Published:Updated:

செல்லாக்காசு... எல்லையில் ராணுவ வீரர்கள்... அவதூறு..! பிரதமர் மோடிக்கு 5 கேள்விகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செல்லாக்காசு...  எல்லையில் ராணுவ வீரர்கள்... அவதூறு..!  பிரதமர் மோடிக்கு 5 கேள்விகள்
செல்லாக்காசு... எல்லையில் ராணுவ வீரர்கள்... அவதூறு..! பிரதமர் மோடிக்கு 5 கேள்விகள்

செல்லாக்காசு... எல்லையில் ராணுவ வீரர்கள்... அவதூறு..! பிரதமர் மோடிக்கு 5 கேள்விகள்

ணக்கம்... என் அன்புக்குரிய இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களே... முதலில் உங்களுக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  ஏ.டி.எம்-மில் நாள் முழுவதும் நின்றதால் உடல் முழுவதும் வியர்வை... கைகள் முழுவதும் வியர்வை உண்டாக்கிய உப்புப் படிமங்கள். அந்த வியர்வையுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.  இந்த எழுத்திலிருந்து எழும் வியர்வை நாற்றம் உங்களுக்கு அசெளகர்யத்தைத் தரலாம்... முதலில் அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்... என்னை மன்னியுங்கள்!

உங்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு என்னிடம் இன்னொரு காரணமும் இருக்கிறது. என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. அது அனைத்தும் உங்களுக்கு அசெளகரியம் தரும் கேள்விகள். அந்தக் கேள்விகளை புத்தாண்டின் முந்தைய நாள் அன்று உங்களிடம் முன் வைப்பதற்காக தான், அந்த இன்னொரு மன்னிப்பு. என்னை மன்னியுங்கள்.  

ஒரு காலத்தில் நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை ஒளிக் கீற்றாகத் தெரிந்தீர்கள். அந்த நம்பிக்கை  ஒளிக்கீற்றைப் பிடித்துக் கொண்டு இருளிலிருந்து தப்பிச் செல்லலாம் என்று நினைத்தோம். ஆனால், இப்போது இருளிலிருந்து, பேரிருலுக்குள் தள்ளுகிறீர்களோ என்று எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அந்த அச்சத்திலிருந்து எழுந்தது தான் எங்களின் இந்த 5 கேள்விகள். இது எதுவும் என் கேள்விகள் அல்ல. ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கக் காத்திருந்தபோது, என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள். நான் சமாளிக்க நினைத்த கேள்விகள்!

ஏன் பொய் சொன்னீர்கள் மோடி?

செல்லாக்காசு அறிவிப்பை நீங்கள் அறிவித்த அந்த நவம்பர் 8-ம் தேதி இரவு, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவ்வளவு உற்சாகமான இரவு அது. எங்கள் வாழ்க்கை சுபிக்‌ஷம் அடையப் போகிறது என்று நாங்கள் நம்பிய இரவு.  நீங்கள் அந்த அறிவிப்பில் பயன்படுத்திய ஒவ்வொரு சொற்களும் நினைவிருக்கிறது. அதைவிட அன்றைய உங்களின் உடல்மொழி இன்னும் நினைவில் நிழலாடுகிறது. ஆனால் அந்த உடல்மொழி குறித்து நண்பர்கள் சிலர் அச்சம் தெரிவித்தார்கள் . “இந்த உடல்மொழி  நம்மை எதேச்சதிகாரத்தை நோக்கி அழைத்துச் செல்லும். அதில் ஆணவம் மட்டுமே தெரிகிறது” என்றார்கள். நான் அதை நம்பவில்லை. உங்கள் மீது உள்ள கோபத்தில் பிதற்றுகிறார்கள் என்று நம்பினேன். அவர்களுடன் பேசுவதைக் கூட நிறுத்தினேன்.  இப்போது, அதே நண்பர்கள் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள். “பிரதமர் கறுப்புப் பணத்தை மீட்கத்தானே செல்லகாசு நடவடிக்கை என்றார். ஆனால், இப்போது பணமில்லா பொருளாதாரம் (Cashless Economy) என்கிறாரே இதை ஏன் நவம்பர் 8-ம் தேதியே சொல்லவில்லை.  உங்கள் பிரதமர் பொய் சொல்கிறாரா?” என்கிறார்கள். அவர்கள், “பணக்காரர்கள் மட்டும்தான் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்கள்.  50 நாளில் எல்லாம் சரியாகும் என்று மோடி சொன்னார். ஆனால், இப்போது அதுவா நடக்கிறது? அப்படியானால், பிரதமர் நம்மிடம் பொய் சொல்லி இருக்கிறார் என்று தான் பொருள்” என்கிறார்கள். இவர்களுக்கு நான் என்ன சொல்லட்டும் ? இல்லை. எல்லாம் சரியாகிவிட்டது என்று பொய் சொல்லலாம் என்றால் அதுவும் முடியவில்லை. ஏனென்றால், இந்த விவாதமே, ஏ.டி.எம் வாசலில்தான் நடந்தது. என்ன செய்யட்டும் எங்கள் பிரதமரே. நீங்கள் பொய் சொன்னீர்களா என்ன?

 உங்களைச் சுற்றி ஒருவர் கூட நல்லவர் இல்லையா?

பழைய தாள்களைத் தடை செய்வதற்கு முன், நீங்கள் புதிய தாள்களைக் கணிசமான அளவில் அச்சடித்து வைத்திருந்தால், இந்தப் பிரச்னை வந்து இருக்காது அல்லவா? என்று அதே நண்பர்கள் கேட்கிறார்கள். அவர்களிடம் சொன்னேன், “இல்லை. அப்படி அச்சடித்து வைத்தால், இந்த தடை நடவடிக்கை வெளியே கசிந்துவிடும். அதனால்தான் தன் அமைச்சர்களிடம் கூட மோடி சொல்லவில்லை” என்றேன் பெருமையுடன். அவர்கள் என்னைப் பார்த்து பரிதாபமான பார்வை ஒன்றை வீசி இப்படிக் கேட்டார்கள். “பிரதமர், தன் சக அமைச்சர்களைக் கூட நம்பவில்லை என்றால், அவருக்கு நம்பிக்கை அளிக்கும் ஒருவர் கூட அவர் சகாவாக இல்லை என்று அர்த்தம். அப்படியானால், அவர் தேசத்தைப் புனரமைக்கும் வேலையை தன் கட்சியிலிருந்தே தொடங்க வேண்டும். கரைபடியாத, உண்மையாக மக்களை நேசிப்பவர்களை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கவேண்டும்.” என்கிறார்கள். அவர்களின் இந்த வாதம் நியாயம்தானே... உங்களைச் சுற்றி ஒருவர் கூட நல்லவர் இல்லையா என்ன...?   ஆனால், இப்போதும் அவர்களிடம் உங்களை விட்டுக் கொடுக்காமல் தான் பேசினேன். 

ஏன் 2000 ரூபாய் தாள்கள்?

ஊழலை, கறுப்புப் பணத்தை ஒழிப்பதுதான் உங்கள் நோக்கம் என்றால். ஏன் 2000 ரூபாய் தாள்கள்? இது பணப்பதுக்கலை இன்னும் இலகுவாக்காதா? என்கிறார்கள். இதற்கு என்னிடம் எந்தப் பதிலும் இல்லை. ஏ.டி.எம் கூட்டத்தில் இந்தக் கேள்வி என் காதில் விழாதது போல் இருந்துவிட்டேன். ஆனால், அந்த தேசத்துரோகிகள் விடுவதாக இல்லை. இன்னொரு கேள்வியையும் முன் வைக்கிறார்கள். “சரி குறைந்தபட்சம் இந்த புதுத் தாளை பழைய 500, 1000 ரூபாய் தாள் அளவில் அடித்திருந்தால், ஏ.டி.எம்-களில் வைப்பதற்கு இலகுவாக இருந்திருக்கும். ஏ.டி.எம்-மில் பணம் வைக்கும் தட்டு நிறுவுவதில் காலதாமதம் ஆகி இருக்கிறது என்கிறார்கள். இந்தக் கேள்வியைக் கேட்ட ஒருவர் ஏ.டி.எம்-களுக்கு பணம் நிரப்பும் ஒரு நிறுவனத்தில் பணி செய்கிறார்?” எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.  

சாதியற்ற இந்தியா...?

நீங்கள் இந்தப் பணமற்ற பரிவர்த்தனைக்கான செயலிக்கு ‘பீம்’ என்று பெயர் வைத்திருக்க வேண்டாம். இப்போது சாதிக்கு எதிராக உண்மையாகப் போராடுபவர்களும் இணைந்து விட்டார்கள்.  ‘பீம்’ அம்பேத்கர்யத்தை நினைவுப்படுத்தும் சொல்.  அம்பேத்கர், 'Casteless' இந்தியாவை முன்மொழிந்துவிட்டுச் சென்றார். ஆனால், அதற்கு எதுவும் ஆக்கப்பூர்வமாகச் செய்யாமல் அந்தப் பதத்தை 'Cashless' இந்தியாவுக்காகப் பயன்படுத்துகிறீரகள் என்கிறார்கள்.  அவர்கள் கைகளில் ஏதோ புள்ளிவிபரத்தையும் வைத்திருக்கிறார்கள்.  அந்த புள்ளிவிபரத்தில் இவ்வாறாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “2014-ம் ஆண்டில், 28 ஆணவ கொலை வழக்குகள்  பதிவாகி இருக்கின்றன.2015-ல் மட்டும் ஆணவக் கொலையால் 251 பேர் இறந்ததாக வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.” அவர்கள் சொல்லும் கணக்குப்படி பார்த்தால் இந்தியாவில் ஆணவ கொலை எண்ணிக்கை 800 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இதற்கு நான் அவர்களிடம் என்ன பதில் சொல்லட்டும்? நான் சமாளிக்கலாம் என்று பார்த்தால் குஜராத்தில் ஒடுக்கப்பட்டவர்களை,  கட்டிவைத்து ஆதிக்கச் சாதியினர் தாக்கும் உனா சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் என்ன செய்ய...?

மாற்று கருத்து உடையவர்கள் இப்படித்தான் கையாளப்படுவார்களா...?

இவர்களின், கேள்விகளிலிருந்து தப்பிக்க, பணம் எடுக்காமல் சென்றுவிடலாம் என்று பார்த்தால் முடியவில்லை. குழந்தைக்கு பயங்கர காய்ச்சல். மருத்துவர் வங்கி அட்டைகளை ஒப்புக் கொள்ளமாட்டேன் என்கிறார். பணமாகத்தான் கேட்கிறார்! இதோ அடுத்த கேள்வியுடன் என்னை நெருக்கத் தொடங்கி விட்டார்கள். ”பி.ஜே.பி மற்றும் அரசுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பவர்கள் மீது, மோசமான பாலியல் அவதூறுகள், கொலை மிரட்டல்கள் விடுப்பதற்கு என்றே சில குழுக்கள் இருக்கின்றன. எதிர் கருத்தாளர்களுக்கு எதிரான கருத்துருவாக்கத்தை உண்டாக்க அவர்கள் செயல்படுகிறார்கள். இப்படித்தான் அமீர்கானுக்கு எதிராக திட்டமிட்டே அவதூறு பரப்பினார்கள் என்று இந்த அணியின் முன்னாள் தன்னார்வலர் சாத்வி கோசால் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்” என்கிறார்கள். மறுத்துப் பேசலாம் என்றால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஜோதிமணிக்கு எதிராகக் கட்டவிழித்துவிடப்படும் வக்கிர தாக்குதல்கள் நினைவுக்கு வருகின்றன. இவர்களுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்?

இந்தக் கேள்வியை அவர் முடிக்கவும், நான் ஒரு வழியாக ஏ.டி.எம்-க்குள் நுழையவும் நேரம் சரியாக இருந்தது. ஒரு பெருமூச்சுடன் அட்டையை இயந்திரத்தில் செலுத்தினால்... “Unable to dispense cash Please Visit nearby ATM" என்று எழுத்து வருகிறது. 

ஹூம்.  சொல்ல மறந்து விட்டேன். எனக்கு அடுத்ததாக அந்த வரிசையில் நின்றவரின் மகன் ராணுவத்தில் இருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக எல்லையில் தான் நிற்கிறார். 

பீம் செயலி தொட்டக்கவிழாவில் நீங்கள் பயன்படுத்திய உடல்மொழி வசீகரமாக இருந்தது. புத்தாண்டு வாழ்த்துகள்...! புதிய இந்தியாவில் சந்திப்போம்.

அன்புடன்
காவியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு