Published:Updated:

‘யாரும் முன்னெடுக்காமல், போராட்டமே தன்னை நடத்திச் செல்கிறது!’ - படைப்பாளிகள் பெருமிதம்

‘யாரும் முன்னெடுக்காமல், போராட்டமே தன்னை நடத்திச் செல்கிறது!’ - படைப்பாளிகள் பெருமிதம்
‘யாரும் முன்னெடுக்காமல், போராட்டமே தன்னை நடத்திச் செல்கிறது!’ - படைப்பாளிகள் பெருமிதம்

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழக இளைஞர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் வரலாற்று நிகழ்வாகி உள்ளது. அலங்காநல்லூரில் உருவாகி இன்று சர்வதேச அளவுக்கு விரிவடைந்துள்ள இந்தப் போராட்டம் ஜல்லிக்கட்டோடு முற்றுப்பெற்று விடுமா? எவ்வித அழைப்பும், தலைமையும் இல்லாமல் தன்னெழுச்சியாக தங்கள் பண்பாட்டுக்கு எதிரான செயல்பாடுகளை கண்டித்து, களத்துக்கு வந்த இளைஞர்கள், காளை வாடிவாசலைத் தாண்டியதும் தங்கள் அன்றாடங்களுக்கு நகர்ந்து விடுவார்களா? எவருமே எதிர்பாராத வகையில், அரசியல்வாதிகளை புறம்தள்ளி, நடிகர்களுக்கு அனுமதி மறுத்து, தங்களுக்குத் தாங்களாகவே வரம்புகளை உருவாக்கிக்கொண்டு, ஆண்களும் பெண்களுமாக கரம்கோத்து, கட்டுக்கோப்புடனும், கம்பீரத்துடனும் முன்மாதிரியான ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ள இளைஞர்கள், இதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வார்களா? இன்னும் தீர்க்கப்படாத, தமிழகத்தின் மேல் வஞ்சனையாக சுமத்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக, வாழ்வாதாரமான விவசாயிகள் பிரச்னைக்காக, மீனவர்கள் பிரச்னைக்காக இவர்கள் போர்க்குரல்கள் நீளுமா? தலைமை இல்லாத, இந்த தன்னெழுச்சிப் போராட்டத்தை ஒரு அமைப்பாக குவியப்படுத்துவது சாத்தியமா? அப்படியொரு கட்டமைப்பை எப்படி முன்னெடுக்க வேண்டும்? அக்கறை கொண்ட சில படைப்பாளிகள் சொன்ன கருத்து.

கவிஞர் பழனிபாரதி

இந்தப் போராட்டத்தை யார் வளர்த்தெடுத்தது? தன்னெழுச்சியாகத்தானே நடந்தது. போராட்டம் தானே தன்னை தகவமைத்துக் கொள்ளும். இளைஞர்கள் சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டார்கள். தலைமைகளே இல்லாமல் தன்னெழுச்சியாக ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராட்டங்கள் தலை நிமிர்ந்திருக்கின்றன. நாறும் சுயநலச் சாக்கடையில் அரசியல்வாதிகளின் முகமூடிகள் நெளிகின்றன. இளைஞர்கள் தங்கள் உரிமைகளைப் பெறவேண்டும் என்று நினைத்துவிட்டால் அவர்கள் ஆகாய விமானங்களைக் கல்லெறிந்து வீழ்த்துவார்கள். டாங்கிகளைக் கைகளாலேயே திருப்புவார்கள் என்றார் பிடல் காஸ்ட்ரோ... அது இதுதான். 

இளைஞர்கள் எப்போதும் சுதந்திரமானவர்கள். ஜாதி, மதமற்றவர்களாகவும், அரசியல் உரிமை முழக்கங்களைக் கொண்டவர்களாகவும் அச்சமற்றவர்களாகவுமே  இருப்பார்கள். 10 பேரால் தொடங்கங்கப்பட்ட ஒரு போராட்டம் இளைஞர்களின் சக்தியால் மிகப்பெரும் தேசத்தின் போராட்டமாக மாறியிருக்கிறது. இன்று நடிகர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் ஊடகங்களால் அவர்கள் பக்கம் கேமராவைத் திருப்ப முடியவில்லை. அதுதான் இளைஞர்களின் சக்தி.

"யார் பந்தல் போடுவது, யார் சோறு போடுவது, யார் தண்ணீர் கொடுப்பது, யார் தலைமை வகிப்பது... இவ்வளவு வீரியமாக போராட்டம் நடக்கிறதே" என்று வியக்கிறார் ஒரு மத்திய அமைச்சர். கடற்கரையை முழுவதுமாக சுற்றி வந்தேன். எந்தப் பக்கமும் மதுநெடி கிடையாது. பெண்கள் அவ்வளவு பாதுகாப்பாக, மரியாதையாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் போட்ட குப்பையை அவர்களே அள்ளுகிறார்கள். சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார்கள். காவல்துறையினரிடம், "நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம்... நிம்மதியாக அமருங்கள்..."  என்று நட்புணர்வோடு பேசுகிறார்கள். 

ஜல்லிக்கட்டு என்று தொடங்கிய போராட்டம் இப்போது காவிரி பிரச்னை, விவசாயிகள் பிரச்னை என விரிகிறது. பன்னாட்டு குளிர்பானங்களை கீழே ஊற்றுகிறார்கள். இந்த நெருப்பை யாரும் பற்றவைக்கவில்லை. அதனால்தான் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அலங்காநல்லூரில் நடந்த தடியடியோடு முடிய வேண்டிய போராட்டம் இளைஞர்களின் தன்னெழுச்சியால் சர்வதேச பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது. உலகில் எங்கெல்லாம் ஒற்றைத் தமிழன் இருக்கிறானோ, அங்கெல்லாம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கம் கேட்கிறது. 

எந்தப் போராட்டமும் தலைமைகளை தயாரித்துக்கொண்டு வருவதில்லை. போராட்டத்தில் தலைவர்கள் இனம் காணப்படுவார்கள். காந்தி தலைவராக பிறக்கவில்லை. தலைவராக உருவானார். இந்த போராட்டத்தில் இருந்தும் தலைவர்கள் உருவாவார்கள். இன்றிருக்கும் ஊடக வசதி இளைஞர்களின் எல்லையை விரிவடைய வைத்திருக்கிறது. காவலர்கள் மொபைல் ஜாமரை நிறுவினால் புதிதாக ஒரு ஆப்ஸை உருவாக்கி எல்லோருக்கும் தருகிறார்கள் இளைஞர்கள். 

"இளைஞர்கள் உணர்விழந்து விட்டார்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் இளைஞர்கள் பணம் சேர்ப்பதையே நோக்கமாகக் கருதி வாழ்கிறார்கள்" என்ற கற்பிதங்கள் எல்லாம் இந்த போராட்டத்தில் சுக்குநூறாகி விட்டது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் இளைஞர்கள்தான் இந்தப் போராட்டத்தின் மையமாக இருக்கிறார்கள். நல்ல வாழ்க்கையை எதிர்காலத்தை நோக்கி இளைஞர்கள் நடக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கருவேல மரங்களை அகற்றுவது, அந்நிய முதலீடுகளைத் தடுப்பது பற்றியெல்லாம் கடற்கரையில் கூடியிருக்கும் இளைஞர்கள் பேசத் தொடங்குகிறார்கள். இது மிகப்பெரும் தொடக்கம். இதை யாரும் முன்னெடுக்கத் தேவையில்லை. போராட்டமே முன்னெழுந்து நடக்கும். 

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

உண்மையில் இந்தப் போராட்டத்தை நான் கூர்த்து கவனித்து வருகிறேன். 1965க்குப் பிறகு இது மிகப்பெரிய மாணவர் எழுச்சி என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கும், இப்போது நடக்கும் போராட்டத்துக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன என்பது என் கருத்து. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், போராட்டத்திற்குப் பின்னால் ஒரு கட்சி (தி.மு.க) இருந்தது. எதிராக ஆளும் கட்சி இருந்தது. ஆளும்கட்சி அந்தப் போராட்டத்தை ஒடுக்க முயன்று, அது பெரிதாக வளர்ந்து 50 நாட்கள் வரை நீண்டு உயிர்பலி வரைக்கும் சென்றது. உணர்வுப்பூர்வமான, கோபாவேசமாக நடந்த போராட்டம் அது. அதற்கு ஒரு பகை இலக்கு இருந்தது. ஆதரவு சக்தி இருந்தது. ஆனால் இப்போது நடக்கும் போராட்டத்தை எல்லோரும் ஆதரிக்கிறார்கள். பிஜேபியும் "ஆமா, கண்டிப்பா வேணுமில்லே" என்கிறார்கள். 

அந்தப் பிள்ளைகள் கவனமாக, அரசியல் கட்சிகள் உள்ளே வராதீர்கள் என்று கூறுகிறார்கள். அதற்கு என்ன நோக்கம் என்று தெரியவில்லை. திரைப்படத் துறையில் உள்ளவர்களை ஏன் அனுமதிக்கிறார்கள் என்றும் புரியவில்லை. நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஒரு செய்தியை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடிகிறது. இது ஜல்லிக்கட்டுக்கான போராட்டமாக மட்டுமில்லை. பல ஆண்டுகளாக ஏற்பட்ட அழுத்தத்தின் வெளிப்பாடு. 

அரசியல் மீது ஏற்பட்ட வெறுப்பு, அல்லது அரசியல்வாதி என்றாலே தவறானவர் என்று ஏற்றப்பட்ட வெறுப்பு. தவறான அரசியல்வாதிகளை காண்பித்து, அரசியலே தவறானது என்று பயிற்றுவிக்கப்பட்ட வெறுப்பு. நீதிமன்றங்களின் மீது இழந்துபோன நம்பிக்கை. சல்மான்கானுக்கு ஒரே ராத்திரியில் ஜாமீன் கொடுக்க முடிகிறது; ஆனால் எங்கள் வழக்குகள் நெடுங்காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன; ஆகமங்களில் கைவைக்க முடியவில்லை, அது பண்பாடு என்கிறார்கள்; எனில்... ஜல்லிக்கட்டு தமிழர்களின் பண்பாடு இல்லையா என்று கோபம் வருகிறது. இப்படி அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளின் வெடிப்பாக அது இருக்கலாம். 

ஆனால் இந்த கோபம் இதோடு தீர்ந்து போகுமா? வாடிவாசலில் காளை வெளியே வந்தவுடன் நம் பிரச்னைகள் அனைத்தும் முடிந்து விட்டனவா? அல்லது, பிரச்னைகளை எதிர்கொள்ளப் போகிற அரசியலற்ற ஒரு சக்தி தலையெடுத்திருக்கிறதா? காலப்போக்கில் இது ஒரு நிறுவனமாகி இதற்குள் தலைவர்கள் வரப்போகிறார்களா? என்றெல்லாம் எனக்கு கேள்விகள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. 

இதில் பெரும்பான்மையாக மாணவர்கள் இருக்கிறார்கள். இந்தப் போராட்டம் வெற்றி பெற்று மாணவர்கள் கல்விக்கூடங்களுக்குத் திரும்பி விட்டார்கள் என்றால், திரும்பவும் கூடுவதற்கான வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது ஒரு நடைமுறை சார்ந்த கேள்வி. அந்த அடிப்படையில் இது நிலையான சக்தியா? தலைமையே இல்லாத நிலை பலமா? பலவீனமா என்பதும் எனக்குப் புரியவில்லை. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனால், இது வலிமையான சக்தியாக தொடருமானால் அரசியல்வாதிகளுக்கு அச்சமூட்டும் சக்தியாக வளரும் என்பதில் சந்தேகம் இல்லை. என்னுடைய விருப்பம் என்னவென்றால், இந்தப் பிள்ளைகள் ஜல்லிக்கட்டு என்ற எல்லையைத் தாண்டி, விவசாயிகள் பிரச்னை, மீனவர்கள் சுட்டுக் கொள்ளப்படுவது, காவிரி ஆணையம் அமைக்கப்படாதது, புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு போன்ற பிரச்னைகளுக்காகவும் களத்திற்கு வர வேண்டும். குறிப்பாக, இனிமேல் யாராவது ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் நாங்கள் அத்தனை பேரும் திரண்டு விடுவோம் என்று சொன்னால் நேர்மையான அரசியலுக்கும் வழி கிடைக்கும். 

பேராசிரியர் அ.மார்க்ஸ் 


இந்தப் போராட்டத்தை அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் போராட்டத்தோடும் அரேபிய வசந்தம் என்று சொல்லப்பட்ட ‛அராப் ஸ்ப்ரிங்’ போராட்டத்தோடும் ஒப்பிடத்தோன்றுகிறது. தலைமைகள் மீதான அவநம்பிக்கைகளில் இருந்துதான் இந்தப் போராட்டம் உதித்திருக்கிறது. பெரிய திட்டங்கள் இல்லாமல் உருவானாலும் இந்தப் போராட்டத்தின் போக்கானது மிகப்பெரிய இலக்கு நோக்கிச் சென்று கொண்டிருப்பது வெற்றிகரமானது. அவசர சட்டம் இயற்றி ஏதோ ஒரு வகையில் அரசுகள் பணிவது வெற்றிகரமான விஷயம்தான். இனிமேல் பண்பாடு சார்ந்த விஷயங்களில் இனி நீதிமன்றங்களோ, அரசாங்கமோ தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து விடமுடியாது. அவர்களுக்கு ஒரு படிப்பினையாகவும் இந்தப் போராட்டம் இருக்கிறது.


-வெ.நீலகண்டன்