Published:Updated:

குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆபத்தானதா? 'வாட்ஸ் அப்' விஷமமும், மருத்துவர்களின் விளக்கமும்!

குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆபத்தானதா? 'வாட்ஸ் அப்' விஷமமும், மருத்துவர்களின் விளக்கமும்!

குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆபத்தானதா? 'வாட்ஸ் அப்' விஷமமும், மருத்துவர்களின் விளக்கமும்!

குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆபத்தானதா? 'வாட்ஸ் அப்' விஷமமும், மருத்துவர்களின் விளக்கமும்!

குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆபத்தானதா? 'வாட்ஸ் அப்' விஷமமும், மருத்துவர்களின் விளக்கமும்!

Published:Updated:
குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆபத்தானதா? 'வாட்ஸ் அப்' விஷமமும், மருத்துவர்களின் விளக்கமும்!

'டுப்பூசி ஒன்று. பாதுகாப்பு இரண்டு' என்ற முழக்கத்துடன் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது சுகாதாரத் துறை. அனைத்து அரசு ஆரம்பப் பள்ளிகளிலும் பிப்ரவரி மாதம் மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா (Measles and Rubella Vaccine) என்ற தடுப்பூசி போடப்படுவதற்கும் எல்லா ஏற்பாடுகளும் தயார். இந்நிலையில் வாட்ஸ்அப் ஆடியோ ஒன்று வைரலாகப் பரவிவருகிறது... 'தமிழகப் பள்ளிகளில், `வெளிநாட்டில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு ஊசி’ எனச் சொல்லி நம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டாயம் போட்டுக்கொள்ள

வேண்டும் என அரசு வற்புறுத்துகிறது. இதைப் பற்றிய விவரம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆடியோவில் உள்ளது. அனைவரும் கவனித்துக் கேட்கவேண்டும். எல்லோருக்கும் ஷேர் செய்யுங்கள்...'இந்த வாசகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆடியோவில் பேசுபவர், 'பிப்ரவரி மாதம் 6 முதல் 28-ம் தேதி வரை 9 மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் மீசில்ஸ் (தட்டம்மை) மற்றும் ரூபெல்லா நோய்த் தடுப்பூசியை இலவசமாகப் போட திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த ஊசி, குழந்தைகளின் உடலில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும். இது குறித்து விரிவாக அடுத்தடுத்து ஆடியோக்களை வெளியிடுகிறேன்' என்று கூறி முடிக்கிறார்.

``இந்தத் திட்டம் பயனுள்ளதுதானா, இதனால் குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதா?’’ என பொது மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம். ``மீசில்ஸ் பிற அம்மை நோய்களைப்போலவே காய்ச்சல், உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுத்தும். இந்த நோய் எளிதில் உடலில் பரவி நிமோனியா, உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்ற அபாயகரமான பிரச்னைகளை உண்டாக்கும். இந்த நோயால் குழந்தைகள் இறக்கும் அபாயமும் அதிகம். ரூபெல்லா கர்ப்பிணிப் பெண்களுக்கு வந்தால், பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவி குறைபாடுகள் வரும் வாய்ப்பு அதிகம். மேலும் ரூபெல்லா, இந்தியாவில் அதிகக் கருக்கலைப்புகளை ஏற்படுத்துகிறது.  தடுப்பு மருந்துகள் வெளிநாடுகளில்

தயாரிக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்படுகிறன. இவை பல நாட்கள் கெடாமல் இருக்க, பாதரசத்தால் செய்யப்பட்டுள்ள தியோமெர்சால் (Thiomersol) என்னும் பதப்படுத்தி பயன்படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்துவதால் மரபணு மூலக்கூறுகள் மாற்றி அமைக்கப்படும். ஆட்டிசம் உள்ளிட்ட நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் சில வருடங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது. நமது உடலில் தன்னிச்சையாக இயங்கும் நோய் எதிர்ப்பு சக்தி, நமக்கெதிராகவே திரும்பும் அபாயமும் உள்ளது.

அமெரிக்காவில் 2004-ம் ஆண்டு தியோமெர்சால் ரசாயனத்தை தடுப்பு மருந்துகளில் பயன்படுத்த ஃபுட் அண்டு டிரக் அசோசியேஷன் (Food And Drug Association) தடை விதித்தது. 'தியோமெர்சால் ரசாயனத்தால் நரம்புக் குறைபாடு ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் போகலாம், இதுகுறித்து உறுதியாகக் கூற முடியாது' என தியோமெர்சாலை தடைசெய்யும் முன்னர் நடந்த கூட்டத்தில் அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் அறிவித்தனர். இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் 'சென்டர் ஃபார் டிசீஸ் கன்ட்ரோல்' அமைப்பின் முன்னாள் தலைவர் ஜூலி கெர்பெர்டிங் (Julie Gerberding) சிஎன்என் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், `தடுப்பு மருந்துகள், மருந்து தயாரிப்பாளர்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்குமே லாபம் தரக்கூடியதாக உள்ளன. இந்தத் தடுப்பு மருந்துகளால் ஆட்டிசம் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய தடுப்பு மருந்து கமிட்டி நிர்வாகிகள் வாய்திறக்க மறுக்கின்றனர். ஒருபக்கம் அரசு, தடுப்பு மருந்தின் அவசியத்தைப் பற்றி தொலைக்காட்சி விளம்பரங்கள் கொடுக்கிறது. அதே சமயத்தில், ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில், `தனியார் மருத்துவமனையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போட வேண்டாம்’ என இந்திய அரசே அறிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, போலியோ, மீசில்ஸ், மம்ஸ் (Mumps), ரூபெல்லா, தடுப்பு மருந்துகள் உண்மையாக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறதா, இவற்றால் ஏதாவது பயன் உள்ளதா எனக் கேட்டால் சந்தேகம்தான். இந்தியாவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலியோ, மீசில்ஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட பின்னரும், 80 சதவிகித மக்கள் நோய் பாதிப்பு உடையவர்களாகவே உள்ளனர். தடுப்பு மருந்துகளின் வீரியம் ஒவ்வொருவரது உடலிலும் மாறுபடும். தடுப்பு மருந்துகளை மட்டுமே நம்பி இருக்காமல், அந்தந்த வயதில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை குழந்தைகளுக்குத் தாய்மார்கள் அளிப்பதே எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள சிறந்த வழி.

தடுப்பூசியில் பாதரசம் கலப்பது குறித்து, டாக்டர் தெரசா பின்ஸ்டாக் (Dr Teresa Binstock) மேற்கொண்ட ஆய்வில், ஆட்டிசம் உட்பட 200 நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குழந்தைகளைத் தாக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து 1999-ம் ஆண்டு முதல் தடுப்பு மருந்துகளில் பாதரசம் கலப்பதைத் தடுக்க, அமெரிக்க அரசு வலியுறுத்தத் தொடங்கியது. 2004-ம் ஆண்டு தடுப்பு மருந்துகளில் பாதரசக் கலப்பு முற்றிலும் தடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், மிகமிகச் சிறிய அளவில் (0.05 மைக்ரோ கிராம்) பாதரசம் கலக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் தடுப்பு மருந்துகளில் பாதரசக் கலப்பு அளவு குறித்த ஆராய்ச்சி இன்று வரை நடைபெறவில்லை. ஆராய்ச்சிக்கு செலவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும்.  

1990-1997-ம் ஆண்டு வரை ஃபுட் அண்டு டிரக் அசோசியேஷன் தலைவராக இருந்த டேவிட் ஆரோன் கெஸ்லர், ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் 'அமெரிக்காவில் மூன்று வயது வரை குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பு மருந்துகளால், உடலில் என்னென்ன மாற்றங்கள் நடைபெறும் என தொடர் கண்காணிப்பில் அரசு ஈடுபட்டது. ஆனால், நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்ட பத்து சதவிகிதக் குழந்தைகளை மட்டுமே தொடர்ச்சியாகக் கண்காணிக்க முடிந்தது. பல வருடங்களாகத் தொடர்ந்து கண்காணிப்பது சிரமம். சுகாதாரமான குடிநீர், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், மாசு இல்லாத காற்று ஆகியவற்றின் மூலமாகவே நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க முடியும்' என்று கூறியிருக்கிறார்.

அதன்படி பார்த்தால், 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், அரசால் குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசியின் நாட்பட்ட விளைவுகளைக் கண்காணிப்பது மிகவும் கடினம். தடுப்பூசி போடப்பட்டு பல வருடங்கள் கழித்து நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வந்தால், அது தடுப்பூசி ரசாயனத்தால்தான் வந்தது என உறுதியாகக் கூற முடியாது. அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட 'தியோமெர்சால் ரசாயனம்' இந்தியாவில் ஏன் தடை செய்யப்படவில்லை என அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் பொதுமக்கள் இது போன்ற வாட்ஸ்அப் ஆடியோக்களால் பீதியடையாமல் இருப்பார்கள்’’ என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

இது தொடர்பாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவரான செந்தில்குமரனிடம் பேசினோம். "இந்தச் செய்தியில் துளியும் உண்மை இல்லை. வாட்ஸ்அப் மூலமாக ஒரு கருத்து திட்டமிட்டுப் பரப்பப்பட்டுவருகிறது. அந்தத் தகவலை யாரும் ஃபார்வர்டு செய்ய வேண்டாம். அது ஒரு தவறான தகவல். அந்த ஊசி பாதுகாப்பானது. அந்தத் தடுப்பு ஊசியின் மூலம் மீசில்ஸ் மற்றும் ரூபெல்லாவை நமது குழந்தைகளுக்கு வராமல் தடுக்கலாம். நான் இந்த ஊசியை கடந்த 12 வருடங்களாக குழந்தைகளுக்குப் போட்டுவருகிறேன். என்னிடம் இந்தத் தடுப்பு ஊசியைப் போட்டுக்கொண்ட குழந்தைகளின் பெற்றோர் யாரும் இது வரை பிரச்னை என வந்ததில்லை.

மீசில்ஸ் எனும் தட்டம்மை நோய் வேகமாகப் பரவி, கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் பல இடங்களில் குழந்தைகளின் உயிரிழந்ததை மறந்துவிடக் கூடாது. அதன் பின்னரே தமிழக அரசு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வலியுறுத்தியது. முதல் டோஸ், 10 மாதக் குழந்தைக்கு போடப்படுகிறது. இரண்டாவது டோஸ் ஒன்றரை வயது குழந்தைக்கு போட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர், தமிழகத்தின் எந்த இடத்திலும் மீசில்ஸ் இல்லை. கடந்த இரு வருடங்களாக நான் இந்த நோய் அறிகுறி இருப்பதாகவோ அப்படிப்பட்ட குழந்தைகளையோ பார்த்தது இல்லை. அதனால் இந்தத் தடுப்பு ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட தவறான வதந்தியை யாரும் பிறருக்குப் பகிரவும் வேண்டாம்’’ என்கிறார் செந்தில்வேலன்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்... ‘’ரூபெல்லாவுக்கு எதிரான தடுப்பு ஊசி இதுவரை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே போடப்பட்டு வந்தது. அதுதான் தற்போது இலவசமாக அரசு சார்பில் `எம்.ஆர்’ எனப் போடப்படுகிறது. அரசு மருத்துவர்கள், அரசு சுகாதார ஊழியர்கள் என்ற முறையில் நாங்கள் இந்தத் தடுப்பு ஊசி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவசமாக சென்று சேர வேண்டும் என்று இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறோம். ஆனால் எளிதில் தவறான கருத்தை வாட்ஸ்அப் மூலமாகப் பரப்பி மக்களை குழப்பம் அடையச் செய்துவிடுகிறார்கள்.

தற்போது இந்தியா முழுவதும் இந்த தடுப்பூசி இலவசமாக போடப்பட இருக்கிறது. மேலும், இது, தேசிய தடுப்பு ஊசி திட்டத்திலும் சேர்க்கப்பட இருக்கிறது. வீண் புரளிகளை நம்ப வேண்டாம் தடுப்பு ஊசிகள் கொடும் நோய்களுக்கு எதிராகச் செயல்படுபவை; பாதுகாப்பானவை. உங்கள் குழந்தைகளுக்கு பிப்ரவரி மாதம் மீசில்ஸ் - ரூபெல்லா நோய்க்கு எதிரான தடுப்பூசி கிடைத்துவிட்டதா என்பதை உறுதிசெய்யுங்கள்” என்கிறார்கள் அரசு அதிகாரிகள். வதந்தியை நம்புவதா... அரசு சொல்வதை நம்புவதா என்பது ஒருபுறம் இருக்கட்டும்... குழந்தைகளைக் காக்கும் தடுப்பூசிகள் விஷயத்தில்கூடவா இப்படியான கருத்துக்களும் எதிர்க்கருத்துக்களும் வர வேண்டும்?

இப்படி மருத்துவர்களிடையேகூட மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன எனும் சூழலில் மக்களுக்கு இது குறித்து ஏற்பட்டிருக்கும் அச்சத்தையும் குழப்பத்தையும் போக்க வேண்டியது அரசின் கடமை.


- ஆண்டனிராஜ், வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்