Published:Updated:

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடக்கம் முதல்... முடிவுவரை!

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடக்கம் முதல்... முடிவுவரை!
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடக்கம் முதல்... முடிவுவரை!

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடக்கம் முதல்... முடிவுவரை!

‘வாடிவாசல் திறக்கும்வரை... வீடு வாசல் போகமாட்டோம்’ என்று அலங்காநல்லூரில் கடந்த 16-ம் தேதி ஆரம்பித்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறப்போராட்டம்... தமிழகம் முழுவதும் இளைஞர்களாலும், மாணவர்களாலும், பொதுமக்களாலும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது; சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள்கூடியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது; இதன் தொடர்ச்சியாக வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆதரவு பெருகியது. இதைக் கண்டு உலக நாடுகளே தமிழகத்தைத் திரும்பிப் பார்த்ததுடன், இந்தப் போராட்டம் வரலாற்றிலும் இடம்பிடித்துக்கொள்ளத் தூண்டுகோலாக இருந்தது. 

ஒளியை ஏற்படுத்திய போராட்டம்!
தமிழகம் முழுவதும் அமைதியாக ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் இனம், மதம் பாராமல் தமிழன் என்ற உணர்வுடனேயே அனைவரும் கலந்திருந்தனர். போராட்டக்காரர்களுக்குத் தன்னார்வலர்கள் பலர் தங்களால் முடிந்த உணவுப் பொட்டலங்களையும், தண்ணீர் பாக்கெட்களையும் வழங்கி மகிழ்வித்தனர். அவர்களுடைய அத்தியாவசியத் தேவைகளான இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு மொபைல் டாய்லெட்களும், ஏதாவது விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. போராட்டக் களங்களில் அவர்களை ஊக்குவிப்பதற்காக ஜல்லிக்கட்டு பற்றிய பாடல்கள் பாடப்பட்டன; அதுபற்றிய கருத்துகள் பேசப்பட்டன; இடையிடையே இளைஞர்களின் நடனங்கள் நடைபெற்றன. சென்னை மெரினாவில் இரவு நேரத்தில் தெரு விளக்குகளைத் தமிழக அரசு அணைத்துவைத்திருந்தாலும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தங்கள் கைப்பேசிகள் மூலம் ஒளியை ஏற்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். இதோடு போராட்டக் களத்தில் அந்த ஆர்வலர்கள் செய்த மகத்தான காரியம் கடற்கரையில் குப்பைகளை அள்ளினார்கள்; சாலைப் போக்குவரத்தைச் சரிசெய்தார்கள்; பெண்களிடம் கண்ணியமாய் நடந்துகொண்டார்கள். 

‘‘அரசியல் பேசவேண்டாம்!’’
எந்தத் தலைவர்களும் இல்லாத இந்தக் கூட்டத்தைப் பார்த்தும்... இவர்களுடைய அறவழியைப் பார்த்தும் உலகமே பிரமித்துப் போனது. இதனால் திரைப் பிரபலங்களும், அரசியல்வாதிகளும் ஆங்காங்கே பங்கெடுக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் உள்ளே நுழைந்த தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், நடிகர் டி.ராஜேந்தர் போன்றோர் சென்னைப் போராட்டக்காரர்களுக்குத் தங்களுடைய வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்தனர். அவர்களிடம், ‘‘அரசியல் பற்றி எதுவும் பேசவேண்டாம்’’ என்று கட்டளையிட்டார்கள். அதன்பிறகு தொடர்ந்து வந்த பிரபலங்களை எல்லாம் அவர்கள் சேர்க்கவில்லை. இதனால் அந்தப் பிரபலங்கள் தன் கட்சித் தொண்டர்களுடன் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவைகளில் கலந்துகொண்டனர். இதுதவிர, மதுரை மற்றும் சேலத்தில் மாணவர்களால் ரயில்கள் சிறை பிடிக்கப்பட்டன. ரயில் நிலையங்களும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தன. இதனால் தென்னகத்துக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மதுரையில், சீமான் தடையை மீறி... அவர் ஏற்கெனவே அறிவித்தபடி ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டினார். இதேபோன்று தமிழகத்தின் சில இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், சேவல் சண்டை, மஞ்சு விரட்டு போன்றவை நடத்தப்பட்டன. 

ஒரு சிறுமியின் கோஷம்!
தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியதால்... பல ஊர்களிலிருந்தும் சென்னை மெரினாவுக்குத் தமிழர்கள் வரத் தொடங்கினர். அதிலும் குழந்தைகளின் இதயங்களில்கூட ஜல்லிக்கட்டுத் தொற்றிக்கொண்டது. அதிலும் குறிப்பாக, அலங்காநல்லூரில் நடந்துவந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிறுமியின் புகைப்படமும்... அவர் எழுப்பிய கோஷமும் சமூக வலைதளங்களில் படுவேகமாக வைரலாகியது. இதனால் தன் பெற்றோர்களுடன் குழந்தைகளும் ஜல்லிக்கட்டுப் போராட்டங்களில் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து தமிழர்கள் குடும்பம் குடும்பமாய் போராட்டக் களங்களில் குவியத் தொடங்கினர். 

இந்த நிலையில் வணிக அமைப்பினர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒருநாள் கடையடைப்புச் செய்தனர்; ஆட்டோ, லாரி, பேருந்து போன்ற வாகன ஓட்டுநர்களும் ஜல்லிக்கட்டுக்காகக் களம் இறங்கினர்; நடிகர் சங்கம் சார்பில் ரஜினி, கமல், அஜித் உட்பட பல நடிகர் நடிகைகளும் உண்ணாவிரதம் இருந்தனர். பிரதமர் வீட்டு முன்பு அன்புமணி ராமதாஸ் தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர், அவர் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டி மனுக் கொடுத்தார். மேலும், ஐ.டி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் எனப் பல தரப்பினரும் பீட்டாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். தி.மு.க சார்பில் ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் செய்யப்பட்டது. அவரது தலைமையிலேயே மற்றொரு நாள் உண்ணாவிரதமும் மேற்கொள்ளப்பட்டது. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு பற்றிய மணற்சிற்பம் அமைக்கப்பட்டது. திரைப்படக் காட்சிகளும், படப்பிடிப்புகளும் ஒருநாள் ரத்து செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

கண்டனங்களும்... விமர்சனங்களும்!
காவல் துறையைச் சேர்ந்த சிலர்... பணியில் இருந்தபோது தமிழன் என்ற முறையில் ஜல்லிக்கட்டு ஆதரவாகப் பேட்டி கொடுத்தனர். இப்படி எல்லோராலும் வேகமெடுத்த ஜல்லிக்கட்டுக்குப் பதில் சொல்லாமல்... தமிழக அரசு மெளனம் காத்துவந்தது. இதனால், முதல்வர் ஓ.பி.எஸ் மீதும்... பிரதமர் மோடி மீதும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில், போராட்டக்காரர்கள் தொடர்ந்து மீம்ஸ் போட்டு அவர்களை வறுத்தெடுத்த நேரத்தில்... பி.ஜே.பி பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமியும் பீட்டா ஆதரவாளரான ராதா ராஜனும் தமிழினத்தையும், பெண்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். இதனால் அவர்களுக்கு எதிராகவும் களத்தில் இறங்கினர் ஆர்ப்பாட்டக்காரர்கள். 

கையைவிரித்த பிரதமர்!
ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சம்பெற்றதால்... டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார், ஓ.பி.எஸ். பிரதமரோ, ‘‘ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் இப்போது எதுவும் செய்ய முடியாது’’ என்று கையைவிரித்தார். இருந்தாலும், ‘‘தமிழகத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்வேன்’’ என்று உறுதியளித்தார். இதனால் மனம்தளராத ஓ.பி.எஸ்., அங்கேயே தங்கிருந்து சட்ட வல்லுநர்களுடன் ஜல்லிக்கட்டு குறித்து ஆலோசனை நடத்தினார். சட்டமன்றமும், நாடாளுமன்றமும் தற்போது கூடாத நிலையில், ‘அவசர சட்டம் ஒன்றை இயற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம்’ என்று சொல்லப்பட... அதையும் செய்து காட்டினார் ஓ.பி.எஸ். அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதினார். 

வாடிவாசலைப் பார்க்காத ஓ.பி.எஸ்.!
அந்த மகிழ்ச்சியில், ‘‘22-ம் தேதி அலங்காநல்லூர் மற்றும் சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தலாம். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நானே தொடங்கிவைப்பேன்’’ என்றும் பேட்டியளித்தார். அந்த நாளும் வந்தது... அவரும் அலங்காநல்லூர் செல்வதற்காக மதுரை சென்றார். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள், ‘‘காளைகளை நாங்கள் அவிழ்த்துவிட முடியாது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்’’ என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அலங்காநல்லூரின் வாடிவாசலைக்கூடப் பார்க்காமல் வாடிப்போய் சென்னை திரும்பினார் ஓ.பி.எஸ். இருந்தாலும்... புதுக்கோட்டை, திருச்சி போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், எல்லோருக்கும் வார விடுமுறை என்பதாலும் சென்னை மெரினாவில் இன்னும் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், போராட்டக்காரர்களைக் கலைக்கச் சொல்லித் தமிழகக் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்பார்க்காத போராட்டக்காரர்கள் எப்போதும்போல தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தவண்ணம் இருந்தனர். 

காக்கிகள் கண்மூடித்தனமான தாக்குதல்!
மறுநாள் திங்கள்கிழமை... அதிகாலை நேரம். ‘ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக இன்று தொடங்கியுள்ள தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் எடுக்கப்படும் முடிவினை அடுத்து மாணவர்கள் மதியத்துக்கு மேல் கலைந்து செல்வதாக இருந்தது. ஆனால், அரை தூக்கத்தில் இருந்த போராட்டக்காரர்களின் கூட்டத்துக்குள் கைத்தடிகளுடன் காக்கிகள் நுழைய ஆரம்பித்தனர். ‘போராட்டத்தை அமைதியாக நடத்தியதற்கு நன்றி சொன்னதோடு... அங்கிருந்து அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும்’ என்றும் காக்கிகள் வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் நகர்வதாக இல்லை. இதனால் சிறு தடியடியுடன் காக்கிகளின் பயணம் ஆரம்பமானது. அங்கிருந்தவர்களை குண்டுகட்டாகத் தூக்கியும், விரட்டியும் அடித்தனர்; வலுக்கட்டாயமாக தரையில் இழுத்தும் சென்றனர். இதில் குறிப்பாக, பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், மூதாட்டிகள் எனப் பலரையும் காக்கிகள் கண்மூடித்தனமாகத் தாக்கினர். அதைப் படம்பிடித்த மீடியாவினரையும், ‘‘இங்கிருந்து ஓடிவிடுங்கள்... இல்லையென்றால் உங்களுக்கும் இதே கதிதான்’’ என்று மிரட்டியதுடன், அவர்களையும் பதம் பார்த்தனர். அவர்கள் வைத்திருந்த கேமரா, கைப்பேசிகளையும் வாங்கி உடைத்தனர். 

சமூக விரோதக் கும்பல் வைத்த தீ!
இந்த நிலையில், சென்னை, ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தை சமூக விரோதக் கும்பல் ஒன்று தீ வைத்துக் கொளுத்தியது. இதில், காவல் நிலையம் முழுவதும் சேதமானதுடன், அங்கிருந்த வானகங்களும் தீயில் கருகின. இதன் காரணமாக, அப்பாவி பொதுமக்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீச ஆரம்பித்தனர். அத்துடன் தடியடியும் நடத்த ஆரம்பித்தனர். இதன் தாக்கம் மெரினா பீச்வரை நீண்டது. ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி போன்ற கடற்கரை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்த காவல் துறையினர், அங்கிருந்த பொதுமக்களை அடித்துத் துன்புறுத்தியும், பெண்களைக் கேவலமான வார்த்தைகளால் திட்டியும், அவர்களைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளியும், அவர்களுடைய வீடு மற்றும் வாகனங்களைச் சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களே வாகனங்களுக்கும் தீவைத்தனர். வீடுகளுக்குள் நுழைந்து கறுப்புச் சட்டை அணிந்திருந்த பலரையும் அடித்துத் தாக்கினர். 

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு!
அறவழியில் போராடிய அப்பாவி பொதுமக்களிடமும், ஆர்ப்பாட்டக்காரர்களிடமும் காவல் துறையினர் அராஜகத்துடன் நடந்துகொண்டனர். போலீஸாரின் தாக்குதலால் போராட்டக்காரர்கள் கடலுக்குள் நின்றபடி மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களிடம் பேசியும்... தொடர்ந்து போராட்டத்தினர் கலைவதாக இல்லை. இந்த நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அலங்காநல்லூரிலும் போலீஸ் வன்முறையில் ஈடுபட்டது. இது, ஒருபுறம் நடந்துகொண்டிருக்க... அங்கே கூடிய ஊர்க் கமிட்டி, ‘வரும் பிப்ரவரி 1-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தலாம்’ என்று பேசி முடிவுசெய்தது. ரஜினி, கமல் போன்றோரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தினர். ஆனாலும், போலீஸாரின் வன்முறை வெறியாட்டத்திலிருந்து அவர்களால் மீள முடியவில்லை. 

முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அவசர சட்டம் பற்றி விளக்கவே போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் நேற்று (23-1-17) கூடிய சட்டசபையிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டபோதும்... சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டபோதும் போலீஸாரின் வன்முறைக்கு நேற்று இரவுவரை விடை கிடைக்கவில்லை. வரலாற்றைப் பதிவுசெய்துகொண்டிருந்த இந்த அறவழிப் புரட்சி, மிகவும் அமைதியாக கலையவேண்டிய நேரத்தில் போலீஸாரின் அராஜகத்தால் விரைவிலேயே முடிவுக்கு வந்துவிட்டது என்பதுதான் வேதனை.

- ஜெ.பிரகாஷ் 

அடுத்த கட்டுரைக்கு