Published:Updated:

அடுத்த சர்ச்சையில் சிக்கினார் பிரதிபா பாட்டீல்...!

அடுத்த சர்ச்சையில் சிக்கினார் பிரதிபா பாட்டீல்...!
அடுத்த சர்ச்சையில் சிக்கினார் பிரதிபா பாட்டீல்...!
அடுத்த சர்ச்சையில் சிக்கினார் பிரதிபா பாட்டீல்...!

புதுடெல்லி: செசல்ஸ் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு அரசு  முறைப்பயணமாக சென்றுள்ள ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்,தன்னுடன் தமது  பேரக்குழந்தைகள் இருவரை அழைத்து சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரதிபா பாட்டீல் கடந்த 2007 ம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதியாக  பதவியேற்றார்.அதிலிருந்து 22 நாடுகளுக்கு 12 முறை,அரசு முறை பயணமாக  சென்றுள்ளார்.இதற்காக 205 கோடி ரூபாய் அரசு பணம்  செலவழிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத வகையில் இவ்வளவு பணம் ஜனாதிபதியின் வெளிநாட்டு  பயணத்திற்காக செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் சர்ச்சை கிளம்பியது.

இதுமட்டுமல்லாது ஜனாதிபதி மாளிகையில் தமது உறவினர்கள் பட்டாளத்தை  பெருமளவில் தங்கவைத்துள்ளதாகவும்,தமது வெளிநாட்டு பயணத்தின்போது அவர் தமது  குடும்பத்தினர்களை அதிக அளவில் உடன் அழைத்து சென்றதாகவும் குற்றச்சாட்டு  எழுந்தது.

கூடவே ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் வீடு கட்டி  குடியேற,புனேயில் அவருக்கு ராணுவ நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாகவும் சர்ச்சை  எழுந்தது.இதனால் அதனை திரும்ப ஒப்படைப்பதாக அண்மையில் அவர் அறிவித்தார்.

இந்நிலையில் ஜூலை மாதம் ஓய்வு பெற இருப்பதையொட்டி,தமது கடைசி வெளிநாட்டு  அரசு முறைப்பயணமாக செசல்ஸ் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு, கடந்த  29-ம் தேதி டெல்லியிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டுச்சென்றார் பிரதிபா பாட்டீல்.

இந்நிலையில்,இத்தனை விமர்சனங்களுக்குப் பிறகும்,இந்த பயணத்திலும் தனது  பேரக்குழந்தைகள் இருவரை அவர் உடன் அழைத்துச் சென்றுள்ளது  தெரியவந்துள்ளது.இதனை அரசு தரப்பு வட்டாரங்களும் உறுதி செய்துள்ளன.

இதனால் பிரதிபா மீது அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.