Published:Updated:

மணல் கடத்தல்:ஜெயலலிதா எச்சரிக்கை!

மணல் கடத்தல்:ஜெயலலிதா எச்சரிக்கை!
மணல் கடத்தல்:ஜெயலலிதா எச்சரிக்கை!
மணல் கடத்தல்:ஜெயலலிதா எச்சரிக்கை!

சென்னை:மணல் கடத்துபவர்களை,அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும் என்று தமிழக  முதலமைச்சர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”2006-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி  மாற்றத்திற்கு பிறகு, வரைமுறையின்றி மணல் அள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள  ஆற்றுப் படுகைகள் அனைத்தும் பாழ்படுத்தப்பட்டன. தாமிரபரணி ஆற்றில் 5  ஆண்டுகளுக்கு மணல் அள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் 2010-ஆம்  ஆண்டு உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு தாமிரபரணி ஆற்றுப்படுகை சேதமடைந்து  இருந்தது.
 
நான் மீண்டும் மூன்றாவது முறையாக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு,  மணல் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு  உத்தரவிட்டேன். 
 
எனது உத்தரவினையடுத்து வருவாய் துறையும், காவல் துறையும் இணைந்து தமிழ்நாடு  முழுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு, மணல்  கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவது மற்றும் சட்டவிரோதமாக மணல்  அள்ளுவது ஆகியவை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.முந்தைய மைனாரிட்டி  தி.மு.க. அரசின் 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் 603 கோடி ரூபாயாக, அதாவது  சராசரியாக ஆண்டொன்றிற்கு 120 கோடி ரூபாயாக இருந்த மணல் வருவாய், கடந்த  ஓராண்டில்,தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்காத சூழ்நிலையிலும்,197 கோடி ரூபாயாக  உயர்ந்துள்ளது.
 
இதிலிருந்தே மணல் கொள்ளை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது என் பதை  தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.இருப்பினும்,அங்கொன்றும்,  இங்கொன்றுமாக ஒரு சில இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அள்ளுவது  தொடர்வதாகவும்,அதைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதாகவும் தகவல்கள்  வந்துள்ளன.
 
உதாரணமாக, 12.5.2012 அன்று திருப்பத்தூர் வட்டம், பணியாண்டபள்ளி, மதுரா  ஜெயபுரம் கிராமத்தில் மணல் கடத்தப்படுவதாக கிராமத்திலிருந்து திருப்பத்தூர் சார்  ஆட்சியருக்கு தொலைபேசி செய்தி வரப்பெற்றது.இதைத் தடுத்து நிறுத்தும் வண்ணம்,  கிராம உதவியாளர் ராஜேந்திரன் அங்கே அனுப்பி வைக்கப்பட்டார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம உதவியாளர் பிற்பகல் 3.30 மணியளவில் அந்தக்  கிராமத்தில் உள்ள வாரி புறம்போக்கில் அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக மணல்  ஏற்றிக் கொண்டிருந்த டிராக்டர் வாகனத்தை தடுத்து நிறுத்திய போது,மணல் ஏற்றிக்  கொண்டிருந்த மூன்று நபர்கள் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பியோட முயற்சித்து  இருக்கிறார்கள்.
 
இதனைத் தடுத்து நிறுத்தியபோது, வாகன உரிமையாளர் திருப்பதி மற்றும் ஐந்து நபர்கள்  கிராம உதவியாளர் ராஜேந்திரனை சாதியின் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி,  கடுமையாக தாக்கி,அவரை இழுத்துச்சென்று வாரிக் கரையின் மேடான பகுதியில்  கழுத்தை நெரித்து கொல்ல முயன்றுள்ளனர்.
 
மேலும்,அவ்விடத்தில் குழி பறித்து அவரை புதைக்கவும் முயன்றுள்ளனர். அப்போது,  ராஜேந்திரன் தன் உயிரைக் காப்பாற்ற முயற்சித்தபோது,அப்பகுதியில் குப்பைக்  கொட்டுவதற்காக வந்த 12 வயது சிறுமி இதனை நேரடியாகப் பார்த்து, பயந்து உரத்தக்  குரலில் கத்தியுள்ளார்.இதனால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.
 
இதனைக் கண்ட மணல் கடத்தல்காரர்கள், டிராக்டரில் இருந்த மணலை அங்கே  கொட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.அம்மணாங்கோயில் வருவாய்  ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மணல் கடத்தல்காரர்கள் கொண்டு  வந்திருந்த இரண்டு சக்கர வாகனத்தை கைப்பற்றி, கந்திலி காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர்.
 
இதுதொடர்பாக, கந்திலி காவல் நிலையத்தில், திருப்பதி மற்றும் ஐந்து நபர்கள் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேகர் என்பவர் இது தொடர்பாக கைது  செய்யப்பட்டுள்ளார். திருப்பதி மற்றும் கோவிந்தராஜன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில்  சரண் அடைந்துள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும்  காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.
 
மக்களின் குடிநீர்த் தேவைக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்கும் இயற்கையின்  வரப்பிரசாதமான ஆற்றுப் படுகைகளை சமூக விரோதிகள் தங்கள் சுயலாபத்திற்காக  சேதப்படுத்துவதை எனது தலைமையிலான அரசு ஒருபோதும் அனுமதிக்காது  என்பதையும், சட்டவிரோதமாக மணல் கடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை  இந்த அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என்பதையும் தெரிவித்துக்  கொள்கிறேன்”என்று கூறியுள்ளார்.