Published:Updated:

யூரியா, சவுக்காரத்தூள் கலந்த பாலை குடிக்கத்தான்... ஜல்லிக்கட்டுக்கு தடையா...? #JusticeforJallikattu

யூரியா, சவுக்காரத்தூள் கலந்த பாலை குடிக்கத்தான்... ஜல்லிக்கட்டுக்கு தடையா...? #JusticeforJallikattu
யூரியா, சவுக்காரத்தூள் கலந்த பாலை குடிக்கத்தான்... ஜல்லிக்கட்டுக்கு தடையா...? #JusticeforJallikattu

யூரியா, சவுக்காரத்தூள் கலந்த பாலை குடிக்கத்தான்... ஜல்லிக்கட்டுக்கு தடையா...? #JusticeforJallikattu

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வெற்றி கடந்த ஒரு மாதமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்துவருகிறார்.  அவனியாபுரத்தில் முதன்முதலாக போராட்டம் வெடித்தபோது, அதில் முதல்வரிசையில் நின்றார். போலீஸாரிடமிருந்து கணுக்காலில் அடியை பரிசாகப் பெற்றார். ஆனாலும் அவர் துவளவில்லை... கால்களில் காயத்தோடு பாலமேடு சென்றார்... தொண்டை வறண்டு போகும் அளவு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் கோஷம் போட்டார்... இன்றும் அவரே மூன்று நாள் தூக்கத்தை கண்களில் மிச்சம் வைத்துக்கொண்டு அலங்காநல்லூரில் நின்று கொண்டிருக்கிறார். 

இது வெற்றியின் கதை மட்டுமல்ல...  அரவிந்த், தமிழ்தாசன், சுதர்சன், அன்பழகன், இந்துமதி, ரஃபீக் ராஜா, முத்து, அமுதா, லட்சுமி அம்மா... என ஆயிரக்கணக்கில்  அலங்காநல்லூரில் திரண்டிருக்கும் மக்களின் கடந்த நான்கு நாட்கள் நிகழ்வு இதுதான்.  அரசு இதை, தன்  நிகழ்ச்சி நிரலில் எதிர்பார்க்கவில்லை. சிறு பொறியாக முகிழ்ந்த போராட்டம் எங்கும் படர்ந்து காட்டுத் தீயாக கனன்று கொண்டிருக்கிறது. ஒரு புறம் இளைஞர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்க... இன்னொரு பக்கம் Gen Z தலைமுறையினர் இந்த போராட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இணையத்தில் தூக்கம் மறந்து தகவல்களைப் பகிர்ந்துகொண்டு இருக்கின்றனர்.

ஆனால், இவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை...? இவர்கள் போராடிக் கொண்டிருப்பது அரசுகளையோ... விலைபோன அரசியல்வாதிகளையோ, நீதி மன்றங்களையோ எதிர்த்து மட்டும் அல்ல. இவர்களுக்கே தெரியாமல் இவ்வளவு வீரியமாக போராடிக் கொண்டிருப்பது  1,700 கோடி டாலர் வணிகத்தை எதிர்த்து... லாபத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்துவிட்ட, மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் பால்நிறுவன  பேரரசர்களை எதிர்த்து.  

ஆம், இங்கு காளைகள் மூக்கணாங் கயிற்றால் மட்டும் கட்டப்படவில்லை... ஒரு பெரும் அரசியல் சதியால் கட்டப்பட்டு இருக்கிறது. இதை எதிர்த்துதான் நம் காளைகள் திமிறிக் கொண்டிருக்கின்றன.

“பால் அரசியல்... 1,700 கோடி டாலர் வணிகம்”

உங்களால் உங்களின் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை மீட்டெடுக்க முடிகிறதா...? அப்போது நம் தெருக்களில் காது மடல்களில் பென்சிலை செருகிக்கொண்டு ஒரு பால்காரர் வருவார்... அவரிடமிருக்கும் ஐந்து நாட்டு பசுக்களிலிருந்து பாலை கறந்து ஐந்து வீதிகளில் உள்ள மக்களுக்கு விநியோகிப்பார்... அது உண்மையான ஆரோக்கிய காலம். இப்போது அந்த பால்காரர் எங்கே...?  அவரை தேடுங்கள். அவர் எப்படி ஒழித்துக்கட்டப்பட்டார் என்று ஆராயுங்கள்... அதனுடைய விடையில்தான் ஜல்லிக்கட்டு ஏன் தடை செய்யப்பட்டது... உங்களின் வயிறுகளை எப்படி பெருநிறுவனங்கள் பதம் பார்த்துக் கொண்டுஇருக்கிறது என்பதற்கான விடையும் இருக்கிறது. 

பாலெனப்படுவது இப்போது உண்மையில் ஓர் ஆரோக்கியபானம் இல்லை என்கிறார் சூழலியலாளர் நக்கீரன். இவர் பால் வணிகத்தை விரிவாக ஆய்வு செய்து பால் அரசியல் என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதில் அவர் பகிர்ந்து இருக்கும் அத்தனை தகவல்களும் உண்மையில் வயிற்றில் பால்வார்ப்பதாக இல்லை.  அவர் குறிப்பிடுகிறார், “குழந்தைகளுக்கான பால் மற்றும் உணவுக்கான சந்தை மதிப்பு உலகளாவிய அளவில் 1,700 கோடி டாலராகும். இச்சந்தை ஆண்டுக்கு 12 சதவிகித அளவில் வளர்ச்சி அடைந்தும் வருகிறது. தாய்ப்பால் கொடுப்பவர்களின் எண்ணிக்கை கூடினால் இந்நிறுவனங்களுக்கு அது பெரும் இழப்பை ஏற்படுத்தும். ஒரு குழந்தை ஆறு மாதம் தாய்ப்பால் குடிக்கிறது என்றால் அதனால் இந்நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு 450 கோடி டாலராகும்” என்கிறார். 

இதில் அவர் குழந்தைகளுக்கான பால் சந்தை மதிப்பை மட்டும்தான் குறிப்பிட்டு இருக்கிறார். அப்படியானால், மொத்த பால் வணிகத்துக்கான சந்தை மதிப்பு எத்தனை ஆயிரம் கோடி இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த வணிகம் ஆங்காங்கு இருக்கும் பால்காரர்களிடம் இருப்பதை பெரும் நிறுவனங்கள் விரும்புவதில்லை. இது அனைத்தையும் தனதாக்கிக்கொள்ள அனைத்து தகிடுதத்தங்களையும் நிறுவனங்கள் செய்கின்றன. அதில் ஒன்று ஜல்லிக்கட்டுக்கான தடைக்கு பின்னால் உள்ள அரசியல்!

சரி... அந்த அரசியலை பார்ப்பதற்கு முன்... நீங்கள் இப்போது அருந்தும் பாக்கெட் பாலில் என்னென்ன கலந்திருக்கின்றன என்று கொஞ்சம் கவனியுங்கள்.

“யூரியா...வனஸ்பதி... சவுக்காரத்தூள்...”

நீங்கள் ஒரு நாளைக்கு 7 தடவை பால் டீ அருந்துபவரா...?  அப்படியானால் நீங்கள் ஒரு நாளைக்கு 7 ஸ்பூன் யூரியாவை உண்கிறீர்கள் என்று அர்த்தம். என்ன யூரியாவா என்று பதற்றப்படுகிறீர்களா....? ஆம். யூரியாதான். உங்கள் பதற்றம் பத்தாது. இன்னும் கொஞ்சம் அதிகமாக பதற்றப்படுங்கள். “நீங்கள் அருந்தும் பாலில் வனஸ்பதி, யூரியா, சவுக்காரத்தூள், சர்க்கரை, உப்பு, ஃபார்மலின் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டு, அவரவர் பின்பற்றும் தொழில் நுட்பத்துக்கு ஏற்ப செயற்கை பால் உருவாக்கப்படுகிறது.  இவை மட்டும் அல்ல... பிணங்களைப் பதப்படுத்த உதவும் ஃபார்மலினும் நீங்கள் அருந்தும் பாலில் இருக்கிறது.” என்கிறார் நக்கீரன். 

இதற்கு சான்றாக அவர் காட்டுவது இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (FSSAI) ஆய்வு முடிவை.  “FSSAI பால் மாதிரிகளை எடுத்து செய்த ஆய்வில், பாலில் 14 சதவிகித சவுக்காரத்தூள் இருப்பதாக கண்டுபிடித்தது. ஆனால், அவர்கள் பால் கலன்களைச் சரியாகத் தூய்மை செய்யாததால் கலந்திருக்கலாம் என அறிவித்தார்கள். உண்மை அதுமட்டுமல்ல, பாலின் அடர்த்தியையும் பிசுபிசுப்புத் தன்மையையும் அதிகரித்துக் காட்டவே இது சேர்க்கப்படுகிறது. சவுக்காரத்தூளில் உள்ள ‘காஸ்டிக் சோடா’ இதற்கு உதவும்” என்று சான்று பகிர்கிறார் நக்கீரன்.

 “கொல்லப்படும் மாடுகள்”

பாலில் கலப்படம் ஒரு பக்கம் என்றால்... நவீன பால் உற்பத்திக்காக நிறுவனங்கள் மாடுகள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறை இன்னொரு பக்கம்.  நக்கீரன் இவ்வாறாக எழுதுகிறார், “நவீன பால் உற்பத்தித் தொழில் மாடுகளை மட்டுமல்லாது கன்றுகளையும் சேர்த்தே வதைத்து வருகிறது. கன்றுகள் தன்தாயிடம் மிகக் குறைந்த நேரமே பால் அருந்த அனுமதிக்கப்படுவதால் போதிய ஊட்டச்சத்து இன்றி இவ்வகைக் கன்றுகள் விரைவாக இறந்து விடுகின்றன. அமுல் நிறுவனத்தின் தலைவராக இருந்த மறைந்த டாக்டர் குரியன் மும்பையில் மட்டும் இவ்வாறு ஆண்டுக்கு 80,000 கன்றுகள் வலுக்கட்டாயமாக இறப்புக்கு உள்ளாக்கப்படுவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்று  ‘பால் அரசியல்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார். 

மேலும் அவர், “நாளொன்றுக்கு 14 கிலோ பால் கறக்க வைப்பதற்காக மாடுகளுக்கு தடை செய்யப்பட்ட மருந்துகள் போடப்படுகின்றன.” என்கிறார். 

‘ஜல்லிக்கட்டும், பால் அரசியலும்’

 ‘பாலில் கலப்படம்... பாலுக்காக மாடுகள் மீது வன்முறை... பாலுடன் கலக்கப்பட்டிருக்கும் அரசியல்’  நெஞ்சம் பதைபதைக்கிறது. சரி. இதற்கும் ஜல்லிக்கட்டு தடைக்கும் என்ன சம்பந்தம்...? என்கிறீர்களா... நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. காளை திருவிழா, ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு எல்லாம் கிராம பொருளாதாரத்தின் ஓர் அங்கம். அது கால்நடைகளை கொண்டாடும் திருவிழா...  உங்களிடமிருந்து கால்நடைகளை பிரிக்க வேண்டுமென்றால், அது தரும் கொண்டாட்டங்களை உங்களிடமிருந்து பிரிக்க வேண்டும். காளை வைத்திருப்பது, வளர்ப்பது குறித்து உங்களிடம் எந்த பெருமித உணர்வும் இருக்கக்கூடாது. அந்த பெருமித உணர்வு உடையும்போதுதான், அங்கு வணிகம் நுழைய முடியும். வணிகத்துடன் சேர்த்து அத்தனை அரசியலும்.  அதற்காகத்தான்  ‘ஜல்லிக்கட்டு’ மீது இப்படியான ஒரு யுத்தம்!

- மு. நியாஸ் அகமது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு