Published:Updated:

நள்ளிரவு வீடு புகுந்து மாணவர்களை கைது செய்ததா போலீஸ்...?

நள்ளிரவு வீடு புகுந்து மாணவர்களை கைது செய்ததா போலீஸ்...?
News
நள்ளிரவு வீடு புகுந்து மாணவர்களை கைது செய்ததா போலீஸ்...?

நள்ளிரவு வீடு புகுந்து மாணவர்களை கைது செய்ததா போலீஸ்...?

மூகக் காவலர்கள் என்று அழைக்கப்படும் போலீஸார், சமூக இழுக்குகளிலும் ஈடுபடுகின்றனர் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். மெரினா எழுச்சிக்கு ஆதரவாக நடந்த சாலை மறியலை வேடிக்கை பார்த்த அப்பாவி பள்ளிச் சிறுவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்து போலீஸ் அதிகாரிகள் தங்களது ஆத்திரத்தைத் தணித்துக் கொண்டுள்ளனர்.  

நடந்தது இதுதான்

வடபழனி நூறடி சாலையில் கடந்த 23-ம் தேதியன்று போலீஸாருக்கு எதிராக ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. அப்போது போலீஸாரின் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அந்த சமயத்தில் அந்த இடத்தில் இருந்த, அந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எம்.எம்.டி.ஏ பகுதியைச் சேர்ந்த பள்ளிகளில் படிக்கும் 6 சிறுவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்திருக்கின்றனர். இப்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விடிய, விடிய அடித்த போலீஸார்

(மாணவர்கள் என்பதால் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை)
கிண்டி ஐடிஐ-யில் படிக்கும் மாணவர்; "26-ம் தேதி இரவு நண்பன் அறையில் தங்கியிருந்தேன். இரவு 2 மணி இருக்கும் நாங்கள் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்த போலீஸார் எங்கள் இருவருடன், இன்னொருவரையும் அழைத்துக் கொண்டு போனார்கள். வடபழனி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர். எங்களை விடிய, விடிய போலீஸார் அடித்துத் துவைத்தனர். தடிமனான பிளாஸ்டிக் பைப்பால் கால்களிலும், கைவிரல்களிலும் அடித்துக் கொண்டே இருந்தனர். பேசவே கூசும் வார்த்தைகளையெல்லாம் உபயோகித்து திட்டினர்.  அடித்த பிறகு சாப்பாடு வாங்கிக் கொடுத்தனர். பைப்பால் அடித்ததால் விரல்களில் உள்காயம் ஏற்பட்டு வலித்தது. எனவே சாப்பிட முடியவில்லை. சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்குப் போய் வந்த நிலையில் மீண்டும் என் படிப்பைத் தொடரலாமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது" என்றார் வேதனையுடன்.

வேதனையோடு பள்ளிக்குச் செல்கிறேன்

மாநகராட்சிப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்; "23-ம் தேதி மதியம் நூறடி சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தோம். அப்போது போலீஸ்காரர்கள் அங்கிருந்தவர்களையெல்லாம் விரட்டிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தின் என் உடன் வந்த நண்பர், ஒரு கல்லை எடுத்து மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தினான். டேய் அப்படியெல்லாம் பண்ணாதே என்று அவனை இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டோம். இதுதான் நடந்தது. 26-ம் தேதி மதியம் எங்கள் வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்கள் என்னை அழைத்துக் கொண்டு போனார்கள். 'நான் எந்தத் தப்பும் செய்யல. என் கூட வந்தவன்தான் கல்லை விட்டு எறிஞ்சான் என்று சொன்னேன். சரி, ஸ்டேஷன் வந்து இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லு, 10 நிமிடத்தில் விட்டு விடுகின்றோம் என்று சொன்னார்கள். ஸ்டேஷனில் உட்கார வைத்து பிளாஸ்டிக் பைப்பால் என் தொடையில் அடித்தனர்.  தொடையில் பயங்கரமான வலி. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் பள்ளிக்குப் போவதா, நீதிமன்றத்துக்குப் போவதா என்றே தெரியவில்லை. நான் படிக்கும் பள்ளியில்தான் என் தம்பியும் படிக்கின்றான். என் தம்பியிடம் அவனுடைய நண்பர்கள், 'என்னடா உன் அண்ணன் ஜெயிலுக்குப் போய்ட்டு வந்தானாமே' என்று கேட்டிருக்கின்றனர். அந்த வேதனையோடுதான், இன்று(பிப்ரவரி 1) பள்ளிக்கூடம் போய்வந்தேன்" என்றார்.

டெஸ்ட் எழுத முடியவில்லை...

அரசு மேல்நிலைப் பள்ளியில்  12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்; "வீட்டில் 26-ம் தேதி இரவு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போது மஃப்டியில் வந்த போலீஸார் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு, என் நண்பனை வீட்டுக்குள் அனுப்பி என்னை அழைத்துச் சென்றனர். சூளைமேடு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து என்னிடம் விசாரித்தனர். 'நான் நூறடி சாலை பக்கமே போகவில்லை. எனக்கும் வன்முறைக்கும் தொடர்பில்லை' என்று சொன்னேன். 'பொய் சொல்லாதே எங்க கிட்ட ஆதாரம் இருக்கு' என்று சொல்லிக் கொண்டே பிளாஸ்டிக் பைப்பால் அடித்தனர். போலீஸ்காரர்கள் அடித்த வலியை விட 26-ம் தேதி பள்ளியில் நடந்த டெஸ்ட் எழுத முடியவில்லையே என்ற வலிதான் அதிகமாக இருந்தது" என்றார்.

தீவிரவாதிகளாகச் சித்தரிப்பு

சிறுவர்களை ஜாமீனில் எடுத்திருக்கும் வழக்கறிஞர் காருண்யா தேவியிடம் பேசினோம். "சிறுவர்கள் என்றும் பாராமல் அவர்களை கொடூர குற்றம் செய்த தீவிரவாதிகளைப் போல இரவு 1 மணிக்கு பிடித்துச் சென்றனர். கொலைமுயற்சி வழக்கு, ஆயுதங்களைக் கொண்டு சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்லவில்லை. குழந்தைகளை கொடுங்குற்றவாளிகளாக சித்தரிப்பது அவர்களை மன ரீதியாக துன்பத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு போலீஸார் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்றார்.

போலீஸார் மீது நடவடிக்கை தேவை

குழந்தைகள் உரிமைக்காகப் போராடி வரும் தேவநேயனிடம் பேசினோம். "மாணவர்களை கைது செய்த உடன், அவர்களை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்குத்தான் போலீஸாருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், மாணவர்களை அடித்துத் துன்புறுத்தி இரண்டு நாட்கள் கழித்துத்தான் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கின்றனர். சென்னையில் மட்டும் இப்படி நடக்கவில்லை. தமிழகம் முழுவதும் இதே போல 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது போலீஸார் பொய் வழக்குகள் போட்டிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. மாணவர்களை அடித்த காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும். மாணவர்கள் தேசத்துக்கு எதிராக கொடுங்குற்றம் செய்து விடவில்லை.  அவர்களை வாழ்க்கை முழுவதும் குற்றவாளிகளாக பார்க்கும் நிலையை, சமூகவிரோதிகளாகப் பார்க்கும் நிலையை போலீஸார் ஏற்படுத்தி இருக்கின்றனர். உயர்கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. பள்ளி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் திரும்பப் பெறவேண்டும். அவர்களுக்கு  அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்படவேண்டும். போலீஸாரின் ஊதியத்தில் இருந்து மாணவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்" என்றார்.

போலீஸாரின் விதி மீறல்கள்

மாணவர்களை கைது செய்தது குறித்து அவர்கள் பெற்றோரிடம் முறைப்படி தகவல் சொல்லவில்லை. முதல் நாள் விசாரணைக்காக அழைத்துச் சென்று உடனே சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் 24 மணி நேரம் கழித்து மறுநாள்தான் ஆஜர் படுத்தி இருக்கின்றனர். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மாணவர்களை போலீஸார் துன்புறுத்தி இருக்கின்றனர். வெளிக்காயம் தெரியக் கூடாது என்பதற்காக உள்காயம் ஏற்படும் வகையில் பிளாஸ்டிக் பைப்பால் அடித்துத் துவைத்திருக்கின்றனர்.

-கே.பாலசுப்பிரமணி