Published:Updated:

ஒரு வேடத்துக்கு இருவர்...‘சதி லீலாவதி’யில் சதி!... நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம்-14

ஒரு வேடத்துக்கு இருவர்...‘சதி லீலாவதி’யில் சதி!... நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம்-14
ஒரு வேடத்துக்கு இருவர்...‘சதி லீலாவதி’யில் சதி!... நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம்-14

ஒரு வேடத்துக்கு இருவர்...‘சதி லீலாவதி’யில் சதி!... நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம்-14

நாடகத்திலிருந்து திரைப்பட உலகுக்குள் நுழையும் பெரும் கனவு, அந்நாளைய நாடக நடிகர்களைப் போலவே எம்.ஜி.ஆர் சகோதரர்களுக்கும் இருந்தது. பல போராட்டங்களுக்கிடையில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றார்கள். அதற்கு நுாறு ரூபாய் சம்பளமும் பெற்றார்கள் ஆனால் அதைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்ததா?... அதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன...தொடர்ந்து பேசுகிறார் எம்.ஜி.ஆர்.

”செல்லும் வழியில் நான் தமயனாரிடம் கேட்டேன். “ஏன் அண்ணே! இது உண்மையான நோட்டா இருக்குமா? சரியான நூறு ரூபாய் நோட்டுதானே?“ என்று.

'இதுக்கு முன்னாலே நான் எங்கேடா பார்த்தேன்?' என்று சொன்ன அண்ணன், 'ஆமாம் உனக்கு ஏன் திடீர் சந்தேகம்?' என்று கேட்டார்.
'ஏன் அண்ணே நீங்க கவனிக்கலையா? நூறு ரூபாய் முன்பணம் கொடுத்தாரே! அவர் போட்டுக்கிட்டிருந்த சட்டையிலே கைப் பொத்தான் கிடையாது. கயிறுதான் கட்டியிருந்தாரு. பாத்தீங்க இல்லே? அதனால்தான் சந்தேகம். நூறு ரூபாய் முன்பணம் கொடுக்கிறவர் ஏன் பொத்தான்கூடப் போட்டுக்காம கயிற்றைக் கட்டிக்கிட்டிருக்காரு?' என்றேன்.

'நானும் கவனிச்சேன். இந்தக் கயிறு கட்டினதுனாலே அவரு முதலாளியா இருக்கக் கூடாதுங்கறது இல்லையே! நிறைகுடம் தளும்பாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஒன்றுமில்லாதவங்கதானேடா வெளிச்சம் போடணும்! நாமெல்லாம் நல்ல சட்டை, வேட்டியில்லாம போனா கேலி பண்ணுவாங்க! அதுக்காக எல்லாம் சரியாப் போட்டுக்கிட்டுப் போகவேண்டியிருக்கு. அவங்களை யாரு கேள்விகேட்க முடியும்? யாரு கேலி பேச முடியும்?' என்றார் அண்ணன். அதுவும் சரியான நியாயமாகத்தான் எனக்குப்பட்டது.

வீட்டுக்குப்போய் தாயாரிடம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தோம். அப்போது இரவு நேரம். அவர்கள் நோட்டைப் பார்த்தார். பார்க்கும்போதே என்னுடைய சந்தேகத்தை அண்ணன் தாயாரிடம் சொன்னார். தாயார் உடனே விளக்கு வெளிச்சத்தில் பார்த்தார்கள். 'நீரோட்டம் இருக்கேடா! எப்படிப் பொய்யாக முடியும்?' என்று சொல்லிவிட்டார்.

அந்த நோட்டை அப்படியே எடுத்துத் தாயார் அவர்கள் எப்போதும் வணங்கும் விஷ்ணுவின் படத்தடியில் வைத்துவிட்டு, 'நாளைக் காலையில் இதைப்போய் மாத்திக்கிட்டு வரலாம்' என்றார். அந்த இரவெல்லாம் எனக்குத் தூக்கமே இல்லை. வீடு நிறையப் பணமாக இறைந்து கிடப்பதுபோல ஒரு பிரமை. நடப்பதற்குக்கூட இடமில்லாதபடி வெள்ளி ரூபாய்களாகக் குவிந்து கிடப்பது போல எனக்குத் தெரிந்தது.

தூங்கினேனோ, இல்லையோ தெரியாது. விடிந்து எழுந்தேன். உடனே நாடகக் கம்பெனிக்குச் சென்று எல்லோரையும் பார்க்கவேண்டுமென்ற ஆசை. என் சக நண்பர்களிடம் போய் இந்த முன்பணம் சமாச்சாரத்தைச் சொல்ல வேண்டுமென்று பேராவல்.

எப்படித்தான் தாயார் என் மனக்குறிப்பைத் தெரிந்துக் கொண்டார்களோ, அறியேன். சட்டையைப் போட்டுக் கொண்டு நான் புறப்பட்டபோது அழைத்தார்கள்; சென்றேன்.

“நான் சொல்ற வரைக்கும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது. நாடகக் கம்பெனி முறையெல்லாம் தெரியுமில்லே? ஜாக்கிரதை!” என்றார்கள். எவ்வளவு பெருமையோடு புறப்பட்டேனோ அவ்வளவுக்கவ்வளவு தாழ்ந்து, குறுகி, சோர்ந்து ஒரு மூலையில் போய் உட்கார்ந்தேன்.

ஒருநாள் நாடகத்தின்போது நாடகக் கொட்டகைக்குப் போனேன். என் நண்பர்களையெல்லாம் பார்த்தேன். என் தோழர்கள் எவ்வித மாற்றத்தோடும் இல்லை; எப்போதும் போலத்தான் இருந்தார்கள். ஆனால், என் கண்களுக்கு அவர்கள் என்னைவிடத் தகுதி குறைந்தவர்களாகத் தோன்றினார்கள்! ஏனென்றால் நூறு ரூபாய் முன்பணம் வாங்கினவன் அல்லவா நான்!
அவர்கள் என்னிடம் ஏதோ ஒரு மாற்றத்தைக் கண்டுவிட்ட நிலையில் ஏதேதோ கேட்கத் தொடங்கினார்கள்.
நான் சொல்லவும் முடியாமல், மனதிலே வைத்துக்கொள்ளவும் முடியாமல் தடுமாறினேன். நெருங்கிய நண்பன் ஒருவனிடமாவது சொல்லலாமா என்று ஆசை. 

தாயாரின் கட்டளையை நினைத்தவுடன் ஆசை எப்படி பறந்தோடிற்றோ எனக்குத் தெரியாது. ஒருநாள் எங்கள் நாடகத்தின்போது காலஞ்சென்ற ஜட்ஜ் எம்.வி.மணி ஐயர் என்பவர் கொட்டகைக்கு வந்தார். எங்கள் நாடகக் கம்பெனியிலேயே நாங்கள் சேர்வதற்கு முன்பு நடித்துக் கொண்டிருந்தவர் அவர். ஜட்ஜாக நடித்து மக்களால் பாராட்டப்பட்டதன் காரணமாக ‘ஜட்ஜ் எம்.வி. மணி ஐயர்’ என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது. அவரிடம் காளி என். ரத்தினம் அவர்கள், 'ஏன் மணி எங்கே வந்திருக்கே?' என்று கேட்டார்.

“சினிமாப் படத்திலே நடிக்க வந்திருக்கேன். உங்க ‘பதிபக்தி’ மாதிரிதான்; சதிலீலாவதி. அந்தப் படத்திலே நடிக்க வந்திருக்கேன்” என்றார். எங்களுக்கு ஒரே பயம். எங்கே நாங்கள் ஒப்பந்தமாகியிருக்கும் விஷயத்தைச் சொல்லி விடுவாரோ என்ற திகில். ஆனால், அவர் மேலும் பேசுவதற்குள் டி.ஆர்.பி. ராவ் அவர்கள் அவரைக் கேட்டார். “நீ என்ன வேஷம் போடப் போகிறாய்?” என்று 'துப்பறியும் வேடம்' என்றார் அவர். அவ்வளவுதான்! என் தலை சுற்றுவதுபோல் இருந்தது.  அந்த வேடத்துக்குத்தானே சம்பளம் பெற்று வந்திருக்கிறோம். “சரி இந்த வேடம் நமக்குக் கிடைக்காதோ என்னவோ, என்ன ஆனாலும் மறுநாள் ஆசிரியரைப் பார்த்து விடுவது” என்று முடிவெடுத்தேன்.

ஜட்ஜ் எம்.வி. மணி இந்தச் சேதியைச் சொன்ன பிறகு சிறிது நேரத்துக்கு முன்னால் எந்த நண்பர்கள் என்னைவிடத் தாழ்ந்தவர்களாக என்முன் தெரிந்தார்களோ, அதே நண்பர்கள் இப்போது என்னைவிட உயர்ந்தவர்களாகத் தெரிந்தார்கள் எனக்கு! மனிதனுடைய மனம் எத்தனை பலவீனமானது என்பதை அப்போது தான் ஒரு சிறிது நேரத்தில் புரிந்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மனதின் உள்ளம் மிகக் கடினமானது, வலிவுமிக்கது, எதனாலும், யாராலும் கலங்கவோ, கலக்கப்படவோ முடியாத சக்தி வாய்ந்த ஒன்று என்பது பல புராணக் கதைகள் மூலமாகவும், வீரப் பெருமக்களின் சரிதை மூலமாகவும், என் தாயின் வாய்மொழி வழியாகவும் ஓரளவு புரிந்துக்கொண்ட முடிவாகும்.

இளகிய மனம் படைத்தவர்கள் பலரை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். ஏன், என் தாயார் செய்த பல அருஞ்செயல்களை  மகனான நான் கண்முன் அறிந்து உணர்ந்திருக்கிறேன்.

இந்த சம்பவம் சில ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்ததொரு நிகழ்ச்சிக்கு என் மனம் என்னை ஈர்த்துச் செல்கிறது. இங்கே அதை வெளியிடவும் விரும்புகிறேன்.

அந்தச் சமயம் நாங்கள் குடியிருந்த வீட்டில் இன்னும் சில குடித்தனக்காரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் ‘டீ’ விற்கும் தொழிலாளி; அவருக்கு தொழில் செய்யும் உபகரணங்கள் சேதமாகிவிட்டது ஒருநாள். தாயாருக்கு இந்தச் செய்தி தெரியவந்தது. தொழில் செய்யத்துடிக்கும் அந்த எளியவர்களுக்கு அதற்குத் தேவையான கருவி இல்லாமல் பிழைப்பே கெட்டுப்போகிறதே என்று அவர்களின் அல்லலை நினைத்து அனுதாபத்தோடு வேதனையும் அடைந்தார். அந்தக் காலத்தில் நாங்கள் உயர்ந்த நிலையில் வசதியோடு இருந்தோம் என்று யாரும் தப்புக்கணக்குப் போட்டுவிட வேண்டாம். எப்படியோ சிரமத்துடன் ஒருவிதமாய்க் காலம் ஓடிக்கொண்டிருந்து பட்டினி கிடக்கவில்லை என்பதுதான் அப்போதைய நிலைமை.

அந்தத் தொழிலாளருக்கு உதவுவேண்டும் என்ற நல்ல எண்ணம் தாயாருக்குப் பிறந்தது. எண்ணம் பிறந்தால் போதுமா! செயல்படுத்துவதற்கு வாய்ப்பு அதாவது, பணம் வேண்டாமா? பணம் தான் இல்லையே!

நாங்கள் பற்று வரவுக் கணக்கில் கடையில் வாங்கும் உணவுப் பண்டங்களை வேண்டுமானால் கொடுக்கலாம். எத்தனை நாளைக்கு முடியும்? அப்படியும் கொடுத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் பின்புதான் கடைசியாக முடிவுக்கு வந்து எங்களுக்குக்கூடத் தெரியாமல் பணம் ஏற்பாடு செய்து அவருக்குத் தேவையான அந்தப் பணத்தைக்கொடுத்திருக்கிறார். இதன்பின் அந்தக் குடும்பத்தினர் டீ விற்பதையும், சம்பாதிப்பதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் எப்படித்தான் அவர்களின் வாழ்க்கை நடந்து வருகிறது என்பது தெரியாது.

ஒருநாள் வீடு திரும்பிய நேரத்தில் ஆறு மாதக் கடன்காரன் என்று அழைக்கப்படுகிற ஈட்டிக்காரனுக்கும், தாயாருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கக் கண்டோம்.

ஒன்றுமே புரியவில்லை. எங்களுக்கு ஈட்டிக்காரன் என்றாலே பிடிக்காது. அவன் பயங்கரமானவன் என்ற எண்ணமுள்ளவர்கள் நாங்கள். அவன் வீட்டுக்கு வருவதே தலைகுனிவு என்பதும் எங்கள் முடிவு. அப்படிப்பட்ட ஒருவன் என் தாயிடம் வந்து 'பணத்தை வைத்துவிட்டு மறுவேலை பார்' என்றால் அதை எப்படி நாங்கள் சகித்துக் கொள்வோம்.  அதுவரை நாங்கள் தாயாரை எதிர்த்துப் பேசியதோ, முரண்பாட்டுடன் பார்த்ததோ கிடையாது. என்னவென்று விசாரித்தோம். எங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பார்த்துப் புரிந்துக்கொண்ட தாயார் தம் கையில் போட்டிருந்த தங்கக் காப்பைக் கழற்றி அவன் மேல் விட்டெறிந்து 'இதை எடுத்துக் கொண்டு போய் விற்று உன் பணம்போக மீதத்தைக்கொண்டு வந்து கொடு' என்றார்கள்.

இதைச் சிறிதும் எதிர்பார்க்காத அந்த ஈட்டிக்காரன், 'நாளைக்கு வரேன். நீங்களே நாளைக்குக் கொடுங்க' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். அதோடு காலையில் 10 மணிக்கு வந்துவிடுவேன் என்று எச்சரிக்கையும் செய்தான். அவன் போனதும் நாங்கள் தாயாரைப் பார்த்தோம். அழுகையோடும்; ஆத்திரத்தோடும் எங்கள் வார்த்தைகள் வெளிப்பட்டன. தாயார் அவர்கள் சிறிதும் சலனமுறவில்லை. 'நான் கைநீட்டி வாங்கினேன் திருப்பிக் கொடுக்கலன்னா அவன் திட்டத்தானே செய்வான்.' 

'எதுக்காக வாங்கனும்? அவன் கிட்டே எதுக்காக வாங்கினீங்க?'- கொஞ்சம் அதிகமாகவே வார்த்தைகள் எங்களிடமிருந்து வெளிவந்தன. எதுக்காகவோ வாங்கினேன்; ஏன் எனக்காகத்தான் வாங்கினேன்! அதை யார்கிட்டயும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.' 
இழிவான, கேவலமான வார்த்தைகள் அல்ல. 'நீங்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று கண்டிக்கும் வார்த்தைகள்'. இதுவரை அவர்கள்தான் எங்களைக் கேட்டதும், கண்டிப்பதும் வழக்கம்.

இப்போது நாங்கள் கேட்கும் படியாக நேர்ந்ததை எங்களாலேயே பொறுத்துக் கொள்ளமுடியாதபோது தாயாருக்கு அதை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்! ஆனாலும் கடைசி வரையில் அவர்கள் எதற்குப்பணம் வாங்கினார்கள் என்பதைத் தெரிவிக்கவே இல்லை. இந்தக் குழப்பத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளியின் மனைவி எங்களிடம் வந்து அழுதபடியே உண்மையைச் சொன்னார். 

அவர்களுக்குக் கெட்டிலுக்குப் பணம் தருவதற்காகவும், வியாபாரம் நன்றாக நடப்பதற்காகவும் அவர்கள் மீது ஈட்டிக்காரனுக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால் என் தாயார் தன் பேரில் கடன் வாங்கி அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவர்களால் திருப்பிக்கொடுக்க முடியவில்லை. வரவுக்கும், செலவுக்கும் தான் சரியாக இருக்கிறதே! எப்படிக் கொடுப்பார்கள். அதனால் தாயார் ஈட்டிக்காரனுக்குப் பதில் சொல்லக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட இளகிய மனத்தையும் நாங்கள் கண்டிருக்கிறோம்.

மேலே நான் குறிப்பிட்ட நிகழ்ச்சி என்னுடைய பதவிப் போராட்ட காலத்துக்குப் பின்னால் சில ஆண்டுகள் கழித்து நடந்ததுதான் என்றாலும் இன்றைய சூழ்நிலையில் இதை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று.

எப்படியோ ஆசிரியரின் மனத்தை எங்கள் பக்கம் திருப்பி எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்து கொண்டிருந்தது.

- எஸ்.கிருபாகரன்

அடுத்த கட்டுரைக்கு