Published:Updated:

பரபரப்பான அரசியல் களம்! என்ன செய்யப்போகிறார் ஆளுநர்? #OPSvsSasikala

பரபரப்பான அரசியல் களம்! என்ன செய்யப்போகிறார் ஆளுநர்? #OPSvsSasikala
News
பரபரப்பான அரசியல் களம்! என்ன செய்யப்போகிறார் ஆளுநர்? #OPSvsSasikala

பரபரப்பான அரசியல் களம்! என்ன செய்யப்போகிறார் ஆளுநர்? #OPSvsSasikala

மிழகத்தில் அரசியல் நிலைமை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.ஆளுநர் சென்னை வந்த பிறகே அது முழு அளவில் தெளிவடையும். முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மெரினாவில் 40 நிமிட நேரம், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், நேற்றிரவு தனது மௌனத்தைக் கலைத்து விட்டார். சசிகலா குடும்பத்தினரால் தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாகவும், தனது மனசாட்சி உந்துதல் காரணமாக அ.தி.மு.க தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தான் சொல்ல விரும்பியதை சொன்னதாகவும் அளித்த பேட்டி, தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையில் அ.தி.மு.க சட்டமன்றக்கட்சி தலைவராக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார் ஓ.பி.எஸ். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், தனது மனச்சாட்சிப்படி உண்மைகளைத் தெரிவிப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தனது பேட்டியில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனிடையே, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமைக்கழகத்தில் நடைபெற்றது. அதில் சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலாவை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் 3 எம்.எல்.ஏக்கள் தவிர, ஏனைய 130 சட்டமன்ற உறுப்பினர்களும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தற்போது மும்பையில் உள்ளார். அங்கிருந்தபடியே சட்ட ஆலோசகர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று இரவோ, ஓரிரு நாட்களிலோ சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆளுநரின் ரோல் என்ன?

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், அ.தி.மு.க-வின் 134 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்துக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையில் முதல்வராக ஓ.பி.எஸ்-க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர். இப்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூடி சசிகலாவை சட்டமன்றக் குழு தலைவராகத் தேர்வு செய்திருக்கின்றனர். எனவே சசிகலாவும் ஆளுநரை சென்னையில் சந்தித்து தன்னை ஆட்சியமைக்க உரிமைகோருவார் என்று தெரிகிறது. எம்.எல்.ஏ-க்களின் தேர்வு கடிதத்துடன் ஆளுநரை சசிகலா சந்திப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை திரும்பப்பெறுவதாகக் கோருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. சசிகலாவை முதல்வர் பதவியேற்க வருமாறு அழைப்பு விடுத்தால், ஓ.பி.எஸ்-ன் முதல்வர் பதவி முடிந்து விடும். அப்படி இல்லாதபட்சத்தில், 'உங்களுக்குள் உள்ள பிரச்னையைத் தீர்த்துவிட்டு வாருங்கள். அதுவரை சட்டப்பேரவையை சஸ்பெண்ட் செய்கிறேன்' என ஆளுநர் தெரிவிப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. அல்லது, சசிகலா குறிப்பிட்ட காலத்திற்குள் தனது செல்வாக்கை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவு பிறப்பிக்கலாம். மேலும் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வருமாறு கோருவதற்கும் வாய்ப்பு உள்ளது. தவிர, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இரு பிரிவாக உடையும்நிலையில், யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அடுத்த பெரிய கட்சியான தி.மு.க-வை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுவதற்கான சாத்தியங்களும் உண்டு. அல்லது, குடியரசுத் தலைவர் ஆட்சியை தற்காலிகமாக அமல்படுத்தவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. எது எப்படி இருப்பினும் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பிய பின்னரே தமிழக அரசியல் களம் மேலும் பரபரப்புடன் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே, தமிழகத்தின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பதற்கு விடை கிடைக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆளுநர் என்ன முடிவெடுப்பார் என்று வழக்கறிஞர் நளினி சிதம்பரத்திடம் பேசினோம். "அரசியல் ஸ்திரமற்ற சூழலில் ஆளுநர் முடிவுதான் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், எந்தக்கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுகின்றதோ, அந்தக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். மற்றபடி இதுபோன்ற அசாதாரண சூழலில், ஆளுநர் முடிவில் முக்கிய ரோல் இருக்கிறது. இப்போது ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுத்திருக்கிறார். இங்கு நடக்கும் அரசியல் முன்னேற்றங்களைப் பொறுத்தே ஆளுநர் தனது முடிவை அறிவிப்பார். முதல்வர் ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகு அதனை ஏற்றுக்கொள்ளா விட்டால் மட்டுமே, அந்தக் கடிதத்தை ஆளுநர் ரத்து செய்ய முடியும். ஓ.பி.எஸ்-ஐ பொறுத்தவரை அவரது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும், ஓ.பி.எஸ் அளித்த பேட்டியில், தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியதாகச் சொல்லி இருக்கிறார். இதையும் வித்யாசாகர் ராவ் கவனத்தில் கொள்வார். ஒருவரை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தால் அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆளுநர் சொல்வதற்கும் சட்டத்தில் இடம் இருக்கிறது. கட்டாயப்படுத்தி வாங்கி இருப்பதால் அந்தக் கடிதம் செல்லாது என்று சொல்லி ஓ.பி.எஸ் கடிதத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கின்றேன் என்று ஆளுநர் சொல்லலாம். ஆளுநர் பரந்த வகையில் முடிவுகள் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பன்னீர் ராஜினாமா கடிதம் குறித்து முடிவு எடுத்த பிறகுதான், ஆளுநர் அடுத்தக்கட்ட முடிவுகளை நோக்கி நகர்வார். முதலில் பன்னீர் செல்வத்தை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி அழைப்பு விடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதன் பின்னர்தான் இரண்டாவதாக சசிகலாவுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்புக் கொடுப்பார்" என்றார் நளினி சிதம்பரம்.

-கே.பாலசுப்பிரமணி, சி.வெங்கட சேது