Published:Updated:

பஷீர் கைது... சசிகலாவின் க்ரீன் சிக்னல்... அதிர்ச்சியில் இளவரசி முகாம்!

பஷீர் கைது... சசிகலாவின் க்ரீன் சிக்னல்... அதிர்ச்சியில் இளவரசி முகாம்!
பஷீர் கைது... சசிகலாவின் க்ரீன் சிக்னல்... அதிர்ச்சியில் இளவரசி முகாம்!

பஷீர் கைது... சசிகலாவின் க்ரீன் சிக்னல்... அதிர்ச்சியில் இளவரசி முகாம்!


.தி.மு.க-வில் யார் ஊழல் புகாரில் சிக்கினாலும், மாற்றுக் கட்சியினருக்கு விசுவாசமாக இருந்தார் என்று தெரிந்தாலும் அவர்களை உடனடியாகக் கட்சியில் இருந்து நீக்கி அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அதோடு, ’நீக்கப்பட்ட நபர்களுடன் ஒட்டும் வைத்துக்கொள்ளக் கூடாது உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று அ.தி.மு.க-வினருக்கு அவர் உத்தரவு போடுவார். நீக்க நடவடிக்கைகளில் சிக்கியவர்கள் மீண்டும் அ.தி.மு.க-வில் நுழைவது என்பது கனவிலும் நடக்காது.

ஜெயலலிதாவின் ராணுவக் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைக்கு, இப்போதைய அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவும் அவரின் உறவுகளும் இரண்டு முறை ஆளாகியிருக்கிறார்கள் என்பதை அரசியலில் யாரும் மறந்து இருக்கமாட்டார்கள்.

அதே ஜெயலலிதாவின் அதிரடி அஸ்திரத்தை பொதுச் செயலாளர் ஆன சூட்டோடு சசிகலா வீசியுள்ளது அ.தி.மு.க-வில், குறிப்பாக இளவரசி கோஷ்டியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 13-ம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா,வெளியிட்ட அறிவிப்பில்,’கழகத்தின் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும்,கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஜெ.எம்.பஷீர்  கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தீவிரமாக  நடந்த நேரத்தில் பஷீர் நீக்கம் அப்படியே அமுங்கிப்போனது. ஆனால் இந்த நீக்கத்தின் பின்னே இருக்கும் காரணங்கள் இப்போதுதான் மெதுவாக வெளியேத் தெரிய ஆரம்பித்துள்ளன. நீக்கப்பட்ட பஷீர் சினிமாவில் விஜய் கார்த்திக் என்ற பெயரில் அறிமுகம் ஆகியுள்ளவர். அ.தி.மு.க-வின் தென் சென்னை மாவட்டத்தில் கட்சியினர் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமானவர்.

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கான்வாய் காரை நிறுத்தி பூச்செண்டு கொடுப்பது,தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை எதிர்த்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுப்பது என்று பரபரப்பாக இயங்கிவர். கார்டன் அதிகார மையம் எனக்கு மிக நெருக்கம் என்று கூறி, அ.தி.மு.க சீனியர்களுக்கே கிலியை உண்டாக்கி வைத்திருந்தார். இந்த நிலையில்தான் அவர் கார் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியிலேயே கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்கிறார்கள் போயஸ் கார்டன் உறவுகள்.

 துப்பாக்கி முனையில் துருக்கி இளைஞருக்கு கொலை மிரட்டல்!

பொங்கலுக்கு முந்தைய நாளில் பஷீர் கைது செய்யப்பட்டார். அது அ.தி.மு.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைதுக்கான காரணம் துப்பாக்கி முனையில் துருக்கி இளைஞரை மிரட்டி சொகுசு கார் மற்றும் பணம், நகைகள் பறித்தது. இதனை உடனடியாக சசிகலா கவனத்துக்குக் கொண்டு சென்றனர் விருகம்பாக்கம் அ.தி.மு.க-வினர். போலீஸாரும் இதை உறுதிப்படுத்தினர். இதன் பின்னர்தான் பஷீர் நீக்கம் நடந்துள்ளது. அவருடன் சவுத்ரி, பாபு என்ற இருவரும் கைதாகியுள்ளனர்.

பஷீர் குறித்து போயஸ் கார்டன் வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள் கூறுகையில், "விஜய் கார்ஸ் என்ற பெயரில் சென்னையில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த பஷீருக்கு, காவல் துறையில் உயர் அதிகாரி ஒருவரின் ஆதரவு வலுவாக இருந்ததால், பல பேரிடம் கோடிகளில் மோசடி செய்துள்ளார். பஷீரின் மோசடிகள் குறித்து போயஸ் கார்டனில் பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை சசிகலா கவனத்துக்குக் கொண்டு செல்லாமல் இருக்க இளவரசியின் மகன் விவேக் தரப்பினர் உதவியுள்ளார்கள். இதனால் பஷீர் ஆட்டம் இன்னும் அதிகமானது.

இந்த நிலையில்தான் சென்னையில் மருத்துவப்படிப்பு படிக்கும் துருக்கி இளைஞரிடம் விலை உயர்ந்த வெளிநாட்டுக் காரை 7 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி 50 ஆயிரத்துக்கு அபகரித்துள்ளார். அதோடு அந்த துருக்கி நாட்டு இளைஞரைத் துப்பாக்கி முனையில் கொலை செய்வதாக மிரட்டி, பணம், நகைகளையும் பறித்துள்ளார். துருக்கி நாட்டு தூதரகம் மூலம் புகார் வந்ததால் சென்னை காவல்துறை பஷீரை கைது செய்யப் போனது. அதற்கு முன்பு, போயஸ் கார்டனுக்கு தகவல் சொல்லி சசிகலா பச்சைக்கொடி காட்டியபிறகே கைது செய்தனர். இன்னும் இது போல, ’நான் கார்டன் செல்லப்பிள்ளை’ என்று கூறிக்கொண்டு நிறையபேர் ஆங்காங்கே முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களைப் பட்டியல் எடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி எடுத்தால் ஏராளமான அ.தி.மு.க-வினர் மகிழ்ச்சியடைவார்கள்" என்றனர் எதிர்பார்ப்போடு.

- சி. தேவராஜன் 

அடுத்த கட்டுரைக்கு