Published:Updated:

வாட்டும் வறட்சி... அதிகரிக்கும் மரணம்... தமிழக அரசின் மவுனம் கலையுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாட்டும் வறட்சி... அதிகரிக்கும் மரணம்... தமிழக அரசின் மவுனம் கலையுமா?
வாட்டும் வறட்சி... அதிகரிக்கும் மரணம்... தமிழக அரசின் மவுனம் கலையுமா?

வாட்டும் வறட்சி... அதிகரிக்கும் மரணம்... தமிழக அரசின் மவுனம் கலையுமா?

யிருக்கு ஆதாரமான உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள்   வறட்சி காரணமாக தினந்தோறும் உயிரிழந்து வருகின்றனர். தினமும் 5 விவசாயிகள், 6 விவசாயிகள் என்று உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மட்டும் 50 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 83 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். வறட்சி பாதித்த பகுதிகளைப் பார்வையிட மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
வறட்சிக்கு முக்கிய காரணியாக சுட்டிக்காட்டப்படுவது மழை. கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்தில் போதுமான மழை பெய்யவில்லை. கடைசியாக எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்குப் பருவமழையும் கையை விரித்து விட்டது.

140 ஆண்டுகளில் இரண்டாவது முறை...

இது குறித்து வானிலை மைய இயக்குனர் பாலசந்திரனிடம் பேசினோம். "அக்டோபரில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்து விட்டது. இனிமேல் குளிர் காலம்தான். வறண்ட வானிலைதான் நிலவும். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவை விட 62 சதவிகிதம் குறைவாகப் பெய்திருக்கிறது. 140 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு வழக்கத்தை விட குறைவாக மழை பெய்திருக்கிறது. 1876-ம் ஆண்டு வழக்கத்தை விட 63 சதவிகிதம் குறைவாக  மழை பெய்திருக்கிறது.
மழை குறைந்திருப்பதன் காரணமாக நிலத்தடி நீர் வெகுவாகக் குறையும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். விவசாயம் பாதிக்கப்படும்.  
தமிழகத்தின் அன்றாட மழை நிலவரம் குறித்து தொடர்ந்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் அறிக்கைகள் அளித்து வருகின்றோம். மாநில அரசைப் பொறுத்தவரை வருவாய்துறை, வேளாண்மை துறைக்கு அறிக்கை தருகின்றோம்" என்றார்.

நெல் விவசாயிகளுக்கு நெருக்கடி

தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கட்ராமனிடம் பேசினோம். "டெல்டா மாவட்டங்களில் நீண்டகாலத்துக்குப் பின்னர் இப்படி ஒரு வறட்சி வந்திருக்கிறது. மழை பொய்த்துப் போனது,  டெல்டா மாவட்டங்களில் அதை ஒட்டிய பகுதிகளில் காவிரியில் தண்ணீர் வராதது ஆகிய காரணங்களால் வறட்சி ஏற்பட்டிருக்கிறது.  வறட்சி குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் அனுப்புகின்றோம் என்று தமிழக அரசு சொல்லி இருக்கின்றது.  
ஆனால், வருவாய்துறை சார்பில் தினந்தோறும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. வறட்சி காரணமாக விவசாயிகள் உயிரிழப்பது இதுதான் முதன் முறை. மகாராஷ்டிரா மாநிலம் விதார்பா போல இது நடந்து கொண்டிருக்கிறது. பருத்தி உள்ளிட்ட பணப்பயிர்  விளைச்சல் பாதிக்கப்பட்டதால்தான் விவசாயிகள் மனமுடைந்து தற்கொலை  செய்து கொள்கின்றனர்.  நெல், கோதுமை பயிரிட்டவர்கள் இதுவரை உயிரிழந்தது இல்லை. ஒரு நெருக்கடியான சூழலில் நெல் விவசாயிகள் இருக்கின்றனர்.

தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும்

விவசாயிகளுக்கு ஒரு புறம் பாதிப்புகள் இருக்க, குடிநீர் தட்டுப்பாடும் வரப்போகிறது. வைக்கோல் உள்ளிட்ட தீவனம் இல்லாததால் விவசாயிகள் கால்நடைகளை விற்று வருகின்றனர். தமிழகத்தில் பஞ்சம் போன்ற சூழல் உருவாகி உள்ளது.
தமிழகத்தில் வறட்சியை ஒரு தேசியப் பேரிடராக அறிவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கவேண்டும். தமிழகத்தில் இப்போது வலிமை இல்லாத தலைமை இருக்கிறது. அனைத்துக் கட்சிகளையும் கூட்டாக அழைத்துச் சென்று மத்திய அரசிடம் முறையிடக் கூடிய தலைமை இல்லை. தமிழக அரசு ஒதுக்கும் நிதியை மட்டும் வைத்துக் கொண்டு வறட்சியைச் சமாளிக்க முடியாது. மத்திய அரசிடம் இருந்து நிதிபெற வேண்டும்.  

ஏக்கருக்கு 25 ஆயிரம் வழங்க வேண்டும்

தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் பயிர் விளைச்சல் 50 சதவிகிதத்துக்கும் கீழே போய்விட்டால் வறட்சி என்று முடிவு செய்யப்படுகின்றது. 80 சதவிகிதம் அளவுக்கு விளைச்சல் பொய்த்துப் போய்விட்டால் அதிக பட்ச வறட்சி என்கின்றனர்.  
வறட்சியால் பாதிக்கப்பட்ட நெல்லுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம், கரும்புக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம், விவசாயத் தொழிலாளர்களுக்கு குடும்பத்துக்கு 25 ஆயிரம் தரவேண்டும்.  

வங்கிகள் கடன் வழங்க மறுப்பு

ஆனால், டெல்டா  மாவட்டங்களில் வயலில் இறந்து போனவர்களை,  கருகிய பயிரைப் பார்த்து மனமுடைந்து இறந்து போனார் என்று அரசு தரப்பில் பதிவு செய்ய மறுக்கின்றனர். இறந்து போன விவசாயியின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. எனவே, அந்தக் குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் கொடுக்கவேண்டும். தமிழ்நாடு அரசு பயிர் கடன் கொடுப்பதை குறைத்துக் கொண்டே வருகிறது. இந்திய வங்கி போன்ற வங்கிகளும் கடன் கொடுப்பதில்லை. வேறு வழியில்லாமல் விவசாயிகள் தனியாரிடம் கடன் வாங்குகின்றனர்.  

விவசாயிகளுக்கு நம்பிக்கை தேவை

விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் கொடுக்கவேண்டும். இழப்பீடு கொடுக்கவேண்டும். இன்ஷூரன்ஸ் தொகையை முழுமையாக வாங்கிக் கொடுக்கவேண்டும். போர்கால அடிப்படையில் இதனைச் செய்யவேண்டும்.
மாவட்ட அமைச்சர்கள், விவசாயிகளுடன் சந்திப்பு நடத்தவேண்டும். அவர்களுக்கு மன தைரியத்தைக் கொடுக்க வேண்டும். பதவியில் இருப்பவர்கள் சொன்னால்தான் நம்பிக்கையாக இருப்பார்கள். மாவட்ட ஆட்சியர்களும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசவேண்டும். ஒரு வகையான வழக்கத்துக்கு மாறான சூழல் இது. இதில் இருந்து தமிழக விவசாயிகளைக் காக்க வேண்டும்" என்றார்.

விவசாயிகள் உயிரிழப்பு பற்றி தெரியாது

தமிழகத்தில் வறட்சி தாண்டவமாடும் நிலையில் விவசாயிகளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய தமிழக வேளாண்மைத்துறை அலட்சியமாக இருக்கிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகி இருக்கும் துரைக்கண்ணு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வறட்சி குறித்து குறைந்தபட்சம் ஆய்வுக் கூட்டங்கள் கூட நடத்தியதில்லை என்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசியதில்லை. விவசாயிகளுக்காக ஒரு அறிக்கை கூட அவர் வெளியிடவில்லை.
இந்தச் சூழலில் வறட்சி குறித்து என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று கருத்துக் கேட்க வேளாண்மை துறை அமைச்சர் துரை.கண்ணுவிடம் பேட்டி எடுக்க முயற்சித்தோம். கடந்த 2-ம் தேதியில் இருந்து தொடர் முயற்சிகளில் ஈடுபட்டோம். தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அலுவலகத்துக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அமைச்சரைச் சந்திக்க அப்பாயிண்மென்ட் கேட்டோம். அவருடைய சீனியர் பி.ஏ அருணாசலம் என்பவர் நம்மிடம் பேசினார். மூன்று மணிக்குப் பேசுங்கள், 6 மணிக்குப் பேசுங்கள் என்று மாற்றி, மாற்றி நம்மை அலைக்கழித்தார். 3-ம் தேதி மதியம் வரை அவரைத் தொடர்பு கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.
ஒரு வழியாக அமைச்சரின் நேரடி செல்போன் எண்ணைப் பிடித்து 3-ம் தேதி மதியம் அமைச்சர் துரை கண்ணுவிடம் வறட்சி காரணமாக எத்தனை விவசாயிகள் உயிரிழந்திருக்கின்றனர் என்று கேட்டோம். "இல்லை. அது எல்லாம் தெரியவில்லை" என்றார்.

-கே.பாலசுப்பிரமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு