Published:Updated:

சிறையில் இருக்கும் சசிகலா, அ.தி.மு.க தொண்டர்களுக்குக் கடிதம்!

சிறையில் இருக்கும் சசிகலா, அ.தி.மு.க தொண்டர்களுக்குக் கடிதம்!
சிறையில் இருக்கும் சசிகலா, அ.தி.மு.க தொண்டர்களுக்குக் கடிதம்!

சிறையில் இருக்கும் சசிகலா, அ.தி.மு.க தொண்டர்களுக்குக் கடிதம்!

சிறையில் இருக்கும் சசிகலா, அ.தி.மு.க தொண்டர்களுக்குக் கடிதம்!

அ.தி.மு.க.வைக் காப்போம், அ.தி.மு.க அரசை நிலைநிறுத்துவோமென உறுதியேற்க வேண்டும் என, தொண்டர்களுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா கடிதம்மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா, பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மறைந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், நாளை வருகிறது. இதையொட்டி, அ.தி.மு.க தொண்டர்களுக்கு சசிகலா எழுதியுள்ள கடிதம் வருமாறு:

''புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, புரட்சித் தலைவி அம்மாவின் உள்ளமெல்லாம் நிறைந்திருந்த, என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புக்களே!

`அம்மா' என்று கோடானு கோடி மக்கள் பாசத்தோடு அழைத்து, தங்களுக்காக மண்ணுலகில் வந்துதித்த வானத்து தேவதை என்று போற்றிக் கொண்டாடிய நம் அன்புக்குரிய அம்மாவின் 69-வது பிறந்த நாள், 24.2.2017. ஒவ்வொரு ஆண்டும் நாம் அனைவரும் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்த இந்த இனிய நாள், இந்த ஆண்டு இத்தனை சோதனை மிகுந்ததாக அமைந்திடும் என்று நாம் ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனாலும், காலத்தின் சுழற்சியில் இத்தகைய ஒரு வேதனையை நாம் சந்தித்துத் தீரவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது. எத்தனை துயர் வந்தாலும், எத்தனை இடர் வந்தாலும் அவற்றை எதிர்த்துநின்று துணிவுடன் போராடி, தனது மதிநுட்பத்தால் வென்று காட்டும் வாழ்க்கையை வாழ்ந்து, நமக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கியவர் நம் புரட்சித் தலைவி அம்மா. இன்று அ.தி.மு.க-வுக்கும், கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும் இடர்மிகு சூழலை அம்மாவின் இதயம்கொண்டு வெற்றி காண்பதுதான் அம்மாவுக்கு  நாம் செய்யும் நன்றிக் கடன்.

தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு என்றும்; தான் வாழ்வதே மக்களுக்காகத்தான் என்றும்; `மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்றும் சித்தரித்து, நம்மிடையே வாழ்ந்த அம்மாவின் பிறந்தநாள் விழாக்களில், கடந்த காலங்களில் நாம் எப்படி ஏழை, எளிய மக்களுக்காக, கொடை உள்ளத்தோடு எண்ணற்ற நலத் திட்ட உதவிகளை வழங்கினோமோ அதைப் போலவும், இன்னும் அதைவிட கூடுதலாகவும் மக்களுக்கு இந்த ஆண்டும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கழகத்திற்கு வலுவூட்டும் செயல்களைச் செய்தும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆன்மா இளைப்பாறும் வகையில், நம்முடைய பணிகள் அமைந்திட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நாளில், அம்மா நம்மோடு இல்லையே என்ற எண்ணம் என்னை மென்மேலும் துயரத்திற்கு உள்ளாக்குகிறது. 33 ஆண்டுகள் அவருடைய பிறந்தநாளை, அவர் கூடவே இருந்து கொண்டாடிய நான், இந்த ஆண்டு அவர் நினைவாக தனிமையில் துயருற்று இருக்கிறேன். என் இதயமெல்லாம் அம்மாவின் நினைவே நிரம்பி இருக்கிறது. மகத்தான மக்கள் தலைவர் அவர்.  அம்மாவை ஒரு நொடி சந்தித்தவர்கூட வாழ்நாள் முழுவதும் அவரை நினைத்திருப்பார். அத்தகைய ஆளுமையும், கள்ளமில்லா வெள்ளை உள்ளமும் படைத்த வள்ளலின் வாரிசு நம் அம்மா. காலமெல்லாம் அம்மா புகழ் பாடிய வண்ணம் நம்முடைய  வாழ்நாள் இருந்திட வேண்டும் என்றுதான் நான் ஒவ்வொரு நொடியும் நினைக்கிறேன். அம்மாவின் அன்பையும், பாசத்தையும், உழைப்பையும் எண்ணி, எண்ணி வேதனைக் கண்ணீர் வடிக்கிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அமைத்த ஆட்சிக்கு சோதனை ஏற்பட்டு, திசை அறியாது கழக உடன்பிறப்புகள் கலங்கி இருந்த நேரத்தில் வழிகாட்டும் ஒளி விளக்காகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் வந்துதித்தார் நம் அம்மா.   எதிரிகளும், துரோகிகளும் அ.தி.மு.க-வையும், கழக அரசையும் வீழ்த்த நினைத்த நேரத்தில், அம்மாவின் ஆன்மா நம்மோடு கூட இருந்து நம்மை வழிநடத்தி, மக்களுக்கான அரசாகத் திகழும் நம் அம்மாவின் கழக அரசை நிலைநிறுத்தி இருக்கிறது. அம்மாவின் புகழ் நிலைத்திருக்கும் வண்ணம் செயல்பட வேண்டும் என்ற உறுதியோடு, அவரது 69-வது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அமைந்திடட்டும். ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள்; இயன்ற இடங்களில் எல்லாம் அம்மா அவர்களின் மனதுபோல, அறுசுவை உணவுகளை அன்னதானமாகச் செய்யுங்கள்; கழகத்தின் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கட்டும்.  எல்லாவற்றையும் விட கழக உடன்பிறப்புகள் வாழும் இடங்களில் எல்லாம் நம் அம்மா அவர்களின் திருஉருவப் படங்களை அழகுற பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, மலர் அஞ்சலி செலுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு