Election bannerElection banner
Published:Updated:

``பொது வாழ்க்கைக்கு வர ஆசைப்பட்டதில்லை!'' - ஜெயலலிதாவிடம் சசிகலா `பொய் சொன்ன' தினம் இன்று!

சசிகலா
சசிகலா

`அரசியல் ஆசை இல்லை... கட்சிப் பதவிக்கு வர விரும்பவில்லை... எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை... அமைச்சர் பதவி வேண்டாம்’ என்றெல்லாம் ஜெயலலிதாவிடம் சசிகலா பொய் சொன்ன தினம் இன்று. எதற்காக சசிகலா இந்தப் பொய்யைச் சொன்னார்?

``கனவிலும் அக்காவுக்கு நான் துரோகம் நினைத்ததில்லை''
``என் உறவினர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம்''
``உறவினர்களுடன் எனக்கு ஒட்டுமில்லை; உறவுமில்லை''
``பொது வாழ்வில் பங்கு பெறவேண்டும் என்ற ஆசை இல்லை''

- இவையெல்லாம் சசிகலா உதிர்த்த வார்த்தைகள். இந்தப் பொன் முத்துகள் உதிர்ந்த தினம் இன்று!

ஜெயலலிதா, சசிகலா
ஜெயலலிதா, சசிகலா

``அக்கா... கோட்டைக்குக் கிளம்பிட்டிங்களா. மதிய சாப்பாட்டுக்கு என்ன வேண்டும்?'' என ஜெயலலிதாவிடம் அனுதினமும் சசிகலா கேட்டுக்கொண்டிருந்த காலம் அது!

1988-ம் ஆண்டிலிருந்து ஜெயலலிதாவின் கட்சியையும் ஆட்சியையும் சசிகலா குடும்பம் பங்கு போட்டுக்கொண்டிருந்தபோது, இடையில் ஒரு சறுக்கல். ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்ற சதித்திட்டம் தீட்டப்பட்டதால், 2011 டிசம்பர் 19-ம் தேதி சசிகலா உட்பட அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து கட்டம் கட்டினார் ஜெயலலிதா. இதில் சசிகலா போயஸ் கார்டனிலிருந்து துரத்தப்பட்டார். நடராசன், திவாகரன், தினகரன், பாஸ்கரன், சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், ராமச்சந்திரன், ராவணன், மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், மகாதேவன், தங்கமணி, கலியப்பெருமாள், பழனிவேலு, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, சந்தானலட்சுமி, சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா ஆகியோரை அ.தி.மு.க-விலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.

அடுத்த மூன்று மாதத்தில், அதாவது 2012 மார்ச் 31-ம் தேதி சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார். அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அதாவது மார்ச் 28-ம் தேதி சசிகலா வெளியிட்ட அறிக்கை, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. `அரசியல் ஆசை இல்லை... கட்சிப் பதவிக்கு வர விரும்பவில்லை... எம்.பி, எம்.எல்.ஏ-வாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை... அமைச்சர் பதவி வேண்டாம்’ என்றெல்லாம் அந்த அறிக்கையில் உருகியிருந்தார் சசிகலா.

சசிகலா குடும்பத்தினர்
சசிகலா குடும்பத்தினர்
Hasif Khan
`ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் யார்?!' - சசிகலா விளக்கத்தால் கொந்தளித்த ஜெ.தீபா

அவை அத்தனையும் பச்சைப் பொய்கள் என்பது, அடுத்த ஐந்தாவது ஆண்டில் நிரூபணமானது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியைக் கைப்பற்றினார். ஆட்சி நாற்காலியில் அமரவும் முற்பட்டார். 2012-ம் ஆண்டு சொன்ன ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என்பது சசிகலா நடத்திய சதிராட்டத்தில் வெட்ட வெளிச்சமாகின.

8 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (மார்ச் 28) சசிகலா வெளியிடப்பட்ட அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருந்தது?

``கடந்த மூன்று மாத காலமாக (2012 ஜனவரி, பிப்ரவரி, மார்ச்), பலதரப்பட்ட பத்திரிகைகளில் என்னைப் பற்றிய பலவிதமான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், இந்த அறிக்கையை வெளியிடவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 1984-ம் ஆண்டில் முதன்முறையாக அக்காவை நான் சந்தித்தேன். அதன் பின்னர், எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. அவரும் என்னைத் தனது தங்கையாக ஏற்றுக்கொண்டார். 1988-ம் ஆண்டிலிருந்து அக்காவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே அவருடன் வசித்து வந்தேன்.

சசிகலா அறிக்கை
சசிகலா அறிக்கை

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வந்த அக்காவின் பணிச்சுமையை ஓரளவுக்காவது குறைக்கும் வகையில், அவருக்கு உதவியாக இருந்து, என்னால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்றுதான் விரும்பினேனே தவிர, வேறு எந்தவிதமான எண்ணங்களும் எனக்கில்லை. போயஸ் கார்டன் இல்லத்தில் அக்காவுடன் இருந்த வரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவுக்குதான் தெரிந்ததே தவிர, முழு விவரம் தெரியவில்லை. 24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த நான், கடந்த டிசம்பர் மாதம் (2011 டிசம்பர்) அவரைப் பிரிந்து வீட்டை விட்டு வெளியே வந்து, வேறு இடத்தில் வசிக்க வேண்டிய சூழ்நிலை உருவான பின்னர்தான், நடந்த உண்மைகள் முழுமையாக எனக்குத் தெரிய வந்தன.

கடந்த டிசம்பர் மாதம் (2011 டிசம்பர்), அக்கா மேற்கொண்ட சில ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் அதற்கு என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியவந்தது. என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர். அதனால், கட்சிக்குப் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன. கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது, நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன்; மிகுந்த வேதனையடைந்தேன்.

சசிகலா அறிக்கை
சசிகலா அறிக்கை

இவை எல்லாம் எனக்கே தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை. அக்காவைச் சந்தித்த நாள் முதல், அவர் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு விநாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் அக்காவுக்கு நான் துரோகம் நினைத்ததில்லை. என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கு வேண்டாதவர்கள்தான். இப்படி அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அவருக்கு துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன். அக்காவுக்குத் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை.

என்னைப் பொறுத்தவரை அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்கு துளியும் ஆசையில்லை. பொது வாழ்வில் பங்கு பெறவேண்டும் என்ற விருப்பமும் இல்லை. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கெனவே அக்காவுக்கு அர்ப்பணித்து விட்டேன். இனியும் எனக்கென வாழாமல், அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்குப் பணிசெய்து, அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்'

சசிகலா
சசிகலா

இதுதான் சசிகலா வெளியிட்ட அறிக்கையில் உள்ள வாசகங்கள். இதை ஏற்று, சசிகலாவை மட்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. `நடராசன், திவாகரன், தினகரன், பாஸ்கரன், சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், ராமச்சந்திரன், ராவணன், மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், மகாதேவன், தங்கமணி, கலியபெருமாள், பழனிவேலு, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, சந்தானலட்சுமி, சுந்தரவதனம், வைஜெயந்திமாலா ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை’ எனவும் ஜெயலலிதா விளக்கமளித்தார்.

``எனக்கு அரசியல் ஆசை கிடையாது'' எனச் சொன்ன சசிகலாதான், முதல்வர் நாற்காலிக்குக் குறிவைத்து, கூவத்தூர் கூத்துகளை நடத்தினார். ``அக்காவுக்குத் துரோகம் செய்தவர்களுடன் தொடர்புகளைத் துண்டித்துவிட்டேன். அவர்களுடன் எனக்கு எவ்வித உறவுமில்லை’' எனச் சொன்ன சசிகலாதான், அவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்தார். டி.டி.வி. தினகரனும் வெங்கடேஷும் மீண்டும் கட்சிக்குள் வந்தார்கள். தினகரனை துணைப் பொதுச் செயலாளர் ஆக்கினார் சசிகலா.

வித்தியாசாகர் ராவை சந்தித்த போது
வித்தியாசாகர் ராவை சந்தித்த போது

``கனவிலும் அக்காவுக்கு நான் துரோகம் நினைத்ததில்லை'' எனச் சொல்லிவிட்டு, அவர் இறந்த பிறகு நிஜத்தில் சசிகலா நடத்தியதற்குப் பெயர் என்ன? ``அக்காவுக்குத் துரோகம் புரிந்தவர்களுடன் தொடர்புகளைத் துண்டித்துவிட்டேன்'' என்றார். ராஜாஜி ஹாலில் அந்த அக்காவின் உடலைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் அந்த `துரோகிகள்'தானே? அந்த அக்கா இன்றைக்கு உயிருடன் இருந்திருந்தால் சசிகலா சிறைக்குள் போயிருப்பாரா?

அரசியல் ஆசை இல்லாத சசிகலா எதற்கு முதல்வர் நாற்காலியில் அமர துடித்தார்? அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியைக் கொடுத்த போது, ``பொதுவாழ்வில் பங்கு பெற எனக்கு விருப்பமில்லை'' என ஏன் சொல்லவில்லை? ஜெயலலிதா இருந்த போது நிழலாய் அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்த சசிகலாவுக்கு அதிகாரத்தில் அமர வேண்டும் என்கிற ஆசை அடிமனதில் இருந்திருக்கிறது. அதனால்தான் ``அக்காவுக்கு வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன்'' எனச் சொல்லிவிட்டு அதனை மீறி ஜெயலலிதா அவர் அமர்ந்த நாற்காலியிலேயே அமரத் துடித்திருக்கிறார் சசிகலா.

சசிகலா
சசிகலா

பரப்பன அக்ரஹாரா சிறையில் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கும் சசிகலாவுக்கு இன்றை தினம் அவ்வளவு எளிதில் மறந்திருக்காது. இப்படி நிறைய கேள்விகளைக் கேட்டுப் பார்த்து விடை தேட சிறையில் நிறைய நேரமும் வாய்ப்பும் சசிகலாவுக்கு இருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு