Published:Updated:

ஜெயலலிதாவுக்குப் பிடித்த காதல் கதை!

ஜெயலலிதாவுக்குப் பிடித்த காதல் கதை!
ஜெயலலிதாவுக்குப் பிடித்த காதல் கதை!

நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். வதந்திகள் விஷயத்தில் மட்டும் அல்லாமல் தலைமுறை தலைமுறையாக நமக்கு வந்துள்ள பழைய கதைகளும் அப்படித்தான்.

பெரியவர்கள் நமது பிள்ளைப் பிராயத்தில் நமக்கு எத்தனையோ கதைகளைச் சொல்கிறார்கள். அந்த இளம் வயதில் கேட்டு அறியும் கதைகள் நம் நினைவை விட்டு அகலுவதே இல்லை. நாம் பெரியவர்கள் ஆன பிறகு நம் குழந்தைகளுக்கு அதே கதைகளைச் சொல்லி அவர்களை மகிழ்விக்கிறோம்.

பிரத்யேகமாக குழந்தைகளுக்கென்று பல கதைகள் இருக்கின்றன. இந்தக் குழந்தைகள் கதைகளை ஆங்கிலத்தில் ''FAIRY TALES''' - தேவலோக மாய ஜாலக் கதைகள் என்பார்கள். நூல்கள் தோன்றும் காலத்திற்கு முன்னர் தோன்றிய கதைகள் இவை. தலைமுறை தலைமுறையாக, செவி வழியாக வந்த கதைகள். பெரியவர்கள் சொல்லக் கேட்டு பலர் நினைவில் நிறுத்தி, பின்னர் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து, அப்படி வழி வழியாக வந்து, நவீன காலத்தில் புத்தக வடிவில் சேகரிக்கப்பட்டு கிடைக்கின்றன இக்கதைகள்.

இந்தக் கதைகளைக் கேட்கும் பொழுது, ''இப்படியெல்லாம் கூட உலகில் நடக்க முடியுமா? சாத்தியமே இல்லை. இதெல்லாம் வெறும் கற்பனை" என்று நினைக்கத் தோன்றும்.

பெரும்பாலும் இந்தக் கதைகளின் பெரும்பகுதி கற்பனைதான் என்றாலும் ஆராய்ந்து பார்த்தோமானால், ஒவ்வொரு கதையின் மூலக் கருவும் ஏதோ ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டிருப்பது புலப்படும். அந்த மூலக் கருவைச் சுற்றி காலப்போக்கில் எத்தனையோ கற்பனை விவரங்கள் பின்னப்பட்டிருக்கலாம். ஆனால் மூலக் கரு உண்மையானதாகத்தான் இருக்கும்.

கேட்டுப் படித்துப் பழகிப் போன பழைய கதைகள் எல்லாமே இப்படித்தான். மூலம் உண்மையில் தான் இருக்கும்.

சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளை மகிழ்வித்து வருகிற கதை சிண்ட்ரெல்லா கதை. சிண்ட்ரெல்லா மாயாஜாலத்தில் தோற்றுவிக்கப்பட்ட கண்ணாடி செருப்பை அணிந்திருப்பாள். அதை இளவரசன் அரண்மனையில் விட்டுவிட்டு ஓடிப்போவாள். அவளுடைய பாதம் மிகவும் சிறியது. வேறு எவராலும் அந்தச் செருப்பை அணிந்து கொள்ள முடியாது. எனவே அந்தச் செருப்புக்குச் சொந்தக்காரி யார் என்று தேடி வரும்படி ஆணையிட்டு இளவரசன் ராஜ்யம் முழுவதும் ஆட்கள் அனுப்புவார். எந்தப் பெண்ணால் அந்தக் கண்ணாடி செருப்பை அணிய முடிகிறதோ, அந்தப் பெண்ணையே மணந்து கொள்ளப்போவதாக அறிவிப்பார். அதனால் இளவரசனை மணந்து கொள்ள நாட்டிலுள்ள பெண்களிடையே கடும் போட்டா போட்டி ஏற்படும். ராஜ்யத்தில் உள்ள அனைத்து இளம் பெண்களும், ''நான் தான் அந்தச் செருப்புக்குச் சொந்தக்காரி" என்று கூறிக் கொண்டு முன் வருவார்கள். சிண்ட்ரெல்லாவின் மாற்றாந்தாய் பெற்றெடுத்த பெண்கள் அவளைக் கொடுமைப்படுத்தி மறைத்து வைப்பார்கள். தாங்களே இளவரசனை திருமணம் புரிய முயற்சி செய்வார்கள். ஆனால் அந்தச் செருப்பு வேறு யாருடைய காலுக்கும் சரியாக இராது. கடைசியில் உண்மையான சிண்ட்ரெல்லா வருகிறாள். செருப்பை அணிகிறாள். அதன் பின் இளவரசன் அவளை அடையாளம் கண்டு கொண்டு இருவரும் திருமணத்தில் இணைகிறார்கள். இது கதை.

உண்மையாகவே உலக வரலாற்றில் ஒரு சிண்ட்ரெல்லா உண்டு. ஆனால் அவளது உண்மைப் பெயர் ரோடோபிஸ்.

எகிப்திய நாட்டைச் சேர்ந்த இளம் மங்கை ரோடோபிஸ் ஓர் பேரழகி. ஒருநாள் அவள் நைல் நதியில் குளித்துக் கொண்டிருந்தாள். கரையோரமாக தனது ஆடைகளையும், செருப்புக்களையும் விட்டிருந்தாள்.

அப்பொழுது ஒரு கழுகு அவளுடைய செருப்பு ஒன்றைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது.

எகிப்திய மன்னர் (ஃபேரோ) மைசரினஸ் 500 மைல்களுக்கு அப்பால், மெம்பிஸ் என்ற நகரில் திறந்த வெளி தர்பாரில் அமர்ந்து நீதி வழங்கிக் கொண்டிருந்தார்.

அங்கே பறந்து வந்த அந்தக் கழுகு சரியாக மன்னர் மடியில் அந்தச் செருப்பைப் போட்டு விட்டது.

வானத்திலிருந்து தனது மடியில் விழுந்த செருப்பை எடுத்து ஃபேரோ உற்றுப் பார்த்தார். அதன் அழகும், சிறிய அளவும் அவரைப் பெரிதும் கவர்ந்தது. இவ்வளவு சிறிய பாதம் உடைய மங்கை எத்தகைய பேரழகியாக இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து பார்த்தார். அவளைக் கண்டு பிடித்தே தீர வேண்டும் என்று தீர்மானித்தார்.

செருப்பு அவ்வளவு சிறியதாக இருந்ததால், ரோடோபிஸ்ஸைத் தவிர, வேறு எந்தப் பெண்மணியாலும் அதை அணிந்து கொள்ள முடியவில்லை.

பற்பல இன்னல்கள், இடையூறுகளையெல்லாம் சந்தித்து சமாளித்த பிறகு, இறுதியில் எகிப்திய மன்னர் அவளைக் கண்டுபிடித்து, அவளையே திருமணம் புரிந்து, அவளை எகிப்திய நாட்டின் ராணி ஆக்கினார்.

ஃபேரோ தான் காதலித்து மணந்து கொண்ட ராணி ரோடோ பிஸ்ஸை கவுரவிக்க வேண்டும் என்பதற்காகவே, அவள் நினைவாக கிசேயிலுள்ள மூன்றாம் சமாதியை எழுப்பினார்.
(THE THIRD PYRAMID OF GIZEH)

உலகமே வியக்கும் வண்ணம் ஷாஜகான் மும்தாஜ்க்காக எழுப்பிய காதல் நினைவு மண்டபம் தாஜ்மகால் இந்தியாவில் இன்றும் இருக்கிறது.

அதுபோல் எகிப்திய மன்னர் மைசரினஸ் அரசி ரோடோபிஸ்ஸுக்காக எழுப்பிய காதல் நினைவு மண்டபம் இன்றும் எகிப்தில் இருக்கிறது.

'உண்மைக் கதையில் காதலர்களை இணைத்து வைத்த செருப்பு மிருக ரோமத்தால் செய்யப்பட்டது. கண்ணாடியால் அல்ல.

இந்தக் கதை முதலில் பிரெஞ்சு மொழியில் இருந்தது. 'அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் போது, மொழி பெயர்ப்பாளர் தவறு செய்து விட்டார்.

பிரெஞ்சில் ''Vaire" என்றால் மிருக ரோமம் (FUR), ''Verre" என்றால் கண்ணாடி (Glass). ''Vaire" என்ற வார்த்தையை ''Verre" என்று தவறாகப் புரிந்து கொண்டதால், ''கண்ணாடி செருப்பு" என்று எழுதிவிட்டார். அப்படித்தான் சிந்தரெல்லாம் கதை பிறந்தது.

- தாய் வார இதழில் ஜெயலலிதா எழுதிய தொடரின் ஒரு பகுதி.

தகவல் உதவி: குறள் பித்தன்.