Published:Updated:

உத்தரப்பிரதேசம் வாக்குசதவிகிதம் குறைவு யாருக்கு சாதகம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உத்தரப்பிரதேசம் வாக்குசதவிகிதம் குறைவு யாருக்கு சாதகம்?
உத்தரப்பிரதேசம் வாக்குசதவிகிதம் குறைவு யாருக்கு சாதகம்?

உத்தரப்பிரதேசம் வாக்குசதவிகிதம் குறைவு யாருக்கு சாதகம்?

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டசபைக்கு, தற்போது நடைபெறும் 7 கட்ட தேர்தல்களில், இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. ஞாயிறு அன்று 69 தொகுதிகளில் நடைபெற்ற 3-ம் கட்டத் தேர்தலில் சுமார் 62 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஏற்கெனவே முடிவடைந்த முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல்களிலும், ஏறக்குறைய இதே அளவு சதவிகித வாக்குகளே பதிவாகி இருந்தன. முதல்கட்டத் தேர்தலில் 62 சதவிகிதமும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 63 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

தேர்தலில் அதிகம் பேரை வாக்களிக்கச் செய்து, ஜனநாயகத்தை வலுப்படுத்து இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் 80 சதவீத வாக்கு விகிதத்தைக் கூட எட்டமுடியவில்லை. பெரிய மாநிலம் என்பதால், வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், தற்போதுள்ள நிலப்பரப்பையும் பிரித்து, புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கையும் ஒருபுறம் வலுத்து வருகிறது. ஏற்கனவே வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பா.ஜ.க ஆட்சியில்தான் உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டது. தற்போது, மேலும் ஒருமுறை உத்தரப்பிரதேசத்தை பிரித்து சிறிய மாநிலம் உருவாக்கப்பட்டால், வளர்ச்சி ஏற்படும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு தற்போது 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக  தேர்தல் நடைபெற்று வருகிறது. ஞாயிறன்று நடைபெற்ற 3-ம் கட்ட தேர்தலில் 62 சதவிகிதமே வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு காங்கிரஸ் கட்சி, ஆளும் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. அஜித் சிங் தலைமையிலான ராஷ்டிரிய லோக்தளம் கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளது. இந்த மாநிலத்தின் தேர்தல் முடிவு, மக்களுக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க அரசின் மீதான கருத்துக்கணிப்பாக அமையும் என்பதால், பிரதமர் மோடி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தனர். தேர்தல் இன்னமும் நடைபெறவுள்ள தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கும் இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் ஆகும். அகிலேஷ் யாதவ் மீண்டும் முதல்வர் ஆவார் என்று சமாஜ்வாதி கட்சி பெரும் நம்பிக்கையுடன் உள்ளது. ராஷ்டிரிய லோக்தளத்தைப் பொறுத்தவரை ஆட்சியமைக்ககூடிய பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும், தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஆட்சியமைக்க ஒருசில எம்.எல்.ஏக்கள் தேவைப்படும் நிலையில், அக்கட்சியின் பங்கு முக்கியத்துவம் பெறும்.  

பொதுவாகவே அதிக அளவு வாக்கு சதவிகிதம் ஆளும் கட்சிக்கு எதிரானதாக அமையும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாகும். ஆனால், சராசரி வாக்குகள் பதிவாகியும் சில மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அப்படிப் பார்க்கும்போது, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் 4 கட்ட தேர்தல்கள் நடைபெறவுள்ளது. எஞ்சிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்து, மாநிலம் முழுவதும் பதிவான வாக்குகளின் சதவிகிதத்தைப் பொறுத்தே, அரசியல்கட்சிகளின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும். உத்தரப்பிரதேச தேர்தல் முடிவு என்பது அந்த மாநில அரசியலில் மட்டுமல்லாது, தேசிய அரசியலிலும், அடுத்தடுத்து நடைபெறவுள்ள மாநிலங்களின் சட்டசபைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம். உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மார்ச் 11-ம் தேதி வெளியாக உள்ளன. எனவே, அதுவரை பொறுத்திருப்போம்...

-சி.வெங்கட சேது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு