ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் சந்தித்தும் விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ' நமது பாரம்பர்ய பண்பாட்டு உரிமையை மீட்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கலாசார உரிமைகளைப் பற்றிப் பேசுவது என்பது நுண் அரசியல். பீட்டா எதிர்ப்பு என்ற பெயரில் மாணவர்கள் திசை மாற்றப்படுகிறார்கள்' எனக் கொதிக்கிறார் திருமாவளவன்.
" மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள். அதில் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. மாணவர்கள் அரசியல்படுத்தப்படாத ஒரு சமூகம். அவர்களுக்கு மாநில உரிமைகள் குறித்தோ, வறட்சி தொடர்பான விஷயங்கள் பற்றியோ, மொழி, இன உரிமைகளைப் பற்றியோ புரிந்திருக்க வாய்ப்பில்லை. 'ஜல்லிக்கட்டைத் தடுக்கிறார்கள்' என்ற ஆத்திரத்தில் களம் இறங்கியிருக்கிறார்கள். போராட்டத்தின் தொடக்கத்திலேயே, அவர்களைத் திரள விடாமல் தமிழக அரசால் தடுத்திருக்க முடியும். இதில் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் மத்திய, மாநில அரசுகள்தானே தவிர, பீட்டா அமைப்பு அல்ல" என விரிவாக பேசத் தொடங்கினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். தொடர்ந்து நம்மிடம் பேசியவர், " பீட்டா என்பது பொதுநல வழக்கு தொடர்ந்துள்ள ஓர் அமைப்பு. அந்த அமைப்பு சர்வதேச பின்னணியைக் கொண்டிருக்கலாம். அதன் வணிக நோக்கம் எல்லாம் தனியாக விவாதிக்கப்பட வேண்டியது. 'பீட்டாவை தடை செய்ய வேண்டும்' என்ற அடிப்படையிலேயே போராட்டம் நடப்பது என்பது, நோக்கத்தை திசைதிருப்பும் செயலாகத்தான் கருதுகிறேன். கண்டிக்கப்பட வேண்டியவர்கள் மத்திய, மாநில அரசுகள்தான். ஜல்லிக்கட்டு விவகாரத்தில், மாநில அரசு மெத்தனப் போக்கைக் கையாள்கிறது. மத்திய அரசு அலட்சியப் போக்கில் நடந்து கொள்கிறது. இரண்டு அரசுகளும் தமிழர்களை அவமதிக்கின்றன.
உச்ச நீதிமன்றம் தடை செய்திருக்கின்ற விவகாரத்தில், வழக்கை விரைந்து முடிக்க மாநில அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 2014-ம் ஆண்டு முதல் இன்று வரையில், 'அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்' என இவர்கள் எந்த அழுத்தத்தையும் தரவில்லை. முன்பு இந்த விவகாரம் எழுந்தபோது, ' எங்களால் அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது. மாநில அரசு கொண்டு வரலாம்' என்றார் மத்திய அமைச்சர் ஒருவர். மாநில அரசு ஏன் அவசரச் சட்டம் கொண்டு வரவில்லை? அவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டை மாநில அரசு நடத்தியிருக்க முடியும்? அதன்பிறகு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றிருக்க முடியும்? மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தால், அரசைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருக்கலாம். அதைச் செய்ய தவறிவிட்டனர்.
மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை பொருட்படுத்தவில்லை. உச்ச நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டை புறம் தள்ளியிருக்கிறார்கள். மாணவர்களின் போராட்டம் என்பது தொண்டு நிறுவனத்துக்கு எதிரான போராட்டமாக முதன்மைப்படுத்தப்படுவதுதான் அதிர்ச்சியளிக்கிறது. மாநில அரசும், தங்களுக்கு சாதகமான சூழலாக இதை மாற்றிவிட்டது. வறட்சி தொடர்பான விவகாரத்தில் மாநில அரசு அமைதியாக இருக்கிறது. மத்திய அரசுக்கு நம்மைப் பற்றி எந்தவிதக் கவலையும் இல்லை. வர்தா புயலுக்கு எந்தவித நிவாரணத்தையும் பிரதமர் அளிக்கவில்லை. வறட்சி குறித்து விவாதிக்க கமிட்டி அமைத்தனர். 'பாதிப்பைப் போக்குவதற்கு 39 ஆயிரம் கோடி வேண்டும்' என்றும் 'முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும்' என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இதுகுறித்து இன்று வரையில் மத்திய அரசு எந்தப் பதிலும் சொல்லவில்லை. இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளும் முடிவில் மத்திய அரசு இருக்கிறது. அதே அளவு யோசனையுடன்தான் மாநில அரசும் செயல்பட்டு வருகிறது.
அ.தி.மு.கவின் கட்சித் தலைமையில் மாற்றம் நிகழ்ந்திருக்கும் சூழலில், ஜெயலலிதாவின் வாரிசு என்ற பெயரில் தீபா என்பவர் களமிறங்கியிருக்கிறார். இவர் குறித்தான செய்திகளை பின்னுக்குத் தள்ள வேண்டிய தேவை ஆளும்கட்சிக்கு இருக்கிறது. இந்த விவாதங்களை விலக்கி வைப்பதற்காகவே, ஜல்லிக்கட்டு போராட்டத்தை அரசு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. இதை என்னால் உணர முடிகிறது. தொடக்கத்திலேயே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். மாணவர்கள் மீது தடியடி நடத்தாமல் தவிர்த்திருக்கலாம். அவ்வாறு ஈடுபட்டதால்தான், விவகாரம் இந்தளவுக்கு வந்து நிற்கிறது. ஒட்டுமொத்த உலக அரங்கில், தமிழ்நாடு எல்லா பிரச்னைகளிலும் தன்னிறைவு பெற்றுவிட்டதைப் போலவும், அடுத்தகட்டமாக காளை மாட்டுடன் விளையாடுவதுதான் மிச்சமிருக்கிறது என்பதைப் போல முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் மரணம், மாநிலத்தின் வறட்சி ஆகியவை குறித்தோ, மாநில உரிமைகளைப் பற்றியோ, ஆற்று நீர் உரிமைகளைப் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லாமல், 'தமிழன் நிறைவு பெற்றுவிட்டான்' என்பதைப் போல், ஒரு சித்திரத்தை உருவாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு விவகாரம் கையாளப்பட்டு வருகிறது. நமது பாரம்பர்ய பண்பாட்டு உரிமைகளை மீட்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்தப் போராட்டம் வீழ்ச்சியை நோக்கிப் போகும்போது, பொதுவாக உலக அரங்கில் வேறு மாதிரியான பார்வையை உருவாக்கும். கலாசார உரிமையைப் பற்றிப் பேசுவது என்பது நுண் அரசியல். இதனால் மக்களின் முக்கியமான பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்படும்.
காதல் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவது; மாட்டுக் கறி திண்பதைப் பற்றி விவாதிப்பது; காளை மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டை பற்றிப் பேசுவது போன்றவை மதவாத அமைப்புகளும் சாதிய அமைப்புகளும் உயர்த்திப் பிடிக்கும் நுண் அரசியல். 'கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம்' என்று எதிர்த்துப் போராடுவதுதான் அடிப்படையான அரசியலாக இருக்க முடியும். ஜல்லிக்கட்டுக்காக விடுதலைச் சிறுத்தைகளும் போராடிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம். தொடர்ந்து ஆதரவளிப்போம். ஆனால், கலாசாரத்தை உயர்த்திப் பிடிக்கும் நுண் அரசியல் என்பது, 'பசுக்கறி தின்னக் கூடாது' என பா.ஜ.க கூறுவது எப்படி விமர்சனத்துக்கு ஆளாகிறதோ அதைப் போலத்தான். மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக, ஜல்லிக்கட்டு போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். ஆனால், பீட்டா என்ற சர்வதேச அமைப்பு தொடுத்திருக்கும் வழக்கின் மூலம், இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பதை முன்னிறுத்தியதாக, ஜல்லிக்கட்டு போராட்டம் அமைந்துவிடக் கூடாது என்பதே என்னுடைய விருப்பம். தொண்டு நிறுவனத்தை முன்னிறுத்துவதன் மூலம் வேறு ஏதோ ஓர் அரசியல் இருப்பதாக உணர்கிறேன். இந்த விவரம் அறியாமல் மாணவர்கள் களத்தில் நிற்கிறார்களோ என்ற ஐயமும் சேர்ந்தே எழுகிறது" என்றார் நிதானமாக.
- ஆ.விஜயானந்த்