Published:Updated:

8 நிதி நிறுவனங்களின் மோசடி விவரங்கள்... அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - ஐ.ஜி ஆசியம்மாள் அதிரடி!

ஐ.ஜி ஆசியம்மாள்

காவல்துறையிடம் ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் ஆர்.கே.சுரேஷுக்கு எதிராகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு தரப்பில் லுக் - அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:

8 நிதி நிறுவனங்களின் மோசடி விவரங்கள்... அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - ஐ.ஜி ஆசியம்மாள் அதிரடி!

காவல்துறையிடம் ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் ஆர்.கே.சுரேஷுக்கு எதிராகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு தரப்பில் லுக் - அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.ஜி ஆசியம்மாள்

ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ், அம்ரோ கிங்ஸ், ஏ.ஆர்.பி ஜுவல்லர்ஸ், சி.பி.ஆர்.எஸ், ஐ.எஃப்.எஸ், ராஹத் டிரான்ஸ்போர்ட், எல்ஃபின் ஆகிய எட்டு நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் உள்ள 2.91 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து, ரூ.14,168 கோடி மோசடி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நிதி மோசடி செய்த முக்கிய நிறுவனங்களைக் குறித்த தகவல்கள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 மோசடி..!
மோசடி..!

அதில், அம்ரோ கிங்ஸ் 3,000 முதலீட்டாளர்களிடமிருந்து 143 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. 

ஏ.ஆர்.பி ஜூவல்லர்ஸ் அண்ட் ஏ.ஆர்.பி டிரஸ்டட் ப்ராஃபிட் கம்பெனி முதலீட்டாளர்கள் 427 பேரிடமிருந்து, 6 கோடியே 30 லட்ச ரூபாயை மோசடி செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் மொத்த குற்றவாளிகள் 5 பேர். குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சி. பி.ஆர்.எஸ் திருவண்ணாமலையில் இருந்து பதிவு செய்யப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் 15 குற்றவாளிகளில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட ஐ.எப்.எஸ் வழக்கில், மேலும் நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 50 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

ஆருத்ரா 1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் கடந்த ஒரு மாதத்தில் மாலதி, மைக்கேல் ராஜ், ஹரிஷ், ராஜ செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். ஆருத்ரா வழக்கில் கூடிய விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும். 

ராஹத் டிரான்ஸ்போர்ட் திருச்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு. இதில் மொத்த முதலீட்டாளர்கள் 6,518 பேர்; மோசடி செய்யப்பட்ட தொகை 412 கோடி. 11 குற்றவாளிகளில் இதுவரை 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 54 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டு அரசுடைமையாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹிஜாவு நிறுவனம் 89,000 முதலீட்டாளர்களிடம் 4,400 கோடி வரை மோசடி செய்துள்ளது. வழக்கில்,10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

எல்ஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை 11,000. இவர்களிடமிருந்து 962 கோடி  மோசடி செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆருத்ரா கோல்டு நிறுவனம்
ஆருத்ரா கோல்டு நிறுவனம்

இந்நிலையில், பா.ஜ.க நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷின் விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்தவர், ஆர்.கே.சுரேஷுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

ஆனால், இந்த சம்மனைத் தள்ளுபடி செய்யக் கோரி ஆர்.கே.சுரேஷ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். காவல் துறையிடம் ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் ஆர்.கே.சுரேஷுக்கு எதிராகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு தரப்பில் லுக் - அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார். 

மக்களை ஏமாற்றும் மோசடி நிறுவனங்கள் தொடர்ந்து தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் மக்கள் சேர்த்து வைத்த பணத்தை இழக்கக் கூடாது. எந்த நிறுவனத்தில் பணம் போடுவதாக இருந்தாலும் அந்த நிறுவனம் என்ன பிசினஸ் செய்கிறது, அவர்கள் லாபம் தர வாய்ப்பு இருக்கிறதா, பணத்தைத் தரவில்லை என்றால் எங்கே புகார் செய்வது, பணம் திரும்பக் கிடைக்குமா என்பது குறித்து எல்லாம் நன்கு விசாரித்தே முடிவு செய்ய வேண்டும்!