாக நடந்தாலும், 'கட்சி பிளஸ் ஆட்சி அதிகாரத்தில் நுழைவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பை நழுவவிட்டுவிடக் கூடாது' என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் மன்னார்குடி உறவுகள். 

- ஆ.விஜயானந்த்

அடுத்த கட்டுரைக்கு