Published:Updated:

எக்குத்தப்பு குழப்பத்துக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம்! கொந்தளிக்கும் சேலம் அ.தி.மு.க.

எக்குத்தப்பு குழப்பத்துக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம்! கொந்தளிக்கும் சேலம் அ.தி.மு.க.
எக்குத்தப்பு குழப்பத்துக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம்! கொந்தளிக்கும் சேலம் அ.தி.மு.க.

மிழகத்தில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் அரசு நிர்வாக சிக்கலுக்குக் காரணம் புதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியே என்று சேலம் அ.தி.மு.கவினர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். அவரே அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவிடம் அவ்வப்போது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.பற்றி எக்குத்தப்பாகச் சொல்லி, அவருக்கு  முதல்வர் ஆசையை வரவைத்து கட்சியில் பெரும் குழப்பத்தை உண்டாக்கி இப்போது தான் முதல்வர் பதவிக்கு வந்துவிட்டார் என்றும் கூறுகிறார்கள் சேலம் ர.ரத்தங்கள்.

சேலம் மாவட்டம் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களுக்கு அடித்தளமிட்ட மாவட்டம் என்பதால் எல்லா கட்சிகளும் மாநில மாநாடு நடத்துவதிலும்,மக்கள் திரள் கூட்டங்கள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டும்.திராவிட இயக்கம் தொடங்கி தேசிய முற்போக்கு திராவிட கழகம் வரை இந்த வழக்கம் தொடருகிறது.இந்த நிலையில் கடந்த 80 ஆண்டுகளில்,சேலம் மாவட்டத்தில் இருந்து இரண்டாவது நபராக முதல்வர் பதவியை ஏற்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி.1937ம் ஆண்டு அப்போதைய அகன்ற சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜகோபாலாச்சாரியார் பதவி ஏற்றார்.அதன் பிறகு இங்கிலாந்து நாட்டிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியாவில், தமிழகத்தின் முதல்வராக சேலம் மாவட்டத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் பதவி ஏற்றுள்ளார்.இதனை சேலம் மாவட்டமே கொண்டாடி இருக்க வேண்டும் அல்லவா.ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறது நிலைமை என்கிறார்கள் சேலம் மாவட்ட அதிமுகவினர். 

சொந்த மாவட்டத்தில் தனது பெயரைச் சொல்லி யாரும் கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று எடப்பாடி சொன்னதாகவும் கட்சியினர் மத்தியில் ஒரு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் உலா வருகிறது.அதனால் பட்டாசு சத்தம் அதிகம் இல்லாமலும் வேறு கொண்டாட்டம் இல்லாமலும் இருக்கிறது என்கிறார்கள் மாவட்ட அதிமுகவினர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மாவட்ட அதிமுகவினர்க்கு பெரியதாக ஆதரவு மனப்பான்மை இல்லை என்றும்,குறுக்கு வழியில் அவர் முதல்வராகிவிட்டார் என்றும் கொந்தளிக்கிறார்கள் அதிமுகவின் இன்னொரு பிரிவினர்.மேலும் அவர் ஒரு சார்பான சமூக ஆதரவாளர் என்றும் பகிரங்கமாகக் குற்றச் சாட்டும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் தொடர்புகொண்டு பேசிய,சேலம் மாவட்ட முன்னாள் கவுன்சிலர் மணிகண்டன் கூறுகையில்,"மூதறிஞர் ராஜாஜிக்குப் பிறகு சேலத்தில் இருந்து ஒரு தமிழக முதல்வர் என்பதை எங்களால் முழுமையாக,மகிழ்ச்சியான விஷயமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

காரணம் அரசியல் குழப்பம் நிலவும் சூழல்.கட்சியின் பொதுச் செயலாளர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கிறார்.கட்சியின் பெரும்பான்மையான தொண்டர்கள், தலைமையின் அண்மைக்கால செயல்பாடுகள் மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகி இருப்பது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.சசிகலாவின் பினாமியாகவே அவர் முதல்வராகி இருக்கிறார்.எவ்வளவு நாள் அவர் முதல்வராகத் தொடருவார் என்று தெரியவில்லை.அவரின் ஆதரவாளர்கள் குறிப்பாக அவரின் சமுதாயத்தினர் மத்தியில் மகிழ்ச்சி இருக்கிறது.சேலம் மாவட்டத்தில் அதிமுகவை கொங்கு கட்சியாகவே அவர் மாற்றிவிட்டார்.

நேர்மையாகச் சொன்னால்,சசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்கணும் என்று தமிழ் நாட்டிலேயே முதல் ஆளாக நான்தான் குரல் கொடுத்தேன்.அதே சமயத்தில் பன்னீர்செல்வம்தான் முதல்வராக நீடிக்கணும் என்றும் கூறினேன்.சசிகலாவும் இந்த மனநிலையில்தான் இருந்தாங்க.ஆனால் முதல்வர் வாய்ப்பு தனக்குக் கிடைக்கவில்லையே என்று எடப்பாடி பழனிசாமியும், தம்பிதுரை,தங்கமணி,வேலுமணி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் சசிகலாவிடம் தினமும் மந்திரம் போல,ஓ.பி.எஸ். குறித்து தவறாகக் கூறி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர்.கொங்கு பெல்ட்டை வைத்துக்கொண்டுதான் கட்சிக்குள் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிட்டார்.சசிகலாவுக்கு பொது மக்கள் மத்தியில் எதிர்ப்பையும்,வெறுப்பையும் உண்டாக்கிவிட்டது.இவர் தவறான 'சாய்ஸ்'என்று தலைமைக் கழகத்திற்கு கடிதமும் அனுப்பியுள்ளேன். 

தயவு செய்து ராஜாஜியோடு எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட வேண்டாம்.இவர் சசிகலா தரப்பு பினாமி. அவர்களின் அக்கவுண்ட்ஸ் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு,'மனி மாஃபியா' என்ற நிலையில் தான் இவர் முதல்வராகியிருக்கிறார்.அதனால் ராஜாஜியோடு இவரை ஒப்பிட்டால் அது அவரை சிறுமைப்படுத்துவது போலாகிவிடும்" என்றார் கொந்தளிப்பாக.

- சி.தேவராஜன்