Published:Updated:

இப்படியும் நடக்கிறது பத்திரப்பதிவு வில்லங்கத்தில் அமைச்சர், சார்-பதிவாளர் 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இப்படியும் நடக்கிறது பத்திரப்பதிவு  வில்லங்கத்தில் அமைச்சர், சார்-பதிவாளர் 
இப்படியும் நடக்கிறது பத்திரப்பதிவு வில்லங்கத்தில் அமைச்சர், சார்-பதிவாளர் 

இப்படியும் நடக்கிறது பத்திரப்பதிவு வில்லங்கத்தில் அமைச்சர், சார்-பதிவாளர் 

மயக்கத்திலிருந்த ரியல்எஸ்டேட் அதிபரின் கைரேகை மூலம் பதிவு செய்த ஆவணத்தால் சார்-பதிவாளர் தாமுவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உதவியதாக உயரதிகாரிகள், அமைச்சர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் பிச்சைமணி. இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு சுபிதா, ஆதிலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய மூன்று மகள்களும், சக்திகுமார் என்ற மகனும் உள்ளனர். பிச்சைமணி, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த 27.9.2015ல் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிச்சைமணி, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 11.10.2015ல் இறந்தார். இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு  அதாவது, 9-ம் தேதி, 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சக்திகுமாருக்கு செட்டில்மென்ட் டீடாக பிச்சைமணி கொடுத்துள்ளதாக நீலாங்கரை சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சந்தேகமடைந்த சுபிதா, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதை தள்ளுபடி செய்யுமாறு சக்திகுமார், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், நீலாங்கரை சார்-பதிவாளர் தாமுவை, 48 மணி நேரத்தில் கைது செய்யும்படி அதிரடியாக உத்தரவிட்டார்.

இதுகுறித்து சுபிதாவின் கணவர் டாக்டர் சரவணனிடம் பேசினோம். "என்னுடைய மாமனார் பிச்சைமணி பெயரில் துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர் சாலையில் 2 ஏக்கர் இடம், கொடைக்கானலில் ஒரு ஏக்கர் விவசாய நிலம், தேனியில் ஒரு ஏக்கர் நிலம், திருவான்மியூரில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள், அடுத்து அங்கேயே ஒரு வணிக வளாகம் உள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட சில உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்ட அவர், அடையாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சமயத்தில் அவரது சொத்துக்களை செட்டில்மென்ட் டீடாக சக்திகுமார் பெயருக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல், மாமனார் இறந்து 30 நாட்கள் கழிந்த பிறகுதான் எங்களுக்கு தெரியவந்தது. குடும்ப சொத்துப்பிரச்னையை நாங்களே பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து சக்திகுமாரிடம் பேசினோம். ஆனால், என் மனைவி, மற்றும் அவரது சகோதரிகளுக்கு சொத்தில் உரிமை இல்லை என்று சக்திகுமார் தெரிவித்தார். இதனால் வேறுவழியின்றி அனைத்து ஆவணங்களையும் சேகரித்து விட்டு மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தோம். அதன்பிறகு நீதிமன்ற உத்தரவின்பேரில் சக்திகுமார், மாமியார் மாரியம்மாள், சாட்சி கையெழுத்திட்ட ஆறுமுகம், நீலாங்கரை சார்-பதிவாளர் தாமு ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. எப்.ஐ.ஆரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சக்திகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, தாமுவை 48 மணி நேரத்தில் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பிச்சைமணி, கைரேகை பதிவு செய்ததாக சொல்லப்படும் சமயத்தில் அவர் ஐ.சி.யூவில் இருந்துள்ளார். மேலும், பத்திரப்பதிவில் பாலவாக்கம் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது சக்திகுமார், அந்த வீட்டில் இல்லை. போலியாக ஆவணங்களை தயார் செய்துள்ளனர். இதற்கு உடந்தையாக சார்-பதிவாளர் தாமு இருந்துள்ளார். சக்திகுமார், இன்ஜினீயரிங் முடித்து விட்டு மேற்படிப்பை லண்டனில் முடித்தவர். அவருக்கு உறுதுணையாக நீலாங்கரை சார்-பதிவாளர் தாமுவும், சக்திகுமாரின் உறவினரான டாக்டர் ஒருவரும் செயல்பட்டுள்ளனர். செட்டில்மென்ட் டீடு முடிந்த இரண்டு நாட்களில் பிச்சைமணி இறந்தது எங்கள் குடும்பத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது"என்றார். 

பத்திர பதிவுத்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். "நீலாங்கரை சார்-பதிவாளர் தாமு மீது பல புகார்கள் உள்ளன. இந்த சமயத்தில் சக்திகுமாரின் குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர் தாமு. ஏனெனில் பிச்சை மணி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் தாமுவிடம் நல்ல அறிமுகம் இருந்துள்ளது. அந்த பழக்கத்தை வைத்து இந்த செட்டில்மென்ட் டீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தாமுவை சக்திகுமார் தரப்பு நன்றாக கவனித்துள்ளது. தாமுவுக்கு பத்திரப்பதிவு துறையில் செல்வாக்கு அதிகம் உள்ளது. இதனால் அவர் மீது எந்தகுற்றசாட்டுக்கள் பதிவுத்துறைக்கு சென்றாலும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேலும், அமைச்சர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் தாமு இருந்தார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் துறை அதிகாரிகள் பயந்தனர். சக்திகுமார் சம்பவத்தில் கூட பங்கு அந்த அமைச்சர், உயரதிகாரிகளுக்கும் சென்றதால் பிரச்னையை சுமூகமாக மூடிமறைக்க பலவகையில் முயன்றுள்ளனர். நீதிமன்ற தலையீட்டால் தாமு, சிக்கி உள்ளார். இதனால் தாமுவிடம் நடத்தப்படும் விசாரணை அடிப்படையில் உயரதிகாரிகள், அமைச்சர்களுக்கும் சிக்கல் ஏற்படலாம்"என்றனர்.

சக்திகுமார் தரப்பில் கருத்து கேட்க அவரது செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் பதில் அளிக்கவில்லை. 

- எஸ்.மகேஷ் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு