Published:Updated:

'சி.எம் ஆன பிறகுதான் அது...!’ ஜெயலலிதாவைப் போல  சசிகலா சபதம்

'சி.எம் ஆன பிறகுதான் அது...!’ ஜெயலலிதாவைப் போல  சசிகலா சபதம்
'சி.எம் ஆன பிறகுதான் அது...!’ ஜெயலலிதாவைப் போல  சசிகலா சபதம்

முதல்வரான பிறகுதான்  சசிகலா  சட்டசபைக்குள் வருவேன் என சபதமிட்டிருப்பதாக கார்டன் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதற்காகத்தான் அவர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு நடந்த முதல் சட்டசபை கூட்டத்துக்கும், குடியரசு தினவிழாவிலும் பங்கேற்கவில்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.  

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது தோழியான சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளரானார். இதன்பிறகு முதல்முறையாக சசிகலா, 'இந்தியா டுடே' நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார். அடுத்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் சசிகலா கலந்து கொண்டார். தற்போது கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 23-ம் தேதி சட்டசபை கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு சசிகலா வருவார் என்று கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வரவில்லை. அடுத்து இன்று நடந்த குடியரசு தின விழாவுக்கு வருவார் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கும் அவர் வரவில்லை. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கொடியேற்ற குடியரசு தின விழா நடந்தது. சசிகலா பங்கேற்காததால் விழாவில் கட்சியினர் கூட்டம் இல்லை. 
 
இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஜெயலலிதா உயிரோடு இருந்த சமயத்தில் அவருடன் அனைத்து நிகழ்வுகளுக்கும் செல்வார் சசிகலா. தற்போது அ.தி.மு.க.வின் தலைமை அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி 1991ல் முதல்முறையாக வெற்றி பெற்ற போது சசிகலா, இளவரசி ஆகியோர் சட்டசபைக்குள் வந்தனர். அப்போது ஜெயலலிதா, சபாநாயகர் இருக்கையிலும், சசிகலா, துணை சபாநாயகர் இருக்கையிலும் அமர்ந்ததாக சர்ச்சையில் சிக்கினர். இதன்பிறகு  தலைமைச் செயலகத்துக்கு சசிகலா சென்றாலும் சட்டசபைக்குள் வருவதில்லை. கடந்த 25.3.1989ல் சட்டசபைக்குள் ஜெயலலிதாவுக்கு நேர்ந்த நிகழ்வின் போது, 'இனி முதல்வரானப்பிறகுதான் இந்த சபைக்கு வருவேன்' என்று சபதமிட்டார். அதுபோல முதல்வர் என்ற பதவியோடுதான் இந்த சட்டசபைக்குள் வருவேன் என்ற சபதத்தை சசிகலாவும் எடுத்துள்ளார். இதன்பிறகுதான் அரசியல் நிகழ்வுகளில் அவர் பங்கேற்பார்" என்றார். 

இதுகுறித்து கார்டன் வட்டாரங்கள் கூறுகையில், "மெரினாவில் நடந்த நிகழ்வால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் எப்படி அமைதி பூங்காவாக இருந்ததோ அதுபோலவே இருக்க வேண்டும் என்று கட்சியினரிடம் சசிகலா  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் பன்னீர்செல்வத்திடமும் சசிகலா ஆலோசனை நடத்தி உள்ளார்.  அ.தி.மு.க. அரசும், போராடி அவசரச் சட்டத்தை இயற்றியதால் ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தில் மீண்டும் நடத்தப்பட்டுள்ளது. 'மக்களால் நான்... மக்களுக்காகவே நான்...' என்ற ஜெயலலிதாவின் முழக்கத்தின்படியே அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. தற்போது அ.தி.மு.க.வை வலுப்படுத்துவதிலேயே சசிகலாவின் நோக்கமாக இருக்கிறது. முதல்வர், சட்டசபைக்குள் வருவது என்ற ஆசை எல்லாம் கட்சியினரின் மத்தியில் இருக்கலாம். ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றவே சசிகலா செயல்பட்டு வருகிறார். இந்த நேரத்தில் சட்டசபை, அரசு விழாக்களில் பங்கேற்றால் தேவையில்லாத விமர்சனம் எழும் என்பதால் அதுபோன்ற நிகழ்ச்சிகளை சசிகலா தவிர்த்து வருகிறார்" என்றனர். 

-எஸ்.மகேஷ்