Published:Updated:

இப்போது அரசு அலுவலகங்களில் இதுதான் நடக்கிறது...

இப்போது அரசு அலுவலகங்களில் இதுதான் நடக்கிறது...
இப்போது அரசு அலுவலகங்களில் இதுதான் நடக்கிறது...


“மக்களின் ஆசானாக இருப்பதற்கு ஒருவர் முதலில் மக்களின் மாணவராக இருக்க வேண்டும்" - என்றார் மாவோ. இந்த அறிவுரை மொழிகளை தலைமுறை தலைமுறையாக படித்துக் கொண்டேதான்இருக்கிறோம்.இன்னும் தொடர்ந்து படிப்போம் என்ற நிலையில்தான் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் உள்ளது.'இன்று கட்சியில் சேர்ந்துவிட்டு அடுத்த நாளே ஆட்சிப் பீடத்தில் அமர வேண்டும்' என்பதே பலரின் சபதமாக உள்ளது. அப்படிப்பட்டவர்களின் சபதத்திற்கு பலிகடாவாக்கப்பட்டவர்கள் தமிழக மக்கள்தான்.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் அசாதாரண சூழ்நிலை குறித்து நம்மிடம் பேசிய அரசு அதிகாரி ஒருவர், "ஆட்சிக்கு வரக் கூடியவர்கள் யாருமே மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது யார்? என்ற காய் நகர்த்தல் வேலைகளில்தான் தங்களின் முழு நேரத்தையும் செலவழிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக, கடந்த ஆண்டு அ.தி.மு.க அரசு அமைந்து 10 மாத காலமாக அரசு நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து விட்டது" என்று குற்றம் சாட்டினார்.மக்களுக்கான நலத்திட்டங்கள் என்ன ஆனது? சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த அறிவிப்புகள் என்ன ஆனது? அரசு நிர்வாகம் செயல்படுகிறதா? இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகள் பொதுமக்கள் மத்தியிலும், சாமான்ய மக்களிடத்திலும் எழுகின்றன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 16-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க 134 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. முதல்வராக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா பதவி ஏற்றார்.பதவி ஏற்ற சில நாட்களிலேயே நடைபெற்ற 2016-17-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில், ஏராளமான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்.அதே கூட்டத்தொடரில், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் பல அறிவிப்புகளை வெளியிட்டார். மதுரையில் பால் பொருட்கள் தயாரிப்பு மையம், லோக் அயுக்தா அமைக்க நடவடிக்கை உள்ளிட்டவை அவற்றில் சில. மேலும் ஏற்கனவே அமலில் இருந்த நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளும் வெளியாகின. இரண்டு கோடி ரூபாயில் "அம்மா சுற்றுச்சூழல் பார்க்" மற்றும் ஆறுகள், ஏரிகள் தூர் வாரப்படும் என்ற அறிவிப்புகளும் வெளியாகின.

அரசின் செயல்பாடுகள் மிகத் தொய்வாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்களுக்குப் பின்னர் டிசம்பர் 5-ம் தேதி அன்று திடீரென்று மாரடைப்பு ஏற்ப்பட்டு மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் சூழ்நிலைகளால் அரசு நிர்வாகம் முழுவதுமாக முடங்கிப் போய் உள்ளது. முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்து, அதிகாரப் போட்டி நீடித்த நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பால், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா உள்ளட்ட 3 பேர் சிறை சென்றனர். எனினும், புதிய முதல்வராக சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார்,அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்றுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜனுக்குப் பதிலாக கே.ஏ. செங்கோட்டையனும், அலெக்ஸாண்டரும் அமைச்சர்களாகி உள்ளனர். எடப்பாடி பழனிசாமி 15 நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அவர் பெரும்பான்மையை நிருபித்த பின்னரே இந்த அரசும் நிலையாக இருக்குமா? மக்கள் நலத்திட்டங்கள் தொடருமா? என்பது தெரிய வரும்.

"ஜெயலலிதாவின் மறைவு அரசியல் களத்தில் மட்டும் வெற்றிடத்தை ஏற்படுத்தவில்லை. அரசு நிர்வாகத்திலும் மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்தி விட்டது" என்கிறார்கள் மூத்த அரசு அதிகாரிகள்.

இது குறித்துப் பேசிய பெயர் சொல்ல விரும்பாத அரசு அதிகாரி ஒருவர், "ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரப் போட்டியால் அரசு நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து விட்டது. பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களும் எதுவும் செயல்படுத்தவில்லை. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற திட்டங்களும் செயல்பாட்டுக்கு வரவில்லை. மக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதிலை மட்டுமே அரசு அலுவலர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்ட கோப்புகள் எதுவும் நகராமல் அப்படியே உள்ளன. பணத்தைக் கொடுத்தால் எந்தவேலை முடியுமோ அந்த வேலை மட்டுமே நடக்கிறது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் எந்த திட்டங்களும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இவர்களுடைய பதவிச் சண்டை எப்போது முடிந்து, எப்போது அந்தத் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தப் போகிறது?" என்று கேள்வி எழுப்பினார்.

 கடந்த 2011  - ல்  அ.தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து அறிவித்த திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தவில்லை என்று அப்போது  அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.அதனை தொடர்ந்து ஜெயலலிதா அடிக்கடி 110 விதியை  பயன்படுத்துவதாகவும் விமர்சனம் எழுந்தது.இந்த நிலையில் கடந்த ஆண்டு மே 23 -ம் தேதி ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராக பதவி ஏற்றார்.அவருடைய தலைமையில் அரசு நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை இயங்கி வந்தது.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து முழுவதுமாக முடங்கிய அரசு நிர்வாகம் இன்று வரை எழவில்லை என்பதே தமிழக மக்களின் குற்றச்சாட்டாகவும் உள்ளது !

இப்போதாவது விழிக்குமா அரசு?

- கே.புவனேஸ்வரி