Published:Updated:

ஏறுதழுவல் எம் உரிமை! இந்துத்துவ அமைப்புகளின் வஞ்சகமும்... பன்னாட்டுச் சதியும்! - ம. செந்தமிழன்

ஏறுதழுவல் எம் உரிமை! இந்துத்துவ அமைப்புகளின் வஞ்சகமும்... பன்னாட்டுச் சதியும்! - ம. செந்தமிழன்

ஏறுதழுவல் எம் உரிமை! இந்துத்துவ அமைப்புகளின் வஞ்சகமும்... பன்னாட்டுச் சதியும்! - ம. செந்தமிழன்

ஏறுதழுவல் எம் உரிமை! இந்துத்துவ அமைப்புகளின் வஞ்சகமும்... பன்னாட்டுச் சதியும்! - ம. செந்தமிழன்

ஏறுதழுவல் எம் உரிமை! இந்துத்துவ அமைப்புகளின் வஞ்சகமும்... பன்னாட்டுச் சதியும்! - ம. செந்தமிழன்

Published:Updated:
ஏறுதழுவல் எம் உரிமை! இந்துத்துவ அமைப்புகளின் வஞ்சகமும்... பன்னாட்டுச் சதியும்! - ம. செந்தமிழன்

காளைகளுக்கும் தமிழர்களுக்குமான உறவு தொன்மையானது. காளை என்பது தமிழர் வரலாற்றில், இறைச் சின்னமாகவும் உற்பத்திப் பெருக்கத்தின் அடையாளமாகவும் ஒருசேர பதிவாகியுள்ளது. சிந்துவெளியின் சின்னமாக காளை உள்ளது. சிவபெருமானது தவக்கோலத்தைக் குறிக்கும் சிந்து சின்னத்தில் காளைக்கொம்புகள் உள்ளன. நந்தி என்னும் வடிவில் காளை, ஈசன் ஆலயத்தின் தெய்வங்களில் ஒன்றாக நீடிக்கிறது. விடை ஏறும் ஈசன் எனும் கருத்து, தேவாரம், திருவாசகம் மட்டுமல்ல திருமந்திரத்திலும் சுட்டப்பட்ட கருத்து. இவ்வாறெல்லாம் இறையியலில் காளைகள் கலந்த காலத்திலேயே, சமூகத்தின் எளிய மனிதர்களின் வாழ்விலும் காளைகள் பிரிக்கவியலாத அங்கம் வகித்தன.

ஏறு தழுவல் என்பது, சங்க இலக்கியங்களில் நீக்கமற நிறைந்துள்ள பண்பாட்டுக் கூறு. கலித்தொகையின் முல்லைக் கலிப் பாடல்களைப் படித்தால், காளைகள், பசுக்கள் கூட்டமும் அக்காலத் தமிழர்களும் எவ்வாறு பின்னிப் பிணைந்து கிடந்தனர் என்பது புரியும். எல்லா விலங்குகளிலும் ஆண் இனத்தின் எண்ணிக்கை குறைவாகவும் பெண் இனத்தின் எண்ணிக்கை மிகுதியாகவும் இருக்கிறது. இது இயற்கைப் படைப்பின் சமன்பாடு. ஆகவே, விலங்குகளில் ஆண் இனத்தைக் காப்பது எல்லாச் சமூகங்களுக்கும் இருந்துவரும் தலையாயப் பணி. ஆடுகளிலும் கிடா ஆடுகளைத் தனித்த கவனத்துடன் வளர்ப்பார்கள். அவற்றின் எண்ணிக்கையும் குறைவாகத்தான் இருக்கும்.

தெய்வங்களுக்குப் பலியிடும்போது ஆண் வகைகளைப் பலியிடுதல் மரபு. கிடா ஆடுகளைத்தான் கிராம தெய்வங்களுக்குப் பலி கொடுப்பார்கள். கிடாரி எனப்படும் பெண் ஆடுகளைப் பலி கொடுப்பதைப் பற்றி சிந்திக்கவும் இயலாத வகையில் அவற்றின் மீது பரிவு உண்டு. ஆடுகளையும் மாடுகளையும் இறைச்சிக்காகவும் அறுக்கும் இதே தமிழ்ச் சமூகம்... அவற்றின் ஆண், பெண் இனங்களின் மீது அக்கறையும் செலுத்தி வந்துள்ளது. ஆண்வகை ஆடுகள், மாடுகள் இனப்பெருக்கம் மற்றும் பலி ஆகிய இரு செயல்களுக்கானவை. இவை இரண்டுமே நம் மக்களது வாழ்வில் மிக முக்கியமான செயல்பாடுகள். இவற்றை நம்மால் விட்டுத்தரவோ, மாற்றிக்கொள்ளவோ முடியாது.

பசுக்களை வளத்தின் குறியீடாகப் பார்ப்பது நம் வழக்கம். மாடு என்றால், ‘செல்வம்’ எனப் பொருள். பசு என்ற சொல்லுக்கு ‘உயிர்’ என்றும் ஒரு பொருள் உண்டு. தமிழில் ‘ஆ’ என்ற சொல், ‘உயிர்’ எனும் பொருளையும் தாங்கிக்கொண்டுள்ளது. இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன எனப் புரிந்துகொள்ள வேண்டும். உயிர்கள், செல்வங்கள், பசுக்கள், மாடுகள் ஆகியவை அனைத்தும் தமிழர் வாழ்வியலில் ஒன்றானவை, சமமானவை என்பதைத்தான் இவை உணர்த்துகின்றன.

சிவனிய மெய்யியலில் ‘பதி, பசு, பாசம்’ என்று மூவகைப் பொருட்கள் உண்டு. இவற்றில் பதி – இறைவன்/இறைவி. பசு – உயிர்கள். பாசம் – உயிர்களின் இயல்புகள் என்றாகும். உலகின் எல்லா உயிர்களையும் குறிப்பதற்குப் பசு எனும் சொல்லைத்தான் நம் முன்னோர் பயன்படுத்தியுள்ளனர். அதேபோல, நந்தி வடிவ உயிர்கள் அனைத்தும் இறையைத் தொழும் காட்சிக்கான குறியீடாகக் கோயில்களில் உள்ளன. நந்தியின் உயரம் கருவறையில் உள்ள மூலவரின் உருவத்துக்கு எதிரே, உயரத்தில் தாழ்ந்து இருக்க வேண்டும் என்பது விதி. இறையியலிலும் அன்றாட வாழ்வியலிலும் இரண்டறக் கலந்த மாடுகளை நவீனச் சமூகத்தின் மேற்கத்திய அடிமைகள் இழிவு செய்துகொண்டு உள்ளனர். குறிப்பாக, இந்துத்துவ அமைப்புகள் இரட்டை வேடம் தரித்து ஆடுகின்றன.

பசுவதைக்கு எதிராக முழக்கமிடும் இந்துத்துவ அமைப்பினர் காளைகளை ஒழிக்க முனைப்புக் காட்டுவதில், மோசடி அரசியலும் தமிழர்கள் மீதான இனப்பகையும் மறைந்துள்ளன. காளைகளும், சிவனியமும், ஏறுதழுவலும் தமிழர்களுக்கே உரித்தான மரபுச் செல்வங்கள். இவற்றின் மீது ஆரியவயப்பட்ட இந்துத்துவ அமைப்பினருக்கு ஆற்றாமையும் கோபமும் நீண்டகாலமாக உண்டு. காளைகளை யாகத்தில் பலியிட்டு அவற்றின் ஈரலைச் சுவைக்கும் காட்சிகள் ரிக் வேதத்தில் ஏராளமாக உள்ளன. மனுதர்மம், பசுக்களைக்கூட யாகத்தில் பலியிடுவது சரியானதுதான் என்று விதி வகுத்துள்ளது.

மேனகா காந்தியும், இந்திய விலங்கு நல வாரிய அமைப்பில் உள்ள பிற ஆரியச் சிந்தனையாளர்களும் ரிக், யஜூர், மனு ஆகிய அவர்களது வேதங்களை நிராகரிக்கிறார்களா என்ன? இல்லை. அவர்களுக்கு அந்த வேதங்கள்தான் வழிகாட்டும் நூல்கள். சிந்துவெளியில் வாழ்ந்த தமிழர்களைப் பற்றிய பொறாமைக் கருத்துகளைப் பதிவு செய்ததுதாம் ரிக் வேதம். அந்தக் காலம் முதல் இந்தக் காலம்வரை, தமிழர் பண்பாட்டின் மீது அவர்களுக்கு இருக்கும் பொறாமை, ஆவேசம் ஆகியவற்றால் இப்போது நம் காளைகளுக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளனர்.

‘பசுக்களைப் பாதுகாப்போம்’ என முழக்கமிடும் அந்தக் கூட்டம், காளைகளை அழிக்கத் துணிகிறது. தமிழ்நாட்டில் இருப்போர் எல்லாம் ஏமாளிகள் என நினைத்துவிட்டார்கள் அவர்கள். ‘சுதேசி... சுதேசி’ என அவர்கள் முழக்கமிடுகிறார்கள். இந்த நாட்டில் உள்ள பசுக்களின் யோனிக்குள் அயல்நாட்டு விந்து ஊசிகள் குத்தப்படுவதை ஆதரிக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய மோசடி?

தமிழர்களும் பிற தென்னிந்திய இனத்தவரும் இவர்களது மோசடிகளை நன்கு அறிந்துள்ளனர். ஆகவேதான், தென்னிந்தியா முழுவதும் நாட்டுக் காளைகளுக்கும் பசுக்களுக்கும் ஆதரவான சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் ஏறுதழுவல் எனும் விளையாட்டின் வழியாகப் பல நூறு காளை இனங்கள் பாதுகாக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசு கொடுத்த நெருக்கடிகளால் பல காளை இனங்கள் அழிந்துவிட்டன. இனியும் எதிர்த்து நிற்காவிட்டால் நமது மாடுகள் அனைத்தையும் நாம் இழந்து நிற்போம். அது மிகவும் ஆபத்தான சூழலாக இருக்கும்.

பன்னாட்டு நிறுவனங்களின் சதி, இந்திய ஆட்சியாளர்களின் சுயநலம், இந்துத்துவ அமைப்புகளின் பகை ஆகிய மூன்றும் இணைந்து தமிழர்களின் காளைகளை அழிக்கத் துடிக்கின்றன. பசுக்களும், காளைகளும் நமது உறவுகள். அவை, இரண்டும் நம் இறையியலில் வழிபாட்டில் இரண்டறக் கலந்தவை. காளைகளை அழித்துவிட்டால், டிராக்டர் நிறுவனங்களின் ஏகபோகத்தை எவராலும் தடுக்க முடியாமல் போகும். ஏற்கெனவே அந்த நிறுவனங்களும் தனியார் வங்கிகளும் கூட்டுச்சேர்ந்து நம் விவசாயிகளைக் கடனாளியாக்கிவிட்டன. நம் விவசாயிகள் இப்போது கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். காளைகள், பசுக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வெறும் அயல் மாடுகளை மட்டும் வைத்துக்கொண்டிருந்தால் எதிர்காலச் சந்ததிக்கு விவசாயமும் இருக்காது, பால் உற்பத்தியும் நடக்காது. இப்போது நடப்பது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கிளர்ச்சி அல்ல. ‘நீண்டகாலமாகத் தொடரும் இனப்பகை அரசியலுக்கு எதிரான போராட்டம்’. இந்த இனப்பகையில் இப்போது பன்னாட்டு நிறுவனங்களும் எதிரிகளுடன் இணைந்துகொண்டுள்ளன. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். நமது மரபுரிமையை நாம் விட்டுத் தரக் கூடாது. ஏற்கெனவே நிறைய இழந்துவிட்டோம். இனியும் தாமதித்தால், நம் குழந்தைகளின் உணவும் உழவும்கூட பறிக்கப்படும்.

ஆம், மாடு என்றால் செல்வம்தான். ஆநிரை என்றால், உயிர்களின் கூட்டம்தான். இந்தச் செல்வத்தையும் உயிர்களின் கூட்டத்தையும் விட்டுத்தர மாட்டோம்!

ஜல்லிக்கட்டு தொடர்பான உங்கள் கருத்துகளைக் கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.

- ம.செந்தமிழன்