Published:Updated:

ஆதியோகி பெயரால் விதிமீறுகிறதா ஈஷா? பிரதமர் மோடிக்கும் கடும் எதிர்ப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆதியோகி பெயரால் விதிமீறுகிறதா ஈஷா? பிரதமர் மோடிக்கும் கடும் எதிர்ப்பு!
ஆதியோகி பெயரால் விதிமீறுகிறதா ஈஷா? பிரதமர் மோடிக்கும் கடும் எதிர்ப்பு!

ஆதியோகி பெயரால் விதிமீறுகிறதா ஈஷா? பிரதமர் மோடிக்கும் கடும் எதிர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'உலகிலேயே மிகப்பெரிய திருமுகமாக, 112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு விழா' என விளம்பரம் செய்து வருகிறது ஈஷா நிறுவனம். இந்த பிரமாண்ட சிலையை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார் எனச் சொல்கிறது அந்த விளம்பரம். கோவையில் ஈஷா நிறுவன விழாவில் பங்கேற்கிறேன் என டிவிட்டரில் அறிவிக்கிறார் நரேந்திரமோடி. ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி, ஈஷா மீதான விதிமுறை மீறல் புகார்கள் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். மேற்குத்தொடர்ச்சி மலை, அதையொட்டிய வனம், நீர் ஆதாரங்கள் என இயற்கை வளங்களைக் கொண்ட இந்தப் பகுதி மலைதள பாதுகாப்பு குழுமத்தின் அதிகார வரம்பில் உள்ள பகுதியாகும்.
இதன் காரணமாகவே இங்கு கட்டுமானங்களை மேற்கொள்ள ஏகப்பட்ட விதிமுறைகள் உண்டு. விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது, பிரமாண்ட கட்டடங்களைக் கட்டுவது எல்லாம் அனுமதிக்க முடியாது.

'பசுமை இழந்த பகுதி'  : சிலைக் கட்டுமானப் பணிகளின் போதும், கட்டுமானப் பணிகளுக்குப் பின்பும்

300 சதுர மீட்டருக்கு மேல் கட்டடம் கட்ட வேண்டும் என்றால், மாவட்ட ஆட்சியர் துவங்கி, நகர் ஊரமைப்புத் துறை, வனத்துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை எனப் பல துறைகளின் தடையின்மைச் சான்றுகளைப் பெற வேண்டும்.

ஏற்கெனவே ஈஷாவின் கட்டடங்களுக்கு முறையான அனுமதி பெறப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. வனத்தையொட்டி, சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், அனுமதி பெறாமல் கட்டப்பட்டது தொடர்பாக அரசு தரப்பில் ஈஷா நிறுவனத்தினருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டிருக்கிறது.  மேலும் பல ஆயிரம் சதுர அடி பரப்பிலான கட்டடங்களை சீல் வைக்கவும் உத்தரவும் பிறப்பித்திருக்கிறது. மறுபுறம் யானை - மனித மோதலுக்கு இது போன்ற கட்டடங்கள் காரணம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவை செயல்படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில் இப்போது 112 அடி உயரமுள்ள சிவன் சிலை நிர்மாணிக்கப்பட்டிருப்பது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

"விதிமீறி கட்டுமானங்களை மேற்கொண்டது உள்ளிட்ட பல புகார்கள் ஈஷாவின் மீது உள்ளன. இத்தனை புகார்களுக்கு நடுவே 112 அடி ஆதியோகி சிலையையும், அதையொட்டி பல ஆயிரம் சதுர அடி பரப்புக்கு கட்டடத்தையும் எழுப்பியுள்ளது ஈஷா நிறுவனம். இங்கு கட்டுமானங்கள் எழுப்ப வேண்டுமென்றால், மலைத்தள பாதுகாப்புக்குழுமத்தின் அனுமதியும், நகர் ஊரமைப்புத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் அனுமதியும் அவசியம். ஆனால் இந்த அனுமதி பெறாமலே இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. சட்ட விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடம் இது.

இதற்கு எதிரான குரல்களும் எழத்துவங்கியிருக்கின்றன. மாவட்ட ஆட்சியரைத்தவிர மற்ற எந்தத் துறையிலும் அனுமதி வாங்கவில்லை. 300 சதுர மீட்டருக்கு மேல் கட்டடம் கட்டினால் அனைத்து துறைகளின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுர பரப்பில் அமையும் இந்தக் கட்டுமானப் பணிகளுக்கு எந்த அனுமதியும் பெறப்படவில்லை. இது சட்டவிரோதம்," என சூழலியல் ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பி.முத்தம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். "இக்கரைபோழுவம்பட்டி கிராமத்தில் 3 ஏக்கர் பரப்பில் ஈஷா யோகாமையத்தின் சார்பில், 112 அடி உயர சிவன் சிலையும், அதைச் சுற்றி ஒரு லட்சம் சதுர அடியில் வாகன நிறுத்துமிடம், நான்கு மண்டபங்கள், பூங்கா என சட்டத்திற்குப் புறம்பாகவும், மலைப் பகுதி பாதுகாப்பு விதிகளை மீறியும் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சிலை அமைக்க 300 சதுர மீட்டர் பரப்புக்கு விளைநிலங்களை மாற்ற மட்டும் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். இதை மீறி ஒரு லட்சம் சதுர அடி பரப்புக்குக் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் கட்டுமானங்களுக்கு மலைப் பிரதேச பாதுகாப்பு குழுமத்தின் அனுமதியோ, வனத்துறையின் அனுமதியோ, சுற்றுச்சூழல் அனுமதியோ, நகர ஊரமைப்பு திட்ட அதிகாரி அனுமதியோ பெறவில்லை. தவிர நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதியான இங்கு ராஜ வாய்க்கால் கால்வாயும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தக் கட்டுமானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் சட்டவிரோத கட்டடங்களை இடிக்க உத்தரவிட வேண்டும்," என அந்த மனுவில் கோரியிருக்கிறார். மனுவை விசாரணைக்கு ஏற்றிருக்கிறது நீதிமன்றம்.

ஈஷா யோகா மையத்தின் விதிமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் அதிகளவில் இருந்த நிலையில், அண்மையில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு பத்ம விபூஷன் பட்டம் கொடுக்கப்பட்டது பெரும் சர்ச்சை எழுந்தது. இப்போது ஆதியோகியின் பெயரால் வன அழிப்பில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் இப்போது அந்த சிலையை பிரதமர் துவக்கி வைப்பார் என வெளியாகிய செய்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டுவரும் ஈஷா யோகா மையத்தின் விழாவில் கலந்துகொள்ளக்கூடாது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையம் மூலம் மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வருகிறது. ஈஷா நிறுவனத்துக்கு பிரதமர் மோடி வந்தால் கறுப்புக் கொடி காட்டுவோம். ஆர்ப்பாட்டம் நடத்துவோம்' என விவசாயிகள் உள்ளிட்டோர் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் எதிர்ப்புகளை மீறி, வரும் 24ம் தேதி கோவை வர மோடி சம்மதம் தெரிவித்து, டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக 6 கேள்விகளுக்கு பதில் கேட்டிருந்தோம். அதற்கு ஈஷா தரப்பில் இருந்து பதில் கிடைக்கப்பெறவில்லை. அதற்கு பதில் ஈஷா நிறுவனத்தின் சார்பில் விளக்கக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் எங்கள் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லப்படவில்லை. "ஈஷா நிறுவனம் சட்ட விதிகளை மீறியோ, சட்டவிரோத செயல்பாட்டிலோ ஈடுபடவில்லை. இது தொடர்பான புகார் முற்றிலும் தவறு. மாவட்ட கலெக்டரிடமும், வனத்துறை, பி.எஸ்.என்.எல். துறையில் அனுமதி பெற்றிருக்கிறோம். கலெக்டர் தடையின்மைச் சான்று கொடுத்திருக்கிறார். எனவே இதில் சட்டவிதிகளை மீறியதாகச் சொல்வது தவறு" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாம் ஈஷா நிறுவனத்திடம் கேட்ட அந்த ஆறு கேள்விகள்...

01. வனத்தையொட்டி, 112 அடி ஆதியோகி சிலை அமைக்க வேண்டுமானால், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் (HACA), நகர ஊரமைப்புத்துறை (DTCP) ஆகியவற்றின் அனுமதி பெற வேண்டியது என்பது அவசியம் என்றும், இந்த அனுமதி பெறாமல் இந்தக் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதே?

02. ஈஷா மதம் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்ல எனச் சொல்லிவரும் நிலையில், மதம் சம்பந்தப்பட்ட வழிபாட்டுத்தளம் அமைக்க... எனச்சொல்லி கலெக்டரிடம் அனுமதிக் கடிதம் சமர்ப்பித்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

03. தற்போது ஆதியோகி திருமுக சிலை அமையுமிடம் மலைப்பகுதி என்றும், விவசாய இடத்தில் இது போன்று சிலை அமைப்பது விதிமீறல் என்றும் புகார் சொல்லப்படுகிறது. இதைப்பற்றி?

04. சிலைக்கான கட்டுமானங்கள் துவங்கும் முன்னர் இதற்கான அனுமதியைக் கோராமல், கட்டடம் மீது விதிமீறல் புகார் எழுந்த பின்னரே அனுமதி கோரி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதியாகச் சொல்லப்படுகிறதே?

05.கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா மையத்தில் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அனைத்தையும் இடிக்க வேண்டும் என்றும், இனி எந்தவித கட்டுமானங்களும் கட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளியங்கிரி மலைவாழ் பாதுகாப்புக்குழு சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதே? அது குறித்து உங்கள் கருத்து.

06. வனப் பகுதியில் ஈஷா மையம் நடத்தும் மகா சிவராத்திரி மற்றும் அது போன்ற பிற நிகழ்வுகளுக்கு நிரந்தரத் தடை ஏன் விதிக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளும் ஈஷா மையத்திற்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதே. அதுகுறித்து உங்கள் கருத்து.

- ச.ஜெ.ரவி,

படங்கள் : தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு