Published:Updated:

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகள் சரி... அந்த 4வது சமாதி.. எப்படி இருக்கிறது? #SpotReport #VikatanExclusive

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகள் சரி... அந்த 4வது சமாதி.. எப்படி இருக்கிறது? #SpotReport #VikatanExclusive
அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகள் சரி... அந்த 4வது சமாதி.. எப்படி இருக்கிறது? #SpotReport #VikatanExclusive

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகள் சரி... அந்த 4வது சமாதி.. எப்படி இருக்கிறது? #SpotReport #VikatanExclusive

இன்றைய தேதிக்கு தமிழகத்தின் ஹாட் ஸ்பாட் மெரினா. குறிப்பாக அங்கிருக்கும் சமாதி.  டிசம்பருக்கு முன் அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகளைப் பார்க்கப் போயிருக்கிறேன். ஜெயலலிதா இறந்து, அடக்கம் எல்லாம் முடிந்த இரவு கூட்டம் எல்லாம் கலைந்தபின், உள்ளே சென்று பார்த்தபோது, ``டேய்.. அதை எடுடா’’ என்று யாரோ எதையோ கேட்டபடி நின்றுகொண்டிருந்த இடத்திற்கு சில அடிகள் கீழேதான் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டிருந்தார். சடாரென்று திரும்பி வந்துவிட்டேன். ‘சில மாதங்கள் முன்புவரை, அவர் இருக்கும் தெருவழியேகூட மக்கள் நடமாடமுடியாத அளவு கெடுபிடி. இன்றைக்கு இப்படி’ என்று மரணம் சொல்லும் சேதியை அசைபோட்டபடி வந்துவிட்டேன்.

பன்னீர்செல்வத்தின் தியானத்திற்குப் பிறகு, அந்தச்  சமாதி மீண்டும் பிஸியாகிவிட்டது. இருக்கும்போது அவரை மீறி எதையும் செய்யத் தயங்கியவர்கள், இல்லாதபோதும் அதேபோலவே அவரிடம் கேட்டுத்தான் எல்லாம் செய்கிறார்கள். 

இப்போது போய்ப் பார்ப்போமே என்று நேற்று அதிகாலை சென்றிருந்தேன். முதலில் நேராக ஜெயலலிதா சமாதிக்குச் சென்றேன். அதிகாலை என்பதால் நான்கைந்து போலீஸார்தான் இருந்தார்கள். அதுபோக வழக்கமான வாட்ச்மேன் சிலரும் அங்கே இருந்தனர். மக்கள் நேராக அங்குதான் சென்று கொண்டிருந்தனர். போட்டோகிராஃபர்கள், போட்டோ  எடுத்துக் கொண்டிருக்க, சிலர் செல்ஃபிகளும் எடுத்தனர். கொஞ்சம் தள்ளி கூடாரம் அமைத்திருந்தனர். நைசாக விசாரித்ததில் ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு பிறகு அங்கே பெர்மனெண்டாக டெண்ட் போட்டு அலுவலகமே செயல்படுகிறது என்றார்கள்.

குழுவாக வந்தவர்களை, ஒட்டுமொத்தமாக எடுத்துவிட்டு, ’தனித்தனியா எடுக்கலாம்’ என்று ஒவ்வொருவராய்ப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் ஒருவர்.

திரும்ப எம்.ஜி.ஆர் சமாதிக்கு வந்தபோது, தடுப்பானைக் கொஞ்சம் நகர்த்திவிட்டு, உள்ளே சென்று கொண்டிருந்தார் ஒருவர். நானும் நடக்க, ‘ஷூவைக் கழட்டிட்டு வாங்க’ என்றார் அங்கிருந்த செக்யூரிட்டி.  

உள்ளே சென்ற சில நிமிடங்களில் ஒரு பெண்மணி, ‘வெளில வாங்க’ என்று உரக்கக் கத்தி சற்று தள்ளியிருந்த போலீஸை அழைத்தார். ‘வாட்ச்மேனைத் திட்டிட்டு உள்ள வந்துடறாங்க சார்.. நீங்க போய் நில்லுங்க’ என்று சொல்ல, அவர் வந்து எங்களை, ‘சார்.. வெளில போய் நின்னு பாருங்க. உள்ள வரக்கூடாது’ என்று நம்மிடம் சொல்லிவிட்டு அந்த வாட்ச்மேனையும் கடிந்து கொண்டார். ‘வாத்தியார் சமாதிக்கு வந்து பார்க்ககூடாதுனு சொன்னா எப்படி? அவருக்காகத்தான் இங்க டியூட்டிக்கே வந்தேன். கொஞ்சநாளா அவருக்கும் எனக்கும் நிம்மதியே இல்லைங்க’ என்றார் அந்த வாட்ச்மேன். சில மாதங்களுக்கு முன் சென்றிருந்தபோது நிறைய பேர் வந்து, சமாதியில் காதுவைத்து ‘வாட்ச் ஓடுதாம்ல’ என்றிருந்த காட்சிகளுக்கெல்லாம் கட் என்று தெரிந்தது.

அடுத்ததாக அண்ணா சமாதிக்குச் செல்லலாம் என்று பார்த்தால் முதலில் இருந்தது போல, எம்.ஜி.ஆர் சமாதியில் இருந்தே,  அங்கே செல்ல முடியாதபடிக்கு வழிகளை அடைத்து வைத்திருந்தார்கள். விசாரித்தபோது, ‘அவராச்சும் நிம்மதியா இருக்கட்டுமேங்க.. இவங்க அரசியல் ஸ்டண்டுக்கு அவரையும் ஏன் இழுத்துகிட்டு’ என்று ஆதங்கப்பட்டார் ஒருவர். 

வெளியில் வந்து சுற்றி அண்ணா சமாதிக்குச் செல்லும்போது வேன்களில் காவலர்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். ‘நீ அங்க போய் நில்லு. மொத்தம் 18 பேர் அங்கிருந்து, இதோ இந்த இடம் வரைக்கும் டியூட்டி போட்டிருக்காங்க’ என்று டியூட்டி பிரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு காவலர். பெண் காவலர்கள் வேனில் இருந்து இறங்கி, பேப்பரை விரித்து கொண்டு வந்த காலை உணவைச் சாப்பிட ஆரம்பித்தனர்.  

அண்ணா சமாதி எந்த ஆரவாரமும் இன்றி இருந்தது. தடுப்பான்கள் இருக்கவில்லை. ‘வந்தது வந்தாச்சு... இதையும் பார்த்துட்டுப் போலாம்’ என்று வரும் வெளியூர்க்காரர்கள் இரண்டொருவர் மட்டும் இருந்தனர். ஒரு தந்தை, தன் மகளுக்கு, அண்ணாவைப் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.  

மீண்டும் வெளியில் வந்தபோது எம்.ஜி.ஆர் - ஜெ சமாதிகளின் நுழைவாயிலில் கொஞ்சம் மக்கள் கூட்டம் தெரிந்தது. பூ, போட்டோக்கள் விற்பனை ஆரம்பித்திருந்தது. போட்டோக்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தாண்டி தீபாவின் போட்டோக்களும் இருந்தன. 

‘சசிகலா போட்டோ இல்லைங்களா?’ 

’கேட்டா குடுக்கலாம்னு உள்ள வெச்சிருக்கேன்’ என்று தேட ஆரம்பிக்க, நான்  ‘ஓ.பன்னீர்செல்வம்?’ என்று கேட்டேன். ‘அதெல்லாம் ஒண்ணாதான் வெச்சிருந்தேன். உள்ளதான் இருக்கணும்’ என்றவரிடம் அடுத்ததாக ‘எடப்பாடி பழனிசாமி போட்டோ இருக்குங்களா?’ என்றதும் தேடுவதை நிறுத்திவிட்டு முறைத்தார். அது சூரியனின் சூட்டைவிட அதிக சூடாக இருக்கவே  சிநேகமாகச் சிரித்தேன். ‘வெச்சுக்கணும் தம்பி. இனி அதையும் வெச்சுக்கணும்தான் போல’ என்றார். 

சமாதிக்குள் சென்றிருந்தபோது வேலை மெனக்கெட்டு எண்ணிப்பார்த்ததில் ஜெயலலிதா சமாதியைச் சுற்றி 63 தடுப்பான்கள் (பேரிகேட்) இருந்தன. எம்.ஜி.ஆர் சமாதியைச் சுற்றி 41. அண்ணா சமாதியைச் சுற்றி ஒன்றுமில்லை. கொஞ்சம் தள்ளி ஆறேழு வைக்கப்பட்டிருந்தன. 

இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போது, இன்னொருவரைப் பற்றிய எண்ணம் வந்தது. ‘அட... அவர் சமாதி எங்க இருக்கு?’ என்று யோசித்தேன். உடனே வண்டியை அங்கே செலுத்தினேன்.

ராமாவரம் தோட்டம். 23 நாட்கள் முதல்வராக இருந்தவர். எம்.ஜி.ஆரின் மனைவி  வி.என்.ஜானகியின் சமாதி அங்கேதான் இருந்தது. யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டி இருக்குமோ என்ற எண்ணத்துடனே சென்றேன். பெரிய கேட்டுக்கு அடுத்து வாசலே இல்லாமல் திறந்திருந்தது ஒரு வழி. உள்ளே சென்றதும் ஒருவர் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். வாங்க என்று உடல்மொழியிலேயே அன்பாய் அழைத்துவிட்டு அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். நூறடி தூரத்தில் எம்.ஜி.ஆர் வீடு. தமிழ்நாட்டையே இன்னமும் தன் பெயரால் ஆண்டுகொண்டிருக்கும் அவர் வாழ்ந்த வீடு, எந்தக் களேபரங்களும் இல்லாமல் இருந்தது.

‘அது ஜானகியம்மா அடக்கம் பண்ணின இடம்’ என்றார் அந்தத் தோட்டக்காரர். பார்த்தேன். சாதாரண அளவிலான புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டிருக்க சலவைக்கல் மேடையுடன் இருந்தது சமாதி. 

தோட்டக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘ஐயா இருக்கறப்ப இருந்து இருக்கேனுங்க’ என்றவரிடம் இன்றைய அரசியல் சூழல் குறித்துக் கேட்டால், ‘அதைப் பத்தியெல்லாம் பேச எனக்கு தகுதி இல்லைங்க. ஒண்ணே ஒண்ணுங்க. எல்லாம் தலைவரோட போச்சுங்க. இதப் பாருங்க. இந்த மாதிரி கிழிஞ்ச லுங்கி கட்டிருந்தாலும் சரி, அழுக்கு வேட்டி கட்டிருந்தாலும் சரி.. தலைவர் கூப்டுப் பேசுவாருங்க. இப்ப வெள்ள வேட்டி கட்டிகிட்டா மட்டும்தான் பேசறாங்க. ஏழபாழைங்ககிட்ட யார்ங்க நெருங்கிப் பேசறாங்க?’ என்று ஆதங்கப்பட்டார்.

இன்னொருவர் சசிகலாவைப் பற்றிச் சொல்லும்போது, ‘மொத்தமே 3, 4 வாட்டிதான் வந்திருக்காங்க. ஜெயலலிதா இல்லாம வந்தது, இப்ப ஜெயிலுக்குப் போறதுக்கு முந்தி மட்டும்தான். அதுக்கு முன்ன தலைவர் இருந்த இடம் யாருக்குத் தெரிஞ்சிருக்கு? ஓட்டுக்காக வர்றதுதான்’ என்றார். முதலமைச்சர் யார் என்று தெரியுமா என்று கேட்டால், கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். ‘தலைவர்தாங்க. அவ்ளோதான். அவர் இடத்துல யார் இருக்காங்கனு கேட்டு நோகடிக்காதீங்க’ என்கின்றனர்.  

வெளியே வந்தேன். அண்ணா சமாதியில் ‘எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது’ என்று எழுதப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. எதையும் தாங்கும் இதயம்,  அண்ணாவுக்கு மட்டும் அல்ல. மக்களுக்கும்தான்.    

-பரிசல் கிருஷ்ணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு