Published:Updated:

மனைவியுடன் குடியரசு தின விழாவை சிறப்பித்த முதல்வர் பன்னீர்செல்வம்!

மனைவியுடன் குடியரசு தின விழாவை சிறப்பித்த முதல்வர் பன்னீர்செல்வம்!
மனைவியுடன் குடியரசு தின விழாவை சிறப்பித்த முதல்வர் பன்னீர்செல்வம்!

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சென்னையில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் மனைவியுடன் பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இதுவரை முதல்வரின் மனைவி பொது நிகழ்வில் பங்கற்றது இல்லை. முதன் முறையாக முதல்வர் பன்னீர் செல்வத்தின் மனைவி, பொது நிகழ்வில் கலந்து கொண்டது, அரசு ஊழியர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நிதியமைச்சராக இருந்த பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே பல பிரச்னைகள் அவரை சூழ்ந்து கொண்டிருந்தன. அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாதான், முதல்வராக பொறுப்பேற்க வேண்டுமென தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.  இதனால், முதல்வர் பன்னீர்செல்வத்தால்,  நிம்மதியாக ஆட்சி நடத்த முடியாத சூழல் நிலவியது. 

இதற்கிடையே ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாட்டில் வலுப்பெறத் தொடங்க,  மெரினாவில் இளைஞர்கள், மாணவிகள், பெண்கள் குழந்தைகள் திரண்டனர். 7 நாட்களாக மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதுமே போராட்டம் பரவியது.  இனிமேல் சமாளிக்க முடியாது என்ற எண்ணம் அரசுக்கு ஏற்பட்டது. தொடர்ந்து பன்னீர் செல்வம் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தார். ஜல்லிக்கட்டுக்காக அவசரச்சட்டம் இயற்றப்பட்டது.  

ஜல்லிக்கட்டுக்காக நிரந்தரச் சட்டம் வேண்டுமென போராட்டக்காரர்கள் ஒற்றைக் காலில் நிற்க, முதல்வருக்கு மீண்டும் தூக்கம் போனது. போராட்டக்காரர்கள் கலைந்தால்தான் மெரினாவில் குடியரசுத் தின விழாவை நடத்த முடியுமென்ற நிலை வேறு இருந்தது. பின்னர் போலீசார் நடத்திய தடியடி அராஜகம் ஊருக்கே தெரியும். இளைஞர் படை கலைந்ததையடுத்து சென்னை மெரினாவில் இன்று குடியரசு தின விழா உற்சாகமாக நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் பன்னீர்செல்வத்திடம் ஒரு மாற்றத்தை காண முடிந்தது. இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எந்த ஒரு நிகழ்விலும் பன்னீர் செல்வத்தை மனைவியுடன் காண முடிந்தது இல்லை. அரசு நிகழ்வு, கட்சிக் கூட்டம் என்று எதிலுமே பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து அவரது மனைவியை கண்டது இல்லை. ஆனால், குடியரசு தின விழாவில் முதன்முறையாக பன்னீர்செல்வம் தனது மனைவியுடன் பங்கேற்று  ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். 

குடியரசு தின விழாவில், பன்னீர் செல்வத்தின் அருகில் அவரது மனைவி விஜயலட்சுமியும் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தார். முதல்வரின் பேரக்குழந்தைகளும் கூட குடியரசு தின விழாவைக் காண வந்திருந்தனர். பொதுவாக குடியரசுத் தின விழா கவர்னர் விழாவாகத்தான் இருக்கும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, பொறுப்பு கவர்னர்தான் இருப்பதால், இந்த முறை குடியரசுதின விழாவில் தமிழக முதல்வரே கொடியேற்றி, முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். விருதுக்குரியவர்களுக்கும் விருது வழங்கி கவுரவித்தார். 

முதல்வர் பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கலை நிகழ்ச்சிகளை உற்சாகமாக கண்டு களித்தார் ஒவ்வொரு கலை நிகழ்ச்சி முடிந்த போதும் மாணவ- மாணவிகளை கைதட்டி அவர் உற்சாகப்படுத்தினார். பொது நிகழ்ச்சியில் மனைவியுடன் பங்கேற்ற முதல்வர் பன்னீர் செல்வத்தை  கண்டு அதிமுகவினர் வியப்படைந்தனர். 

மெரினாவில் நடந்த குடியரசுத் தின விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் பங்கேற்கவில்லை.

- எம்.குமரேசன்