Published:Updated:

’எழுத்தாளர்’ ஜெயலலிதாவின் நிறைவேறாமல் போன சுயசரிதை ஆசை!

’எழுத்தாளர்’ ஜெயலலிதாவின் நிறைவேறாமல் போன சுயசரிதை ஆசை!
News
’எழுத்தாளர்’ ஜெயலலிதாவின் நிறைவேறாமல் போன சுயசரிதை ஆசை!

’எழுத்தாளர்’ ஜெயலலிதாவின் நிறைவேறாமல் போன சுயசரிதை ஆசை!

மறைந்த முன்னாள் முதல்வர் பன்முகத் திறமை கொண்டவர் என்பது அனைவருக்கம் தெரியும். நடிப்பில் மட்டுமல்ல படிப்பு விளையாட்டு என அனைத்திலும் மெடலிஸ்ட்தான். விளையாட்டைப் பொறுத்த வரை, டென்னிசில் இருந்து குதிரையேற்றம் வரை ஜெயலலிதாவுக்கு அத்துப்படி. நடிப்புக்காக பல விருதுகளையும் நிறைய பெற்றுள்ளார். ஆனால், அவர் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளரும்கூட என்பதுதான் பலரும் அறிந்திடாத விஷயம். 

’எழுத்தாளர்’ ஜெயலலிதாவின் நிறைவேறாமல் போன சுயசரிதை ஆசை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திரைத்துறையின் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்த போதே, ஜெயலலிதா பல சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். 1980ம் ஆண்டு 'எண்ணங்கள் சில ' என்ற பெயரில் துக்ளக்கில் தொடர் எழுதியிருக்கிறார். அதுபோல் 'தாய்' வார இதழில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 'எனக்குப் பிடித்தவை' என்ற தலைப்பில் தொடர்ந்து பல கட்டுரைகளை ஜெயலலிதா படைத்து வந்தார். பின்னர் இந்த கட்டுரைகள் 'மனதை தொட்ட மலர்கள்' என புத்தகமாக வெளியிடப்பட்டது. 

ஜெயலலிதாவுக்கு பிடித்த ஓவியர் லியார்னடோ டாவின்சி. 'தாய் ' வார இதழில் தனக்கு பிடித்த ஓவியர் என்ற பெயரில் லியார்னடோ பற்றி ஜெயலலிதா கட்டுரை வடித்திருக்கிறார். பிடித்த நாவல் என சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய 'டேவிட் காப்பர்பீல்ட்டைக் குறிப்பிட்டிருக்கிறார். அது குறித்தும் 'தாய்' வார இதழில் எழுதியுள்ளார் ஜெயலலிதா. 

ஜெயலலிதா எழுதிய இரு சிறுகதைகள் குமுதம், கல்கி இதழ்களில் வெளி வந்துள்ளன. கல்கியில் 'உறவின் கைதிகள் ' என்ற பெயரில் தொடர்கதை வெளிவந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஜெயலலிதா பொறுத்துக் கொண்டதே இல்லை. வெகுண்டெழும் குணம் அப்போதிருந்தே அவரிடம் இருந்தது. பெண் ஒருவரை காவல்துறையினரே சூறையாடியதை மையமாக வைத்தும் 'துக்ளக்' இதழில் கட்டுரை எழுதியிருக்கிறார். 

ஜெயலிலிதா எழுதும்  'நெஞ்சிலே ஒரு கனல்  தொடர் அடுத்த இதழில் இருந்து ஆரம்பம் என'  அந்த காலத்திலேயே வார இதழ்கள் விளம்பரம் வெளியிட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. அது போல் 'நீயின்றி நான் இல்லை' என்ற நாவலையும் ஜெயலலிதா எழுதியிருக்கிறார். 

தமிழில் 4 முழு நீள நாவல்களை ஜெயலலிதா எழுதியிருக்கிறார்.. ஆங்கிலம், தமிழ் மொழிகளில் பல கட்டுரைகளை வடித்திருக்கிறார். ஒரு முறை ஜெயலலிதா பத்திரிகையாளராகவும் மாறியிருக்கிறார். செய்தியாளராக மாறி அவர் பேட்டி கண்டது அவரது குருவிடம்தான். 'பொம்மை' இதழுக்காக ஜெயலலிதா, எம்.ஜி.ஆரிடம் பேட்டி எடுத்திருக்கிறார். அப்போது கேள்விகளையும் அவரே தயார் செய்திருக்கிறார் என கூறுகிறார்கள். 

’எழுத்தாளர்’ ஜெயலலிதாவின் நிறைவேறாமல் போன சுயசரிதை ஆசை!

ஜெயலலிதா எழுதிய நாவல்களில், மிகச்சிறந்தததாக கருதப்படுவது 'உறவின் கைதிகள்'. இந்த கதையை மிக அற்புதமாக ஜெயலலிதா எழுதியிருப்பார். காதலும் அன்பும் நிறைந்த ஓர் இளம் பெண் பார்வையில் கதை ஓட்டம் செல்லும். பெண்களை துச்சமாக மதிக்கும் நடிக்கும் நடிகரின் வலையில், பெண் ஒருவர் விழுகிறார். இருவருமே காதலில் விழுகின்றனர்.   பெண் கர்ப்பமாகிறாள்.   அதிர்ச்சியூட்டுகிற ஒரு கிளைமாக்ஸ். அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு கதைக்களத்தை ஜெயலலிதா தேர்வு செய்திருக்கிறார் என்றால் எத்தனை தைரியம் இருக்க வேண்டும். அந்த நடிகர் அறிமுகமாகும் தருணத்தில் இருந்து இறப்பு வரை ஒரு மூச்சில் படித்து விட வேண்டுமென்ற ஆர்வத்தை அந்த கதையில் பார்க்க முடியும். அப்படி ஓர் எழுத்து நடை.  

’எழுத்தாளர்’ ஜெயலலிதாவின் நிறைவேறாமல் போன சுயசரிதை ஆசை!

அந்தக் கதையில் ஓர் அத்தியாயத்தில் மாணவிக்கும் நடிகருக்கும் தொலைபேசி உரையாடல் நடைபெறுகிறது. உரையாடல் என்றால் பேச்சு எல்லாம் அல்ல. தொலைபேசி உரையாடல் கூட மௌனமாக நகரும்விதத்தில் அந்த அத்தியாயம் செல்லும். எழுத்தில் மௌனத்தை கொண்டுவருவது மிகவும் கடினம். ஆனால் அந்த அத்தியாயம் முழுவதுமே காதலின் தவிப்பையும் ஏக்கத்தினையும் கூட   மிக அருமையாக எழுத்தில் வடித்திருப்பார் ஜெயலலிதா. 

மிகச்சிறந்த நடிகையாக,ஆளுமையாக, அரசியல்வாதியாக மட்டுமே நமக்குத் தெரிந்த ஜெயலலிதா, அரசியலில் முழுமையாக ஈடுபடத் தொடங்கிய பின், பணிச் சுமை காரணமாக எழுதுவதை நிறுத்தினார்.  ஆனாலும், அவரது அடி மனதில் தனது சுயசரிதையை எழுத வேண்டுமென்ற தீராத ஆசை இருந்தது. ஆனால் கடைசி வரை அது நிறைவேறவில்லை! 

-எம்.குமரேசன்