Published:Updated:

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

காற்றில் கலந்த காந்தியம்!

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தியாகி சங்கரலிங்கனார்... தமிழின வரலாற்றில் தனி இடம் பெற்றவர்.  தமிழர் நிலம் 'தமிழ்நாடு’ என்று அழைக்கப்பட வேண்டும் என்று காங்​கிரஸ் அரசிடம் கோரிக்கைவைத்து, 'இறக்கும் வரை உண்ணாவிரதம்’ இருந்து உயிர் துறந்த உண்மையான காங்கிரஸ்காரர். யார் இந்த சங்கரலிங்கனார்? 

''காமராஜர் கதர் அணியக் கிளம்பும் முன்பே, கைராட்டையில் நூல் நூற்றவர்; காந்தியார் மகாத்மா ஆகிக்கொண்டு இருக்கும்போது, உடன் இருந்து அந்த உயர்வு உருவாவது கண்டு உளம் மகிழ்ந்தவர்; 'வந்தே மாதரம்’ தேர்தல் தந்திரம் ஆன பிறகு அல்ல... அது தேசிய மாமந்திரமாக இருந்த

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

காலத்திலேயே அந்தக் குறளைக் கற்றுக் களித்தவர்; சிறை சென்று நலிந்தவர்; வணிகத் துறையிலும் வெற்றி கண்டவர். சங்கரலிங்கனார் பழம்பெரும் தேச பக்தர் வரிசையைச் சேர்ந்தவர்!'' என்று உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனாரை சந்தித்த பின்பு, 'தம்பிக்கு’ எழுதிய கண்ணீர்க் கடிதத்தில் அண்ணா குறிப்பிட்டார்.

விருதுநகரில் பள்ளிக் கல்வி முடிந்து, வணிகத்தில் கவனம் செலுத்தி, மும்பை வரை வியாபாரத் தொடர்பை வளர்த்துக்கொண்ட சங்கரலிங்கம், வ.உ.சி-யின் வீர உரைகளில் விடுதலை வேட்கை பெற்றவராய் வீறுகொண்டு, காந்தியப் போர்க் களத்தில் ஒரு சத்தியாகிரகியாய் சங்கமித்தார்; மகாத்மாவின் உலகப் புகழ் பெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் தானும் ஒரு தொண்டராய்ப் பங்கேற்றார். தமிழக அரசியலில் அவர் ராஜாஜியைத் தலைவராக ஏற்றுக்கொண்டார். திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் தவ வாழ்க்கை மேற்கொண்டார். கதர் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். திருச்சியில் நடந்த அறப் போரிலும், கரூரில் நடந்த காந்தியப் போர்க் களத்திலும் பங்கேற்று, சிறை சென்று கடுங்காவல் தண்டனை அனுபவித்தார். மும்பையில் குடும்பத்தை விட்டுவிட்டு, விருதுநகர், சூலக்கரை மேட்டில் 1951-ல் ஓர் ஆசிரமம் அமைத்து, அதில் தனியாக வாழத் தொடங்கினார். தான் சேர்த்துவைத்த சொத்தை, விருதுநகர் பள்ளி வளர்ச்சிக்குத் தானமாக்கினார். அகத்திலும் புறத்திலும் அப்பழுக்கற்ற ஒரு காந்தியத் தொண்டராய் அவர் வலம் வந்தபோதுதான், ஆந்திர மாநிலம் அடைவதற்கு ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து கண் மூடிய செய்தி அவரைக் கடுமையாகப் பாதித்தது.

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

மொழி வழி மாநிலங்கள் அமைந்த பின்பும், தமிழ்நாடு 'மெட்ராஸ் ஸ்டேட்’ என்று ஆங்கிலத்​திலும், 'சென்னை ராஜ்ஜியம்’ என்று தமிழிலும் அழைக்கப்பட்டதை அவமானமாக உணர்ந்தார் சங்கரலிங்கம். ஆனால், அந்த உணர்ச்சி அன்றைய காங்கிரஸ் அரசுக்குக் கடுகளவும் இல்லை.

காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகள் 'தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. மாநில மறு சீரமைப்புத் தீர்மானத்தின் மீது 1956 மார்ச் 29 அன்று சட்டப் பேரவையில் ஏழைகளின் தோழர் ஜீவா உரை நிகழ்த்தியபோது, 'தமிழன் என்ற பெயரால் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். நிதி அமைச்சரையும், முதலமைச்சரையும், காங்கிரஸ் தரப்பு உறுப்பினர்களையும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 'தமிழ்நாடு’ என்று பெயரிடுவதுதான் முறை. ஒருவருக்கொருவர் கட்சி சார்பில் இந்தப் பிரச்னையைப் பார்க்க வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதில் அளித்த சி.சுப்ரமணியம், ' வெறும் பெயர் மாற்றத்தினால் தமிழ் வளர்ந்துவிடாது. 'தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றப்பட, தகுந்த காரணத்தை நீங்கள் ஒருவரும் சொல்லவில்லை. அறிவை விடுத்து உணர்வை வெளிப்படுத்த வேண்டாம். மாநிலத்தின் பெயர் மாற்றம் தமிழுக்குச் செய்யும் சேவையாகிவிடாது. அதன் மூலம் தமிழ் வளர்ந்துவிடாது’ என்று தன்னுடைய 'தமிழ் உணர்வை’ மிகத் தெளிவாகத் தரணிக்குப் பிரகடனம் செய்தார்.

காந்தியத்தின் மையக் கொள்கைகளில் ஒன்று தாய் மொழி உணர்வை வளர்த்தெடுப்பது. ஆனால், வளர்ந்து வரும் தி.மு.கழகத்தின் செல்வாக்கைத் தடுத்து நிறுத்த வழி அறியாத காங்கிரஸ் அரசு, தமிழுக்கு மகுடம் சூட்டுவதும், தி.மு.கழகத்துக்குத் துணை புரிவதும் ஒன்று என்று எண்ணியதுதான் பெரும் பேதைமை. இன உணர்வும் மொழிப் பற்றும் இல்லை எனில், தமிழகத்தில் காங்கிரஸ் கால நடையில் கல்லறைக்குச் சென்று கண் மூடிவிடும் என்பதை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட சங்கரலிங்கனார், 'தமிழ்நாடு’ பெயர் மாற்றத்தை முன்வைத்து, 1956 ஜூலை 27 அன்று காந்திய வழியில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவர் வைத்த 12 கோரிக்கைகளில் முதன்மையானது 'தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டுவதுதான்.

முதலில், தன்னுடைய சூலக்கரை ஆசிரமத்தில் அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அந்த இடம் ஆளரவம் அற்ற பகுதியாக இருந்ததால், கம்யூனிஸ்ட் நண்பர்களின் ஆலோசனைப்படி, விருதுநகர் மாரியம்மன் கோயில் அருகில் தேசபந்து மைதானத்தில், ஒரு சிறிய கீற்றுக் குடிலில் கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். காங்கிரஸ் அரசு அவரைக் கண்டுகொள்ளவில்லை.

தோழர் ஜீவா, அண்ணா, ம.பொ.சி. போன்ற தலைவர்கள் நேரில் சென்று உண்ணாநோன்பை நிறுத்தும்படி வேண்டியபோதும், சங்கரலிங்கனார் சம்மதிக்கவில்லை.

நாளுக்கு நாள் சங்கரலிங்கனார் உடல் நலிவடைந்தது. முதல்வர் காமராஜருக்கு நெருக்கடி அதிகரித்தது. 'சங்கரலிங்கனார் முன்வைத்த 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டவை. அவை அனைத்தையும் நிறைவேற்றும் அதிகாரம் என்னிடம் இல்லை. அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி வேண்டிக்கொள்கிறேன்’ என்ற காமராஜர், மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட, மாநில அரசு பரிந்துரைத்தால் மத்திய அரசு ஏற்று சட்டத் திருத்தம்

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

செய்யக்கூடிய சாதாரண கோரிக்கையான 'தமிழ்நாடு’ பெயர் மாற்றம் குறித்து வாய் திறக்கவில்லை. ஆயிரம் வளர்ச்சித் திட்டங்களின் மூலம் பொற்கால ஆட்சியை வழங்கிய காமராஜர் வரலாற்றில், சங்கரலிங்கனார் மரணம் ஒரு மாறாத களங்கம் என்பதை மறுக்க முடியாது. கறை இல்லாத நிலவு காசினியில் ஏது?

காந்தியப் பாதையில் இருந்து காங்கிரஸ்காரர்கள் வெகு தூரம் விலகிச் சென்றுவிட்டதைக் கண்டு வெதும்பிய தியாகி சங்கரலிங்கனார், தன்னுடைய கோரிக்கைகளில், எளிமைக்கும் உயர் ஒழுக்கத்துக்கும் முக்கியத்துவம் வழங்கினார். கதர் சட்டையைத் தவிர, வேறு எந்த காந்திய அடையாளமும் காங்கிரஸாரிடம் இல்லாததைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர், 'பொது ஜனங்களில் விருப்பத்துக்கு மாறாகத் தவறான வழியில் கண்மூடித்தனமாகப் போய்க்கொண்டு இருக்கும் காங்கிரஸ் கட்சி, ஒரு நாள் ஒழிந்தே தீரும்’ என்று சினம் ததும்ப சபித்தார். சந்நியாசிபோல் வாழ்பவர்களின் சாபம் சத்தியமாய்ப் பலிக்கும். ஆனாலும், காந்தியம் சார்ந்த காங்கிரஸ்காரராக இருந்ததால், தான் உண்ணாவிரதம் இருந்த கீற்றுக் குடிலின் மீது காங்கிரஸ் கொடியையே பறக்கச் செய்தார்.

உண்ணாவிரதப் படுக்கையில் இரண்டுமாதங்கள் கடந்துவிட்ட நிலையில், எலும்புக்கூடாய் உறங்கிக்​கொண்டு இருக்க, சங்கரலிங்கனாரை ஒரு நாள் நள்ளிரவு சென்று சந்தித்த சோகத்தை, ஒரு கடிதத்தில் (21-10-1956) தன் தம்பியர்க்கு விளக்குகிறார் அண்ணா.

'காங்கிரஸ் கொடி அந்தக் குடிலின் மீது பறந்துகொண்டு இருக்கிறது... அவர் உயிரைக் குடித்துக்கொண்டு இருக்கும் கொடுமையை விளக்கவா காங்கிரஸ் கொடி பறந்துகொண்டு இருக்க வேண்டும்? நடுநிசி... நான்கைந்து பேர் மட்டுமே இருந்தனர். குடில் வாயிலை நீக்கியபடி உள்ளே சென்று பார்த்தேன். கயிற்றுக் கட்டிலின் மீது சுருண்டு படுத்திருந்த உருவம் தெரிந்தது மங்கலான விளக்கொளியில்!

அவர் வெளியிட்ட கோரிக்கைகளில் ஒன்றுகூட சொந்த நலன் பற்றியது என்று சுட்டிக்காட்ட சூழ்ச்சித் திறன் மிக்கோரால்கூட முடியாது. இவற்றை நிறைவேற்றி வைப்பதாலே, காங்கிரஸ் ஆட்சி அழியாது. இந்திய ஐக்கியம் பாழ்​படாது; எந்த வகுப்பாருக்கும் கேடு வராது; பெரும் பணச் செலவு ஏற்படாது; சட்டச் சிக்கல் எழாது; மாற்றுக் கட்சிகளுக்கு மணி மகுடம் கிடைத்துவிடாது. பச்சைத் தமிழரின் பரிபாலனத்துக்குக்கூடக் குந்தகம் ஏற்படாது’ என்று எழுதிய அண்ணா, 'இவ்வளவு உறுதியாக இருக்கிறீர்களே. உங்கள் கோரிக்கையை அவர்கள் ஏற்க மாட்டார்களே’ என்று சங்கரலிங்கனாரிடம் தன் சந்தேகத்தைத் தெரிவித்தார். 'நான் இறந்த பிறகாவது ஏற்பார்களா என்று பார்ப்போம்’ என்று விரக்தியுடன் பதில் தந்தார் தியாகி சங்கரலிங்கனார். (உள்ளே 'தமிழ்நாடு’, வெளியே 'மெட்ராஸ்’ என்று 1961-ல் பாதி இறங்கி வந்தது பெருந்தலைவர் அரசு.)

உள்ள உறுதி குன்றாத அந்தப் பெருமகனின் உடல் குன்றத் தொடங்கியது. நாடித் துடிப்பு மெள்ள அடங்கியது. ரத்த அழுத்தம் குறைந்தது. காவல் துறை மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக சேர்த்த பின்பும், அந்த காந்தியச் செல்வர் மருந்தையும் உணவையும் ஏற்க மறுத்தார். உண்ணா நோன்பு தொடங்கி 76-வது நாள் நடந்தபோது, மருத்துவமனையில் மகாத்மாவின் சீடர் 1956 அக்டோபர் 13 அன்று மரணத்தைத் தழுவினார். காந்தியத்தின் மூச்சு கடைசியாகக் காற்றில் கலந்து காணாமற் போனது.

ஆட்சி மாறியது. 1967-ல் அண்ணா முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். செயின்ட் ஜார்ஜ் கோட்டை, 'தமிழக அரசு’ ஆக மாறியது. 'தமிழ்நாடு’ பெயர் மாற்ற மசோதா 1968 நவம்பர் 23 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. ஒரு காங்கிரஸ் தியாகியின் கடைசி விருப்பம் ஒரு திராவிட இயக்கத் தலைவரால் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சங்கரலிங்கனாரின் நினைவைப் போற்றும் எந்த வரலாற்றுத் தடயமும் இன்று வரை உருவாக்கப்படவில்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை தரும் செய்தி! காந்தியத்தின் உச்சம் தொட்ட ஓர் ஈழத் தமிழனின் உயிர்த் தியாகத்தை அடுத்த இதழில் தரிசிப்போம். அதுவரை உங்கள் கண்ணீரைக் கொஞ்சம் சேமித்துவையுங்கள்!

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..