Published:Updated:

“அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிப்பேன்!” - சிதம்பரத்துக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி கடுகடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிப்பேன்!” - சிதம்பரத்துக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி கடுகடு
“அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிப்பேன்!” - சிதம்பரத்துக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி கடுகடு

“அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிப்பேன்!” - சிதம்பரத்துக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி கடுகடு

மிழகத்தில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவுள்ளதாக பி.ஜே.பி மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அறிவித்திருந்தார். ஒரு முக்கிய அரசியல் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வெளியிடப்போவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இன்று (20-2-17) மாலை டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி, ''2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது நாங்கள் இந்தியாவுக்கு வெளியே பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பதாக உறுதியளித்தோம். மத்தியில் ஆட்சி அமைத்தபின் அமலாக்கத் துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் தங்கள் விசாரணையைத் தொடங்கின. அதில் மிகப் பெரிய அளவிலான ஆதாரங்கள் கிடைத்தன. ஆனால், அதன்மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனக்குக் கிடைத்த சில ஆதாரங்களை வைத்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுள்ளார் என்றும், இதற்கு கைம்மாறாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பெயரில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது" என பரபரப்பு குற்றச்சாட்டினை வைத்தார். 

மேலும் பேசிய அவர், "அப்போதிருந்த அந்நிய முதலீடு வரையறைபடி... வெளிநாட்டு நிறுவனம் இந்தியத் தொலைத்தொடர்புத் துறை நிறுவனங்களில் 74 சதவிகிதம் வரையே முதலீடு செய்ய முடியும். ஆனால், இந்த விதியை மீறி, சிங்கப்பூர்... மேக்சிஸ் ஏர்செல் நிறுவனத்தில் 100 சதவிகித முதலீடு செய்ய அவர் சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்துள்ளார். பொதுவாக 600 கோடிக்குள்ளான அந்நிய முதலீட்டில்தான் மத்திய நிதியமைச்சர் ஒப்புதல் வழங்க முடியும். ஆனால், 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் மத்திய அமைச்சரவையின் நிதிக்கான கூட்டுக்குழுதான் ஒப்புதல் வழங்க வேண்டும். இந்த விதிகளைக் கடைப்பிடிக்காமல் ப.சிதம்பரம் சட்டவிரோதமாக, ஒப்புதல் வழங்கி... அதற்கு கைம்மாறாக வந்த பணத்தை அவரது மகன் பெயரில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ளார்" என்றார்.

இதற்கு ஆதாரமாக கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய 21 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை வெளியிட்டார். மேலும் அவர், ''ஏர்செல் - மேக்சிஸில் மாறன் சகோதரர்கள் வெறும் கூட்டுச்சதி மட்டுமே செய்தனர். அதில், முக்கியக் குற்றவாளி ப.சிதம்பரம்தான். இதில், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரமும் பயனடைந்துள்ளார். இந்த 21 வங்கிக் கணக்குகளையும் கார்த்தி சிதம்பரம் வருமானவரித் துறையிடமிருந்து மறைத்துள்ளதாகவும், அது அனைத்தும் சட்ட விரோத முறையில் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள்'' என்றும் குற்றம்சாட்டினார்.

''இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் ஏன் மோடி அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை'' என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஊழலுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லித்தான் உத்தரவுகள் சொல்கின்றன. ஆனால், மத்திய நிதி அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் நானே இந்த ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன். வரும் மார்ச் மாதம் 3-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்குப் பற்றிய விசாரணை நடைபெறுகிறது. அப்போது நான் இந்த ஆதாரங்கள் அனைத்தையும் சமர்ப்பிப்பேன். கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இந்த 21 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவில் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுதவிர, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் சுமார் 120 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய ஆதாரங்களையும் விரைவில் வெளியிடுவேன். 2014-ல் ப.சிதம்பரத்திடம் சி.பி.ஐ விசாரணை நடத்தியது. பின்னர், வருமானவரித் துறையினர் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டது அப்போதுதான் இந்த 21 வங்கிக் கணக்குகள் பற்றிய ஆதாரம் வருமானவரித் துறைக்கு கிடைத்தது. எனினும், ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சகத்தில் உள்ள தன் செல்வாக்கினைப் பயன்படுத்தி அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொண்டுள்ளார்'' என்றார். இந்த ஆதாரங்கள் அனைத்தையும் சென்னை வருமானவரித் துறை ஊழியர் ஒருவர் தனக்கு ரகசியமாகத் தந்ததாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர்  பக்கத்தில் மறுப்புத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் வருமானவரித் துறைக்குத் தாக்கல் செய்த விவரங்களில் எதையும் மறைக்கவில்லை. அனைத்தும் சட்டத்துக்குட்பட்டே செய்துள்ளோம்'' என்று கூறியிருக்கிறார். 

- கா.ராஜவேலு 

மாணவப் பத்திரிக்கையாளர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு