Published:Updated:

“சின்னம்மா என அழைப்பவர்கள் அப்பாவிகளா?” இலக்கிய விழாவில் அரசியல் பேசிய ஜெயமோகன்

“சின்னம்மா என அழைப்பவர்கள் அப்பாவிகளா?” இலக்கிய விழாவில் அரசியல் பேசிய ஜெயமோகன்
“சின்னம்மா என அழைப்பவர்கள் அப்பாவிகளா?” இலக்கிய விழாவில் அரசியல் பேசிய ஜெயமோகன்

தமிழ் இலக்கிய உலகில் எலியும் பூனையுமாக இருந்தவர்கள் எழுத்தாளர்கள் சாருநிவேதிதாவும் ஜெயமோகனும். ஒருமுறை ‘உயிர்மை’ புத்தக வெளியீட்டுவிழாவில் ‘ஜெயமோகனின் புத்தகம் கவிஞர் மனுஷ்யபுத்திரனை இழிவுபடுத்துகிறது’ என்று அந்தப் புத்தகத்தை மேடையிலேயே கிழித்தெறிந்தார் சாருநிவேதிதா. ஆனால், திடீரென்று தமிழ் சினிமாவில் வரும் திடுக்கிடும் திருப்பத்தைப் போல, ‘தம்பி ஜெயமோகன் ’ என்று உறவு பாராட்ட ஆரம்பித்தார் சாருநிவேதிதா. இருவருக்கும் இடையில் இணக்கம் நிலவும் சூழலிலும் இருவரும் ஒரே மேடையில் பேசியதில்லை. 

அந்த அதிசயமும் நிகழ்ந்தது சமீபத்தில்.  அராத்து எழுதிய ஆறு புத்தகங்களின் வெளியீட்டு விழா ஜனவரி 7-ம் தேதி  நடைபெற்றது. இதில்தான் ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் கலந்துகொண்டனர். இரு துருவங்களாக விளங்கும் இருவரும் கலந்து கொண்ட விழா என்பதால் அரங்கு நிறைந்து காணப்பட்டது. 

இந்த விழாவில் ஜெயமோகன் தனது சின்ன பேச்சில் கூட இலக்கியம், அறம், அரசியல், தமிழக மக்கள் அனைத்தையும் ஒரு வெளு வெளுத்துவிட்டுப்போனார். அதில் தன்னை விழாவுக்கு அழைத்த அராத்தையும் விடவில்லை. 

அவர் பேசும் போது "இந்த விழாவில் கலந்து கொள்ளப்போகிறேன் என்ற செய்தி வெளியான போது சாருநிவேதிதாவுடன் ஒரே மேடையில் பேசக்கூடாது என்று மின்னஞ்சல்கள் நிறைய வந்தன, அதுவே என்னை இங்கு வரத்தூண்டியது. தமிழ்நாட்டில் ஒரு கெட்டபழக்கம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அது நூலைப் படிக்காமலே அது குறித்த கருத்து தெரிவிப்பது. அது மிகவும் ஆபத்தானது. மனிதகுல வரலாற்றிலேயே அதிகம் படிப்பது இப்போதுதான். ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணிநேரம் முகநூலில் படிக்கிறார்கள். நான் ஒரு வங்கியில் வரிசையில் நிற்கும் போது கவனித்தேன். அங்கு வேலை பார்க்கும் பெண் ஒரு மணி நேரம் முகநூலில் படித்துக்கொண்டிருக்கிறார். இவ்வளவு படிக்கும்போது ஒரு நாவலை பற்றியோ சிறுகதையைப் பற்றியோ கருத்து தெரிவிக்கும் போது படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் என்னை ஏதோ தருமபுரம் ஆதினம் போல கருதுகிறார்கள். அறத்தைப் பற்றித்தான் எழுதவேண்டும் என்று அவசியமில்லை. இடுப்புக்கு மேலே வராமல்கூட எழுதுங்கள். எதுவாக இருந்தாலும் அதில் இலக்கியம் இருக்கவேண்டும். 

தமிழ்நாட்டில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் மக்களே மோசடி செய்கிறார்கள். குளத்துக்கரையில் ஒரு மணி நேரம் அமர்ந்துவிட்டு 100 ரூபாய் வாங்கிக்கொண்டு வருகிறார்கள். ஒரு அம்மாவை மகன் காரில் கொண்டு வந்து இறக்கிவிட்டு செல்கிறார். சில மணி நேரம் கழித்து வந்து கூட்டி செல்கிறார். இப்படி மக்களை திருட அனுமதிப்பதால் தலைவர்களை 'அம்மா' என்கின்றனர். கிராமங்களில் உள்ள ஏழை எளியவர்கள் எல்லாம் நல்லவர்கள் நாம்தான் கெட்டவர்கள் என்கிற எண்ணம் நகரத்தில் உள்ளது. உண்மையில் அங்கிருந்துதான் நாணயமற்ற தன்மை உற்பத்தியாகிறது. இன்று 'சின்னம்மா"வின் முன் கைகட்டி நிற்பவர்களை அப்பாவிகள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் ஏழைகளோ அப்பாவிகளோ அல்ல. அவர்களுக்கு தெளிவாக தொழில் தெரியும். மைக்கை அவர்கள் முன் நீட்டியவுடன் ' எங்களை வாழ வைத்த அம்மா.."என்கிறார்கள். அதன் அர்த்தம் 'பொதுச்சொத்தை திருடுவதற்கு அம்மா எங்களுக்கு அனுமதியளித்தார்' என்பதுதான் பொருள்” என்றார் காட்டமாக.

இந்த விழாவில் 'ஹாட் சீட்' எனப்படுகிற சரம் சரமான கேள்விகள் கேட்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் எழுத்தாளர் சாருவை தொகுப்பாளர் கண்மணியும், ஜெயமோகனை சாரு நிவேதிதாவும் கேள்விகள் கேட்டனர். அதில் சில சுவையான கேள்வி-பதில்களின் தொகுப்பு..

கேள்வி : உங்களை நாயகனாக போட்டு ஒரு படம் எடுக்கிறார்கள். அதில் கதாநாயகியாக யாரைப் பரிந்துரைப்பீர்கள்? 

சாரு - பிரியங்கா சோப்ரா, அமிதாப் நடித்த 'சீனி கம்' போன்று எனக்கு 60 வயது பிரியங்காவிற்கு 20 என வைத்து படம் எடுக்கலாம். 

கேள்வி -இதுவரை எத்தனை பேரை லவ் பண்ணியிருக்கிங்க? 

சாரு - 15 -20 பேரை லவ் பண்ணியிருக்கேன். ஒரே ஒரு லவ் மட்டும் சக்ஸஸ் ஆகி கல்யாணத்தில முடிஞ்சிருக்கு. 

கேள்வி - உங்கள் கதைகளில் எதில் கமல்ஹாசன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்? 

சாரு - 'எக்ஸைல்' என்கிற எனது நாவலில் தான் அடல்ட்ரிக்கான வாய்ப்பு நிறைய உள்ளது. கமல் அதை சிறப்பாக செய்வார் என்பதால் அது அவருக்கு பொருந்தும். ரஜினிக்கு என்றால் 'காம ரூபக்கதைகள்' பொருத்தமாக இருக்கும். 

கேள்வி - தற்போது திருமணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எந்த ஊர் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள்? 

சாரு - கண்டிப்பாக மெக்ஸிகோ நாட்டு பெண்ணைத்தான் திருமணம் செய்வேன். அழகான பழுப்பு நிறத்தோல், அர்ப்பணிப்பு நிறைந்த குணம் ஆகியவை காரணம்.

கேள்வி - சாகித்ய அகாடெமி விருதுகள் வழங்கும் அதிகாரம் இருந்தால் யாருக்கு வழங்குவீர்கள்? 

சாரு - விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் வழங்கும் விருதுகள் போல இருப்பதிலேயே வயதான இலக்கியவாதி ஒருவரை தேர்வு செய்வேன். 


கேள்வி - ஒருவரை இந்த உலகத்தைவிட்டு மறைய வைக்கும் வாய்ப்பு தரப்பட்டால் யாரை மறைய வைப்பீர்கள்? 

சாரு - இன்றைய தேதியில் மோடியைத்தான் மறைய வைப்பேன். அரசியல் காரணம் எல்லாம் கிடையாது. காசு இல்லாமல் கஷ்டப்படுவதினால் இந்த முடிவு. 

கேள்வி  - பெண்ணாக மாறினால் யாரை உங்கள் துணையாக தேர்வு செய்வீர்கள் ? 

சாரு - ஒருத்தர்லாம் கிடையாது. தமிழ் இலக்கியவாதிகள் அனைவருக்கும் லவ் அப்ளிகேஷன் போட்டு ஒரு வழி செய்து விடுவேன்.  முதலில் ஜெயமோகனைத்தான் காதலிப்பேன். 

அடுத்ததாக சாரு ரேபிட் ஸ்பீட் கேள்விகளை தொடுக்க ஜெயமோகன் அளித்த பதில்...

சாரு நிவேதிதா - நடிகர் கமலை அடிக்கடி சந்திக்கிறீர்கள். இருவருமே அதிகம் பேசிக்கொண்டே இருப்பவர்கள் என்பதால் அந்த சந்திப்பு எப்படி இருக்கும்? 

ஜெயமோகன் - அப்போது நான் அமைதியாக இருந்துவிடுவேன்

சாரு நிவேதிதா - ரஜினி, கமல் ஆகிய இருவரின் நெகடிவ் பாயின்ட்கள் என்ன? 

ஜெயமோகன் - ரஜினிக்கு அவரின்  பாப்புலாரிட்டி,  கமலுக்கு அளவுக்கு அதிகமான முன்னோடித்தன்மையினால் கிராமிய யதார்த்தம் புரியாமல் இருப்பது. 

- வரவனை செந்தில்