Published:Updated:

வால் ஸ்ட்ரீட் போராட்டமும்... மெரினாவும்!

வால் ஸ்ட்ரீட் போராட்டமும்... மெரினாவும்!
வால் ஸ்ட்ரீட் போராட்டமும்... மெரினாவும்!

‘ஆட்பஸ்டர்ஸ்’ என்னும் அமெரிக்கச் சுற்றுச்சூழல் இணையப் பத்திரிகை 2011-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி இப்படியான அறிவிப்பை வெளியிட்டது, “செப்டம்பர் 17-ம் நாள் லோயர் மன்ஹட்டனுக்கு அலைபோல் திரண்டு வாரீர்..! கூடாரங்கள், சமையலறைகள், வழியடைப்புகள் அமைத்து வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்”.

இந்த அறிவிப்பு வந்தபோது முதலில் நியூயார்க்வாசிகள், அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதாவது, அந்த ஓர் அறிவிப்பை மட்டும் வைத்துக்கொண்டு லட்சக்கணக்கான மனிதர்களைத் திரட்ட முடியுமா என்ற ஐயம்தான் அதிகமாக இருந்தது. அரசும் இந்த அறிவிப்பை அலட்சியமாகக் கருதியது.

நம்மால் முடியுமா...?

ஆனால், அப்போது அங்கு வசித்த மத்தியதர வர்க்கத்திடம், ஓர் உஷ்ணம் உள்ளுக்குள் கனன்றுக் கொண்டு இருந்தது. அது, உலகெங்கும் நிலவும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் அமெரிக்காவில் நிலவிய வேலையில்லாத் திண்டாட்டங்கள், கழுத்தை நெரிக்கும் கடன் சுமை, தவறான பொருளாதாரக் கொள்கை குறித்த கோபக்கனல்.... இவற்றையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவர நம் அரசாங்கத்துக்குக் கடும் அழுத்தத்தைத் தர வேண்டும் என்று அமெரிக்கவாசிகள் நினைத்தார்கள். 

சிறு அறிவிப்புதான். ‘நம்மால் முடியுமா... என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். எல்லோரும் யோசித்துக்கொண்டிருந்தால் மட்டுமே, ஓர் அடிகூட நகர முடியாது. வேகமாக முன்னேறிச் செல்வோம். இணைய விரும்புபவர்கள் இணைந்துகொள்ளட்டும்’ என்று வால் ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவதற்கான போராட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கினர். இதற்கான ஒரு பொது சபையை அமைத்தனர். 

காளை சிலையும்... கண்ணகி சிலையும்!

இந்தப் பொது சபையின் முதல் கூட்டம், ஆகஸ்ட் 2-ம் நாளன்று பெளலிங் கிரீன் பார்க் முனையில் அமைந்துள்ள வால் ஸ்ட்ரீட் சின்னமான பாயும் காளை சிலை அருகே கூடியது. இதன் முதல் கூட்டம் அப்படியொன்றும் நம்பிக்கை தரும்விதமாக இல்லை. வழமையான புள்ளிவிபரம் கொண்ட உரைகளால் வந்தவர்கள் பொறுமை இழந்தார்கள். ‘‘உருப்படியான செயலில் இறங்குவோம்’’ என்றார்கள். அடுத்த கூட்டம், ஆகஸ்ட் 9 - ம் தேதி ஐரிஷ் பட்டினி நினைவுச் சின்னம் அருகே கூடியது. இப்போது இருள் கிழித்து சன்னமான ஒளிவீசத் தொடங்கியது. வந்தவர்கள் நம்பத் தொடங்கினார்கள். “ஆம்... நம்மால் வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்ற முடியும்...!”. சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. நாட்கள் செப்டம்பர் 17-ம் நாளை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அதே சமயம், இவர்களின் போராட்டத்துக்கான முன்னேற்பாடுகளாக சமையல், செய்தி, இணையதளம், வெளியுறவு, துப்பரவு என பல குழுக்கள் அமைக்கப்பட்டன. 

எல்லாம் சரியான திசையில் பயணிக்க... செப்டம்பர் 17 இருள் விலகி, சூரியன் தன் ஒளியை வால் ஸ்ட்ரீட் மீது படரவிட்டது. நூற்றுக்கணக்கில் தொடங்கிய மக்கள் திரள்... கொஞ்சம் கொஞ்சமாக ஆயிரம்... லட்சங்களை அடைந்தது. இறுதியில், அவர்கள் (வாஸ்கை) வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றினர். 

“சொந்த மக்களைப் பொருளாதாரரீதியாகக் குத்திக் கிழிக்கும் வால் ஸ்ட்ரீட் காளையை அடக்கு... அடுத்த நாடுகள் மீது குற்றப் போர் செய்வதைக் கைவிடு” என்ற கோஷங்களில் நியூயார்க் குலுங்கத் தொடங்கியது. 

அப்படியே காலவெளியில் ஆறு ஆண்டுகள் பயணித்து... நிகழ்காலத்துக்கு வாருங்கள். மெரினாவுக்கு வாருங்கள். வாஸ்கை போராட்டத்துக்கும்... ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டத்துக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் தொடங்கிய போராட்டமும் இப்படியானதாகத்தான் இருந்தது. அலங்காநல்லூரில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஜனவரி 17-ம் தேதி முதலில் 10 பேர்தான் கூடினார்கள். அப்போது அந்த இடத்தைக் கடந்துசென்ற காவல் துறை, அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘ஏதும் அறியாச் சிறுவர்கள், விபரம் புரியாமல் நிற்கிறார்கள்... கலைந்துச் சென்றுவிடுவார்கள்’ என்று ஒருவிதமான எள்ளலுடன் சென்றிருக்கக் கூடும். அடுத்து, ஒரு மணி நேரம் கடந்திருக்கும். கூட்டம் விரிவடைந்தது. 100... 200 என்று பெருகிய கூட்டம் மாலை 6 மணிக்குள் 5,000 ஆகியது. காவலர்கள் பேசிப் பார்த்தார்கள்... வழக்கமான தங்கள் தந்திரங்களைப் பிரயோகித்துப் பார்த்தார்கள். எதுவும் எடுபடுவதாகத் தெரியவில்லை. இறுதியாக அவர்களால் செய்ய இயன்றது அந்தப் பகுதியின் மின் இணைப்பைத் துண்டித்ததுதான். அமைதியாகப் போராட்டக்காரர்கள் தங்கள் கைப்பேசியில் ஒளியை ஏற்றி... அந்த இடத்தில் அப்படியே அமர்ந்தார்கள். 

“நூற்றாண்டு கோபம்”

வால் ஸ்ட்ரீட் போராட்டக்காரர்கள்போல, இங்கு தனித்தனி குழுக்கள் இல்லைதான். ஆனால், இங்கு எல்லாம் ஓர் ஒத்திசைவில் நடந்தது. போராட்டக்காரர்கள் களத்தில் நிற்க... அவர்களுக்கு ஆதரவாகக் களத்துக்கு வெளியே இருந்த இளைஞர்கள் உணவு, தண்ணீர், பிஸ்கெட் முதலியவற்றைச் சேகரித்தார்கள். இவர்களின் கோரிக்கைக்கு  இணையம் மூலமாக ஆதரவு திரட்டினார்கள். போராட்டம் மேலும்மேலும் விரிவடையத் தொடங்கியது. குடும்பம் குடும்பமாக மெரினாவுக்கு வரத் தொடங்கினார்கள். இப்போது, மெரினா தமிழகத்தின் மைய அரசியல் களம். அங்கே அரசியல் வகுப்புகள் நடக்கின்றன. அங்கே, ‘ஜல்லிக்கட்டு’ என்பது மட்டும் அந்த இளைஞர்களின் ஒற்றைக் கோரிக்கையாக இல்லை. வந்த அனைவரும் தெளிவாக அரசியல் பேசுகிறார்கள்; தொடந்து மத்திய அரசு தமிழ் மக்களை வஞ்சிக்கிறது என்று தரவுகளுடன் உரையாடுகிறார்கள்; அரசியல்வாதிகள் எப்படி நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று விளக்குக்கிறார்கள்.


 

‘‘இது ஏதோ மூன்று நாட்கள் கோபம் அல்ல... நூற்றாண்டு கோபம். எல்லாவற்றிலும் தமிழக மக்களைக் கிள்ளுக்கீரையாக மத்திய அரசு நினைக்கிறது. இதற்கு தமிழக ஆட்சியாளர்களும் துணை போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தனை நாட்கள் இதைக் கண்டு தகித்த இந்தக் கோபம்தான் மெரினாவிலும், அலங்காநல்லூரிலும், தமுக்கத்திலும் வெடித்திருக்கிறது’’ என்கிறார்கள் களத்தில் இருக்கும் இளைஞர்கள்.  

வால் ஸ்ட்ரீட் போராட்டத்தின் வெற்றி தோல்வியைக் கடந்து... அமெரிக்கப் பேரரசின் ஆட்சியாளர்களை அச்சுறுத்திய... உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த மிகப்பெரிய போராட்டம் அது. இது, நம் மெரினா போராட்டத்துக்கும் பொருந்தும். இது, வெற்றியா... தோல்வியா என்பதையெல்லாம் கடந்து, தமிழ் இளைஞர்கள் ஒரு போராட்டத்தை எப்படி எந்தத் தலைமையும் இல்லாமல்... கொள்கையை மட்டும் தலைமையாக்கி முன்னேறலாம் என்பதைக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். ஆம்... நாளையப்பொழுதை வடிவமைக்கப்போகிற ஒரு தலைமுறை அரசியல் பிறந்துவிட்டது...!

- மு. நியாஸ் அகமது