Published:Updated:

8வது நாளாக காபந்து அமைச்சரவை..! இன்னும் எத்தனை நாள் மிஸ்டர் கவர்னர்?!

8வது நாளாக  காபந்து அமைச்சரவை..! இன்னும் எத்தனை நாள் மிஸ்டர் கவர்னர்?!
8வது நாளாக காபந்து அமைச்சரவை..! இன்னும் எத்தனை நாள் மிஸ்டர் கவர்னர்?!

மிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் யார் முதல்வர் எனும் அதிகார மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து 9 நாட்கள் கடந்து விட்ட நிலையில், புதிய அமைச்சரவை நியமிப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் யார் முதல்வர் என்பதில் சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் முகாம்களில் ஆள் பிடிக்கும் வேலைகள், முகாம் மாறுவதை தடுக்க சிறை வைப்பு நிகழ்வுகளும் தொடர்ந்து வருகிறது.

கடந்த 5ம் தேதி அ.தி.மு.க. தனது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி, கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்தது. அன்றைய தினமே முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.  ‘என் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, டிசம்பர் 6-ம் தேதி என்னால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையை விடுவிக்க வேண்டும்’ என ஆளுநருக்கு கடிதம் எழுதினார் ஓ.பன்னீர்செல்வம்.  ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு அமையும் வரை பொறுப்பு முதல்வராக செயல்படுமாறு ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார்.

தொடர்ந்து தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாகவும், தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என சசிகலா கோரிக்கை விடுத்தார். அப்போது தமிழகத்தில் இருந்த ஆளுநர் தனது பணிகளை ரத்து செய்து விட்டு டெல்லி புறப்பட்டார். இதனால் பதவியேற்பு தள்ளிப்போனது.

இந்நிலையில், 7ம் தேதி இரவு ஜெயலலிதா நினைவிடம் சென்ற பன்னீர்செல்வம், தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக சசிகலா மீது புகார் தெரிவித்தார். அதுவரை சசிகலாவை ஏற்றுக்கொண்டதாக பேசிய ஓ.பன்னீர்செல்வம் தான் மிரட்டப்பட்டதாக சொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மக்கள் விரும்பினால் முதல்வராக தொடருவேன் என்றும் அவர் சொல்ல பன்னீர்செல்வத்துக்கு 5 எம்.எல்.ஏ.க்களும், 10 எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையே முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவும் ஆளுநரை சந்தித்தனர். அப்போது பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநரிடம் கூறிய சசிகலா, ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் இன்று வரை ஆட்சியமைக்க அழைக்கவில்லை. அதற்கு காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

9 நாட்கள் ஆகியும் தற்போது வரை, எந்த ஒரு தரப்பினரையும் ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநர், இதில் தன்னுடைய நிலை என்ன என்பதையும் விளக்கவில்லை. தமிழகத்தில் நிலவும் இந்த அசாதாரண சூழல் குறித்து மத்திய அரசுக்கோ, குடியரசுத்தலைவருக்கோ அறிக்கையையும் அவர் அனுப்பவில்லை.

ஆளுநர் ஒரு முடிவு எடுத்து அறிவிக்கும் வரை, தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் காபந்து அமைச்சரவை தான் செயல்படும். காபந்து அமைச்சரவையை பொறுத்தவரை புதிய முடிவுகளை எடுக்கவோ, அறிவிப்புகளை வெளியிடவோ உரிமை கிடையாது.  அமைச்சர்கள் தங்கள் வாகனங்களில் சென்று வரலாமே தவிர... அலுவல் சார்ந்த எந்த கோப்புகளிலும் கையெழுத்திட முடியாது. புதிய திட்டங்களை செயலாக்க முடியாது.

வரலாறு காணாத வறட்சியை நோக்கியுள்ளது தமிழகம். விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்னையாக வெடித்துள்ளது. இந்த சூழலில் அரசு நிர்வாகப்பணிகள் முடங்கிப்போயுள்ளது மக்களை வெகுவாக பாதிக்கும். நிதியாண்டின் இறுதியில் நாம் இருக்கிறோம். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில், தவணை தொகை பிப்ரவரி மாதத்தில் தான் ஒதுக்கப்பட வேண்டும். மறுபுறம் ஏராளமான பிரச்னைகள் மக்களை சூழ்ந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக ஆலோசிப்பதும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதும் மிக முக்கியம். ஆனால் இப்போது நடக்கும் காபந்து அரசால் இதை செய்யவே முடியாது. தமிழகத்தில் நிச்சயமற்றத் தன்மை தொடருகிறது.

பதவிக்காக ஆளுங்கட்சியில் அடித்துக்கொள்பவர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்களும் மக்கள் பிரச்னைகளை பற்றி துளியும் கவலைப்படுவதாய் தெரியவில்லை.  'இத்தனை  எதிர்ப்புக்கு மத்தியில் எதற்காக முதல்வராக துடிக்கிறார் சசிகலா?, இத்தனை நாள் சசிகலாவை ஆதரித்த பன்னீர்செல்வம் முதல்வர் பதவி பறிபோனதும் அவரை எதிர்ப்பது ஏன்?, அரசியல் சட்டப்படி பெரும்பான்மை உள்ளவரை ஆட்சி அமைக்க அழைக்காமல், ஏற்படும் தாமதத்துக்கான காரணத்தையும் கூறாமல் ஆளுநர் அமைதி காப்பது ஏன்?' என எல்லோரிடமும் கேள்விகள் இருக்கிறது. ஆனால் இங்கு எல்லா கேள்விகளும் அரசியல் ஆதாயத்துக்கானதாகவே இருக்கிறது. மக்களைப்பற்றி கவலைப்படத்தான் யாருமில்லை.

- ச.ஜெ.ரவி,